திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பொடிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி பாண்டி (52). இவருக்கும், பள்ளப்பட்டியைச் சேர்ந்த நாச்சியப்பன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாகவும், நில அபகரிப்பு தொடர்பாகவும் பிரச்னை இருந்திருக்கிறது. இதற்கிடையே பாண்டியின் மகன் சதீஷ் கண்ணன் தோட்டத்துக்குச் சென்றபோது அவரை வழிமறித்த நாச்சியப்பன் தரப்பினர், அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்தும் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

பாண்டி, சதீஷ் கண்ணன் இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. மேலும், திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி அலுவலக்த்தில் புகார் அளித்தும் விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தை நாடியபோது, போலீஸார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க நிலக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதையும் போலீஸார் அலட்சியப்படுத்தியதாக பாண்டி தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து பாண்டி, பிப்ரவரி 7-ம் தேதி அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமியிடம் கேட்டபோது, அவரும் முறையாக பதில் அளிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த பாண்டி, காவல் நிலைய வாசலில் விஷம் குடித்து மயங்கினார். அவரை போலீஸார் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவருடன் போலீஸார் யாரும் செல்லவில்லை. இதனால் மருத்துவமனையில் அவரைச் சேர்த்து சிகிச்சையளிக்க தாமதமானதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தகவலறிந்த டிஎஸ்பி முருகன், நிலக்கோட்டை போலீஸாரை அனுப்பி பாண்டியை சிகிச்சைக்கு அனுமதித்திருக்கிறார். இரண்டு நாள்களாக அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

இதனால் பாண்டியின் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கிவிடுவார்கள் என நினைத்த போலீஸார், அவர்களை டிஎஸ்பி அலுவலகத்துக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாண்டி அளித்த புகார் அனைத்தையும் விசாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்து விசாரிக்கிறோம் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து பாண்டியின் புகாரின் அடிப்படையில், வழக்கறிஞர் சங்கர், குல்லலக்குண்டைச் சேர்ந்த நாச்சியப்பன், சின்னக்கருப்பு ஆகியோரை போலீஸார் உடனடியாக கைதுசெய்தனர்.
விவசாயி அளித்த புகாருக்கு போலீஸார் உரிய விசாரணை நடத்தாமல் ஓர் உயிர் பலியானதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு கொடைரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.