அலசல்
Published:Updated:

அறுத்து போட்டுடுவேன்...! - கஞ்சா ரௌடியால் கதிகலங்கும் தக்கோலம்...

தக்கோலம்
பிரீமியம் ஸ்டோரி
News
தக்கோலம்

கஞ்சா போதையில சுத்துற இளவட்ட பசங்க, வியாபாரிகள்கிட்ட ‘இருபது ரூபாய் கொடு; முப்பது ரூபாய்க் கொடு’னு டெய்லி வசூல் பண்றாங்க.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்துக்கு அருகிலுள்ள தக்கோலம் கீழ்பஜாரில் மாமூல் கேட்டு அட்டூழியம் செய்யும் கஞ்சா ரெளடிக்கு பயந்து ஒருவர் கடையையே பூட்டியிருப்பது வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

‘சுபம் டிரேடர்ஸ்’ என்ற பெயரில் கட்டுமானப் பொருள் விற்பனை செய்துவந்த முத்துராமலிங்கம் என்ற அந்த வியாபாரி, ‘கஞ்சா போதையில் உலாவரும் ரௌடிகளால் இந்தக் கடை காலவரையின்றி மூடப்படுகிறது’ என அவரது கடை ஷட்டரில் எழுதி ஒட்டியிருப்பது, நடவடிக்கை எடுக்காத உள்ளூர் போலீஸாருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

தக்கோலம்
தக்கோலம்

இது குறித்து நம்மிடம் பேசிய வியாபாரி முத்துராமலிங்கம், ‘‘தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த நான் ஏழு வருஷமா இங்கே கடை நடத்துறேன். கஞ்சா போதையில சுத்துற இளவட்ட பசங்க, வியாபாரிகள்கிட்ட ‘இருபது ரூபாய் கொடு; முப்பது ரூபாய்க் கொடு’னு டெய்லி வசூல் பண்றாங்க. வேலையே செய்யாம கூலியில் பங்கு கேட்டு, லோடு ஏத்தி இறக்குற தொழிலாளர்கள் வயித்துலயும் அடிக்கிறாங்க.

மார்ச் 11-ம் தேதி காலையில, கஞ்சா போதையில கடைக்கு வந்த ஆகாஷ் என்ற 23 வயசு பையன், ‘என்கிட்ட சொல்லாம நீயே எப்பிடிடா லோடு ஏத்தலாம்?’னு சொல்லி லோடுமேன் பூபதியை சரமாரியா அடிச்சுட்டான். தடுக்கப்போன என்னையும் கத்தியால குத்த வந்தான். உடனே, தக்கோலம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் செஞ்சேன். ‘இதோ வர்றேன்’னு சொன்னவங்க, ரௌடியிசம் பண்ணின அந்தப் பையன்கிட்டயே, நான்தான் புகார் செஞ்சேன்னு போட்டுக்கொடுத்துட்டாங்கபோல.

தக்கோலம்
தக்கோலம்

நான் ஸ்டேஷன்லருந்து கடைக்கு வர்றதுக்குள்ள அந்தப் பையன் என்னை வழிமறிச்சு, ‘என்மேலயே புகார் தர்றியா... இங்கேயே உன்னை அறுத்துப்போட்டுடுவேன்’னு மிரட்டிட்டுப் போனான். நான் மறுபடியும் போலீஸ்காரங்ககிட்ட புகார் பண்ணுனதையும் சொல்லிட்டாங்கபோல. என் கடைக்குள்ளே புகுந்து பொருள்களை அடிச்சு நொறுக்குனவன், சிசிடிவி கேமராவையும் கல்லெறிஞ்சு உடைச்சுட்டான்.

உயிர் பயத்துலதான் பொண்டாட்டி, புள்ளைங்களோட சொந்த ஊருக்கே போயிடலாம்னு கிளம்பிட்டேன். இப்ப வந்து, ‘அந்தப் பையனை பிடிக்கப்போனோம். அவன் சட்டையைக் கிழிச்சுக்கிட்டு கத்தியால அவன் உடம்பையே கீறிக்கிட்டான். கொஞ்சம் பொறுங்க’னு போலீஸ்காரங்க சமாதானம் சொல்றாங்க. இங்க இருந்தா கண்டிப்பா அவன், என்னைக் கொன்னுடுவான். அப்பவும் இந்த போலீஸ்காரங்க வேடிக்கைதான் பார்ப்பாங்க’’ என்றார் கோபமாக.

தக்கோலம்
தக்கோலம்

தக்கோலம் காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு எஸ்.ஐ சீனிவாசனிடம் கேட்டபோது, ‘‘ஆகாஷைத் தேடிக்கிட்டிருக்கோம். அவன்மேல பழைய வழக்குகள் எதுவும் இல்லை. இது கிராமப் பகுதி. கஞ்சா புழக்கமே கிடையாது. தனிப்பட்ட பிரச்னையை சட்டம் ஒழுங்கு பிரச்னையாகக் காட்ட சிலர் சீன் கிரியேட் பண்றாங்க’’ என்றார்.

இந்தப் பிரச்னையில் தி.மு.க புள்ளிகள் இருவருக்கும் தொடர்பிருப்பதாக காதைக் கடிக்கிறார்கள் போலீஸார்!