சென்னை மேற்கு தாம்பரம், கடப்பேரி திருவள்ளூர் தெருவைச் சேர்ந்தவர் மௌலி (48). பேராசிரியர். இவரின் மனைவி சுனிதா (41). மௌலிக்கும் சுனிதாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால் சிகிச்சைக்காக இருவரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், சுனிதாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். மௌலியை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் கூறினர். அதனால் கடந்த 21.5.2021-ம் தேதி முதல் சுனிதா, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், டவர் 3-ல் மூன்றாவது தளம் பி விங்கில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

மே 23-ம் தேதி முதல் சுனிதாவைக் காணவில்லை. அது தொடர்பாக மௌலிக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. அதனால் மருத்துவமனைக்கு வந்த மௌலி, மனைவி சுனிதாவைப் பல இடங்களில் தேடினார். ஆனால் அவர் குறித்த தகவல் தெரியவில்லை. இதையடுத்து கடந்த 8.6.2021-ம் தேதி மருத்துவமனை வளாக காவல் நிலைய போலீஸார் போனில், மௌலியிடம் மருத்துவமனையின் மொட்டைமாடியில் இளம்பெண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாகத் தெரிவித்தனர். அதன்பேரில் மருத்துவமனைக்கு வந்த மௌலி, அந்தப் பெண்ணின் சடலத்தைப் பார்த்துவிட்டு அது தன்னுடைய மனைவி சுனிதா என உறுதிப்படுத்தினார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்குப் பிறகு சுனிதாவின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சுனிதாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரின் இறப்புக்கான காரணத்தை டாக்டர்கள் குறிப்பிட்டனர். அதன் அடிப்படையில் போலீஸார் ரகசியமாக மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்தனர். மேலும் மருத்துவமனை வளாகத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட சுனிதா எப்படி மொட்டைமாடிக்குச் சென்றார் என்ற கேள்வி மௌலி, போலீஸாரிடம் இருந்தது. அதற்கான விடை சிசிடிவி மூலம் போலீஸாருக்குக் கிடைத்தது.
இது குறித்து பூக்கடை காவல் சரக மாவட்ட உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சுனிதாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் நோயாலும் இறக்கவில்லை, தற்கொலையும் செய்யவில்லை எனத் தெரியவந்தது. அப்படியென்றால் அவரின் மரணத்துக்கு என்ன காரணம் என விசாரித்தபோது மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர்மீது சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அந்தப் பெண் ஊழியரிடம் விசாரித்தோம். இந்தச் சமயத்தில் சுனிதா அனுமதிக்கப்பட்டிருந்த வார்டிலிருந்து அவரை தூய்மைப் பணியாளர் ஒருவர் மாடிக்கு அழைத்துச் செல்லும் சிசிடிவி பதிவும் கிடைத்தது. அதனால் அந்தப் பெண் ஊழியரிடம் விசாரித்தபோது பணம், செல்போனுக்காக சுனிதாவைக் கொலை செய்தததை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரிடம் விசாரித்துவருகிறோம்" என்றார். கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பேராசிரியரின் மனைவி, செல்போன், பணத்துக்காகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.