ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் அரச பாண்டி, இவர் நாட்டுப்படகில், பாம்பன் பாக் ஜலசந்தி கடலுக்குள் 13 கிலோமீட்டர் தொலைவில் மீனவர்களுடன் மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரின் படகைச் சுற்றி வானில் வட்டமடித்த 'புறா' திடீரென அவரின் படகில் தஞ்சமடைந்தது.
புறாவுடன் கரைக்குத் திரும்பிய மீனவர்கள், ராமேஸ்வரத்தில், புறாக்களை வளர்க்கும் ரகுவிடம் கொடுத்திருக்கின்றனர். புறாவை வாங்கிய ரகு அதன் இரு கால்களிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்தார். அதைப் பிரித்துப் பார்த்தபோது இலங்கை யாழ்ப்பாணம் சுதன், செல்போன் எண், மற்றொரு காலில் எம்.எப்., 3209 என்ற அடையாள எண் எழுதப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இலங்கையிலிருந்து இந்தியாவை உளவு பார்ப்பதற்காக சீனா 'புறாவை அனுப்பியிருப்பதாகவும், அதன் காலில் சீன எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் காட்டுத்தீபோல பரவியது. இதையடுத்து, புறாவை கரைக்குக் கொண்டுவந்த மீனவர்களிடமும், புறா வளர்ப்பில் ஈடுபடும் ரகுவிடமும் உளவுத்துறை போலீஸார் விசாரித்தனர்.
இந்த வகை புறா, 'ஹோமர்' இனத்தைச் சேர்ந்த பந்தயப் புறா எனவும், 300 கிலோமீட்டர் வரை பறக்கக் கூடியது எனவும் போலீஸாரிடம் ரகு கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து விசாரித்துப் பார்த்ததில், இலங்கை யாழ்ப்பாணத்தில் 'புறா' பந்தயம் நடந்திருப்பதும் அங்கிருந்து வழிதவறி புறா' ராமேஸ்வரம் வந்திருப்பதும் தெரியவந்தது.