சென்னையை அடுத்திருக்கும் தாம்பரம், மாடம்பாக்கம் பகுதியில் உயர்ரக கஞ்சா விற்பனை அதிகரித்திருப்பதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸார் ரகசியமாக ஆய்வு நடத்தினர். அதில், சந்தேகத்தின் அடிப்படையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்திருக்கின்றன.

பொறியியல் பட்டதாரியான சக்திவேல் டிரேடிங் தொழில் செய்துவந்திருக்கிறார். ஒரு கட்டத்தில், தான் சம்பாதித்த அனைத்துப் பணத்தையும் மொத்தமாக டிரேடிங்கில் இழந்திருக்கிறார் சக்திவேல். இதையடுத்து, குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க நினைத்த அவர், யூடியூப் வழியாக உயர்ரக கஞ்சா வளர்ப்பது எப்படி என்று வீடியோ பார்த்துத் தெரிந்துகொண்டார். மேலும், அந்தக் கஞ்சா செடி வளர்க்கத் தேவையான பொருள்களை கிரிப்டோகரன்சி மூலமாக இணையத்தில் வாங்கியிருக்கிறார்.
இதற்காக மாடம்பாக்கத்தில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து, வீட்டிலும் சூரிய ஒளி படாமல் ஏசி அறையில், செடிக்குத் தேவையான வெளிச்சத்துக்கு எல்.இ.டி பல்பு, சரியான நேரத்தில் தண்ணீர் தெளிக்க மோட்டார் பம்பு என உயர் தொழில்நுட்பத்தில் உயர்தர கஞ்சா செடியை தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து வளர்த்திருக்கிறார். மேலும், அந்த கஞ்சாவை அங்கேயே உலரவைத்து அதைப் போதை ஸ்டாம்புகளாகத் தயாரித்து விற்பனை செய்திருக்கிறார் சக்திவேல்.
இந்த விற்பனைக்காக சியாம் சுந்தர், நரேந்திர குமார், ஸ்ரீகாந்த் ஆகிய மூவரை ஈடுபடுத்தியிருக்கிறார். உயர்தர ரகத்தைச் சேர்ந்த இந்தக் குறிப்பிட்ட வகை கஞ்சாவை ஒரு கிராம் 1,500 ரூபாய் வரை விற்பனை செய்திருக்கிறது இந்தக் கும்பல். பெரும்பாலும் கேளிக்கை விடுதிகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடமிருந்து தனிப்படை போலீஸார் 10-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளையும், 350-க்கும் மேற்பட்ட போதை ஸ்டாம்புகளையும், மூன்று கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.