நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் ஒன்றியத்திலுள்ள ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த மார்ச் 11-ம் தேதி அருகிலுள்ள வயலில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில், மாலை வரை அவர் வீடு திரும்பாததால், அவருடைய கணவர் வயலுக்குச் சென்று பார்த்தபோது, சீமைக்கருவேல மரக்காட்டுக்கு அருகிலிருந்த சிறு வாய்க்காலில் அந்தப் பெண் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஜேடர்பாளையம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். அதன் பிறகு, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு அந்த இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்ததாக, சிறுவன் ஒருவனைப் பிடித்தனர்.

இந்த நிலையில், அந்தப் பெண்ணின் உறவினர்கள், 'இந்தக் கொலையில் இன்னும் இரண்டு பேருக்குத் தொடர்பிருக்கிறது. அவர்களைக் கைதுசெய்ய வேண்டும்' என்று போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக சில அமைப்புகளும் போராட்டம் நடத்தின. மேலும், 'இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணைக்கு மாற்ற வேண்டும்' என்று அந்தப் பெண்ணின் உறவினர்கள் மனு அளித்து வந்தனர்.
அதனடிப்படையில், இளம்பெண் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம் செய்து, டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதனால், அந்தப் பெண்ணின் உறவினர்கள், 'இந்த வழக்கில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது' என்று தெரிவித்தனர்.