
அம்ரித்பால் சிங் தலைமறைவாகிவிட்டதாக போலீஸார் கூறுவதை ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பினர் ஏற்கவில்லை.
காலிஸ்தான் பிரிவினைவாதியான அம்ரித்பால் சிங்கையும், அவருடைய ஆதரவாளர்களையும் கைதுசெய்ய போலீஸார் நடத்திவரும் தேடுதல் வேட்டையால் ஒட்டுமொத்த பஞ்சாப் மாநிலமும் பதற்றத்தில் இருக்கிறது.

யார் இந்த அம்ரித்பால்?
பஞ்சாப் காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர் அம்ரித்பால் சிங். கடந்த பிப்ரவரி 23-ம் தேதி இவர் தலைமையில் பெருங்கூட்டம் ஒன்று அமிர்தசரஸ் அருகேயுள்ள அஜ்னாலா நகர் காவல் நிலையத்தைத் தாக்கியது. காரணம், சிறையிலிருந்த அம்ரித்பால் சிங்கின் நண்பர் லவ்ப்ரீத் சிங்கை மீட்பதற்காக, அந்தக் கும்பல் துப்பாக்கிகளையும் வாள்களையும் ஏந்தியபடி காவல் நிலையத்தில் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டது. இந்தக் களேபரத்தின் காரணமாக, லவ்ப்ரீத் சிங் சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டார். மேலும், அவர்மீது போடப்பட்டிருந்த கடத்தல், திருட்டு வழக்குகளும் திரும்பப்பெறப்பட்டன.
இத்தனை களேபரங்களுக்கும் காரணமான, அம்ரித்பால் சிங் ப்ளஸ் டூ வரை மட்டுமே படித்தவர். அமிர்தசரஸ் அருகேயுள்ள ஜல்லுபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பிழைப்புக்காக துபாய்க்குச் சென்ற இவர், 12 ஆண்டுகள் அங்கு ஒரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணியாற்றினார். 2022-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் இந்தியாவுக்குத் திரும்பியபோது, ‘காலிஸ்தான்’ தீவிரவாதியாகவே அவர் மாறியிருந்தார். ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற இயக்கத்தின் தலைவராக தன்னைத் தானே அறிவித்துக்கொண்டதோடு, சீக்கியர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையைத் தீவிரமாக எழுப்ப ஆரம்பித்தார். இவரின் கவர்ச்சியான பேச்சு, மூளைச்சலவையால் ஏராளமான இளைஞர்கள் அவருக்குப் பின்னால் திரண்டார்கள். இதனால் அவரை, ‘பிந்த்ரன்வாலே 2.0’ என்று அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் அழைக்கிறார்கள்.
பிந்த்ரன்வாலே யாரென்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், 38 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிப் போக வேண்டும். பஞ்சாப்பைப் பிரித்து ‘காலிஸ்தான்’ என்ற பெயரில் சீக்கியர்களுக்கென தனிநாடு உருவாக்க வேண்டும் என்று இளைஞர்களைத் திரட்டி ஆயுதமேந்தி வன்முறையில் ஈடுபட்டவர் ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே. காலிஸ்தான் ஆதரவாளர்களால் கலவர பூமியானது பஞ்சாப்.
சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோயிலுக்குள் ஆயுதங்களுடன் சென்று, அதைத் தங்களின் தலைமையிடம்போல மாற்றவும் செய்தார் பிந்த்ரன்வாலே. அவரது கொட்டத்தை அடக்க நினைத்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, ராணுவத்தை அனுப்பினார். பொற்கோயிலுக்குள் புகுந்து ராணுவம் நடத்திய வேட்டையில் பிந்த்ரன்வாலே உட்பட 1,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
பொற்கோயிலின் புனிதத்தை இந்திரா காந்தி களங்கப்படுத்திவிட்டார் என்று சீக்கியர்களில் ஒரு பகுதியினர் இந்திரா காந்தி மீது கோபடைந்தனர். அதன் விளைவாக, 1984-ம் ஆண்டு, தனக்கு மெய்க்காப்பாளர்களாக இருந்த சீக்கியர்களாலேயே இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

அன்று இந்திரா காந்தி… இன்று அமித் ஷா!
பிந்த்ரன்வாலே செய்த அதே வேலைகளை இன்று அம்ரித்பால் சிங் செய்துவருகிறார். காலிஸ்தான் உருவாவதற்கு இடையூறாக இருந்தால், “அன்று இந்திரா காந்திக்கு என்ன நடந்ததோ, அது அமித் ஷாவுக்கும் நடக்கலாம்” என்று எச்சரிக்கை விடுக்கிறார் அம்ரித்பால். ‘அமித் ஷாவுக்கே எச்சரிக்கையா…’ என்று டெல்லியின் பார்வை பஞ்சாப் பக்கம் திரும்பியது. அதன் பிறகு, காட்சிகள் மாறின. அமித் ஷாவைச் சந்திக்க மார்ச் 2-ம் தேதி டெல்லிக்குப் பறந்தார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான். அதன் பிறகு, பல வழக்குகள் அம்ரித்பால் மீது பாய்ந்தன.
மார்ச் 19-ம் தேதி, அம்ரித்பால் சிங்கைக் கைதுசெய்ய போலீஸ் தயாரானது. அவர் கைது செய்யப்பட்டால், அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கலாம் என்று கருதி, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது. உஷாரான அம்ரித்பால், போலீஸாரின் கண்ணில் மண்ணைத் தூவி, தப்பித்துவிட்டார்.
80,000 போலீஸார் என்ன செய்கிறார்கள்?
அம்ரித்பால் சிங் தலைமறைவாகிவிட்டதாக போலீஸார் கூறுவதை ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பினர் ஏற்கவில்லை. அவர்கள் தங்கள் சட்ட ஆலோசகர் மூலம், ‘அம்ரித்பாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்று கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்கள். அதை விசாரித்த நீதிமன்றம், “பஞ்சாப்பில் 80,000 போலீஸார் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்... அம்ரித்பால் சிங் எப்படித் தப்பினார்?” என்று கேள்வியெழுப்பியது. இதனால், போலீஸாரின் தேடுதல் வேட்டை மேலும் தீவிரமடைந்திருக்கிறது.
அண்டை மாநிலங்களான ஹரியானாவுக்கோ, இமாச்சல் பிரதேசத்துக்கோ அவர் தப்பிச் சென்றுவிடாமல் இருக்க எல்லைப் பகுதிகளில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். அம்ரித்பால் உட்பட நான்கு பேர்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது. 150-க்கும் மேற்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அம்ரித்பால் சிங்கின் மீதான காவல்துறை நடவடிக்கைகளைக் கண்டித்து, லண்டனிலுள்ள இந்தியத் தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அங்கு இந்தியாவின் தேசியக்கொடியைக் கீழே இறக்கிவிட்டு, காலிஸ்தான் கொடியை ஏற்றி அராஜகமும் செய்திருக்கிறார்கள். இதேபோல, அமெரிக்காவில் சான்ஃபிரான்சிஸ்கோவிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மீதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
‘காலிஸ்தான்’ பெயரில் மீண்டும் ஒரு துயரம் நிகழாமல் தடுக்கவேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை!