அலசல்
Published:Updated:

பினாமிகளின் வீடுகள் டார்கெட்... தியேட்டர் மாஃபியா... கோவையைக் கலங்கடிக்கும் ரௌடி நெட்வொர்க்!

கொலை
பிரீமியம் ஸ்டோரி
News
கொலை

கடந்த சில நாள்களுக்கு முன்பு, கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டுவந்த காமராஜபுரம் கௌதம், சஞ்சய் ராஜா உள்ளிட்ட ரெளடிகள் சிலர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர்

‘தொழில்கள், தொழிலாளர்கள், தொழிற்சாலைகள்...’ என்று அறியப்பட்ட கோவையின் அடையாளம் சமீபகாலமாக ‘துப்பாக்கி... கஞ்சா... ரௌடிகளின் கேங் வார்’ என உருமாறிவருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அடுத்தடுத்த கொலை, துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் கோவையின் ரௌடி நெட்வொர்க்குகளையும், அவர்களுக்கிடையிலான போதை, ஆயுதம், கேங் வார் மோதல்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.

கோவையில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி, சத்யபாண்டி என்ற ரெளடி துப்பாக்கியால் சுடப்பட்டும், வெட்டியும் கொல்லப்பட்டார். அடுத்த நாளே கோவை நீதிமன்றம் வளாகத்துக்கு அருகே கோகுல் என்ற இளைஞர் பட்டப்பகலில் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இரண்டு கொலைகளுக்கும் நேரடித் தொடர்பு இல்லையென்றாலும், அவற்றின் பின்னணியிலிருந்தது ரௌடிகளின் கேங் வார். இந்த கேங் வார் மோதல், கொலைகளுக்குப் பிறகுதான் கோவையில் ரெளடிகள் குறித்த பேச்சுகள் அதிகரித்தன. அதையடுத்து ஒருசிலர் கைதும் ஆனார்கள்.

கொலை
கொலை
கொலை
கொலை

கடந்த சில நாள்களுக்கு முன்பு, கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டுவந்த காமராஜபுரம் கௌதம், சஞ்சய் ராஜா உள்ளிட்ட ரெளடிகள் சிலர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து பெங்களூரில் பதுங்கியிருந்த காமராஜபுரம் கௌதமின் கூட்டாளிகள் ஏழு பேரையும் போலீஸ் கைதுசெய்தது. ஆனால், “இவர்களெல்லாம் சாதாரண சில்லறை ரௌடிகள். முக்கிய கேங்ஸ்டர்களாக வலம்வருபவர்களைப் போலீஸின் நிழல்கூட நெருங்கவில்லை. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையில் மிகப்பெரிய நெட்வொர்க்குகளை அமைத்துக்கொண்டு, கார், பங்களா, விமானப் பயணம், வெளிநாடு சுற்றுலா... என வசதியாக வாழும் ரௌடிகள் கோவையில் அதிகரித்திருக்கிறார்கள். இந்தப் பணக்கார கேங்ஸ்டர்கள்மீது கைவைக்கவே தயங்குகிறது போலீஸ்” என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள்.

கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “தற்போது, துப்பாக்கிகளுடன் கேங் வாரில் ஈடுபடுபவர்களில் முக்கியமான ஆள் தில்ஜித் என்கிற டில்லி. கேரளாவைப் பூர்வீகமாகக்கொண்ட இவர், கட்டப்பஞ்சாயத்து முதல் போதைப்பொருள் வியாபாரம் வரை பெரிய நெட்வொர்க் வைத்திருக்கிறார். ‘மார்க்கண்டேய’ நடிகரின் பெயர்கொண்ட சினிமா விநியோகஸ்தர் ஒருவர்தான் இவரைப் பின்னாலிருந்து இயக்குகிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கோவை சூலூரிலுள்ள இலைக் கட்சியின் பினாமி ஒருவரின் வீட்டில், கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது டில்லி டீமுக்குத் தெரியவந்தது. ஒன்பது ரௌடி கேங்குகளுடன் அந்த வீட்டுக்குள் நுழைந்த டில்லி டீம், கோடிக்கணக்கான பணத்தை அள்ளியது. இதே பாணியில் இன்னும் சில அரசியல் பினாமிகளின் வீடுகளிலும் கைவரிசை காட்டி, தனக்கென ஒரு பெரிய ரௌடி நெட்வொர்க்கை உருவாக்கிக்கொண்டார் டில்லி. அதைத் தக்கவைத்துக்கொள்ள வடஇந்தியா வரை தொடர்புகளை விரித்துக்கொண்டு, துப்பாக்கிக் கலாசாரத்தையும் கையிலெடுத்திருக்கிறது டில்லி டீம்.

ரௌடிகள்
ரௌடிகள்

டில்லியை பின்னாலிருந்து இயக்கிவரும் ‘மார்க்கண்டேய’ பிரமுகர் கோவையின் தியேட்டர் மாஃபியாவாக உருவெடுத்திருக்கிறார். இவருக்குச் சொந்தமாக இரண்டு பெரிய தியேட்டர்கள் கோவையில் இருக்கின்றன. அதோடு நகரின் மையத்தில் மூடப்பட்ட நிலையிலிருக்கும் தியேட்டர் ஒன்றை அபகரிக்கவும் இவர் முயல்வதாகக் கூறப்படுகிறது. அந்தப் பஞ்சாயத்தில் எதிர்த்தரப்பினரோடு நெருக்கமாகச் செயல்பட்டதால்தான் சத்தியபாண்டி கொடூரமாகக் கொல்லப்பட்டார். இப்போதும் கோவை தியேட்டர் உரிமையாளர்கள் ‘மார்க்கண்டேய’ பிரமுகர் கிழித்த கோட்டைத் தாண்டுவதில்லை. சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ‘மூன்றெழுத்து’ இளம் நடிகர் ஒருவருடன் மிகவும் நெருக்கமானவர்போலக் காட்டிக்கொள்வார் ‘மார்க்கண்டேய’ பிரமுகர். ஆளுங்கட்சியிலும் இவருக்குச் செல்வாக்கு இருப்பதால், எந்த வழக்கிலும் சிக்க மாட்டார்.

தில்ஜித்
தில்ஜித்

அதேசமயம் டில்லிமீது சரவணம்பட்டி, ரத்தினபுரி, ஆர்.எஸ்.புரம், ரேஸ் கோர்ஸ், சூலூர், பெரியநாயக்கன் பாளையம், பல்லடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், நிதி மோசடி உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையிலிருக்கின்றன.

தற்போது சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகள் காரணமாக சென்னை, புனேவில் தங்கி தன் நெட்வொர்க்கை இயக்கிவருகிறார் டில்லி. சமீபத்தில், இவர்களின் உள்வட்டத்தைச் சேர்ந்த தியேட்டர் அதிபர் ஒருவரின் உறவினரை போலீஸ் கைதுசெய்திருக்கிறது. அதனால் பாதுகாப்புக்காகத் தன் நெட்வொர்க்கைச் சேர்ந்த முக்கிய நபர்களை இலங்கையில் பதுங்கிக்கொள்ளச் செய்திருக்கிறது டில்லி டீம். இலங்கையிலும் இவர்களுக்குச் செல்வாக்கு அதிகமிருக்கிறது. அதனால்தான் கோவையில் நூற்றுக்கணக்கான ரெளடிகள் கைதுசெய்யப்பட்டும் கஞ்சா, உள்ளிட்ட போதை சமாசாரங்களின் நடமாட்டத்தைத் தடுக்க முடியவில்லை. ஒருவேளை இந்த டில்லி, ‘மார்க்கண்டேய’ பிரமுகர்களை போலீஸ் நெருங்கினால், கோவையில் அதிகரித்துவரும் சட்டவிரோதச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டு அமைதி திரும்பும்” என்றார் விரிவாக.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

இந்த விஷயங்கள் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம். “தில்ஜித் என்கிற டில்லி கடந்த சில ஆண்டுகளாகவே கோவைப் பக்கம் வரவில்லை. சென்னையில் இருந்தபடியே தன் நெட்வொர்க்கை இயக்குவதாக விசாரணையில் தெரியவருகிறது. அவரைக் கைதுசெய்ய தனிப்படையினர் முயன்றுவருகிறார்கள். பிரச்னைக்குரிய தியேட்டரை வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சந்தேகத்துக்குரிய மற்ற நபர்களின் நடமாட்டத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். இவர்கள் அனைவரும் சோஷியல் மீடியாவில் போலிக் கணக்குகளை உருவாக்கி அதன் மூலமாக செய்திப் பரிமாற்றம் செய்துகொள் கிறார்கள். அவற்றை ட்ராக் செய்துவருகிறோம். தற்போதுவரை 125-க்கும் மேற்பட்ட ரெளடிகளைக் கைதுசெய்திருக்கிறோம். அவர்களும் இந்த நெட்வொர்க்கில் முக்கியமானவர்கள்தான். அவர்களைக் கைதுசெய்திருப்பதால் கஞ்சா புழக்கத்துக்கும், ரெளடியிசத்துக்குமான இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் மற்ற ரௌடிகளும் கைதாவார்கள்” என்றார்.

கோவையின் அடையாளம் கெடாதிருக்கட்டும்!