விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அருகேயுள்ள சாலவனூர் கிராமத்தில் கடந்த 6-ம் தேதி, 100 நாள் வேலை நடைபெற்றது. அந்தப் பணியில் ஈடுபட்ட கிராம மக்கள், வாய்க்காலை ஆழப்படுத்த முயன்றனர். அப்போது மனித உடலின் கைப்பகுதி தென்படவே அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், கஞ்சனூர் போலீஸாருக்குத் தகவலளித்தனர். அதன்படி அங்கு வந்த போலீஸார், ஆய்வு செய்தபோது இளம் பெண்ணின் உடல் ஒன்று புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

உடனே அந்த உடல் மீட்கப்பட்டு, உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த காவல்துறையினர், வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதுவரை பெண் மாயமானது குறித்த எந்தப் புகாரும் காவல் நிலையங்களில் பெறப்படாத நிலையில், சடலத்தை அடையாளம் காண்பதில் சிக்கல் இருந்தது. இது குறித்து செய்திகள் வெளியான நிலையில், விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அது தன்னுடைய சகோதரிபோல இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.
அதனடிப்படையில் முண்டியம்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடலை, தகவலளித்த சிறுமியிடம் போலீஸ் காட்டியிருக்கின்றனர். அப்போது, 'இது தன்னுடைய சகோதரிதான்' என அந்தப் பெண் உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும், "என்னுடைய சகோதரி சித்தேரிப்பட்டைச் சேர்ந்த ட்ரம்ஸ் இசைக்கும் இளைஞர் அகிலனை இரண்டு வருடமாக காதலித்துவந்தார். அவரால் மூன்று மாத கர்ப்பமாக இருந்த என்னுடைய சகோதரி, அவரைத் திருமணம் செய்துகொள்ள வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்" என போலீஸாரிடம் தெரிவித்தாராம்.
இந்தத் தகவலின் பேரில் கஞ்சனூர் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அகிலன் சென்னைக்கு அருகே இருப்பது தெரியவரவே... அங்கு சென்ற தனிப்படை போலீஸார், அகிலன், அவருக்கு உதவியாக இருந்த சுரேஷ்குமாரைக் கைதுசெய்தனர்.

அகிலனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது, "என்னுடைய காதலி கர்ப்பமானதைத் தொடர்ந்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தினார். 3-ம் தேதி, இருவரும் சாலவனூர் அருகே செல்லும்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரத்தில் காதலியின் கன்னத்தில் அறைந்து, கழுத்தை நெரித்துக் கொலைசெய்துவிட்டேன். பிறகு, நண்பர்கள் உதவியோடு அருகில் இருந்த வாய்க்காலில் புதைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
கர்ப்பமாக இருந்து கொலைசெய்யப்பட்ட பெண் 17 வயதுடைய சிறுமி என்பதால், இருவர் மீதும் போக்சோ, கொலை வழக்குகள் பதிவுசெய்து போலீஸார் மேற்கொண்டு விசாரித்துவருகின்றனர்.