சேலம், ஆத்தூர் சிறுவாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றிவருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பள்ளிக்குச் செல்லும் சிறுமியிடம், அவரைத் திருமணம் செய்துகொள்வதாகவும், காதலிப்பதாகவும் ஆசைவார்த்தைகள் கூறி சிறுமியுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், அவரின் பெற்றோர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
அதன் பின்னர், சிறுமியின் பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தபோது, காவலர் பிரபாகரன் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததைக் கூறியிருக்கிறார். அதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில், காவலர் பிரபாகரனை போலீஸார் தேடிவந்தனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த பிரபாகரன் நேற்று கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.