புனே அருகில் தவுண்ட் தாலுகாவிலிருக்கும் பார்காவ் என்ற இடத்தில் பீமா ஆற்றிலிருந்து கடந்த ஏழு நாள்களில் மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதில் முதல் சடலம் கடந்த 18-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த மூன்று நாள்களில் தினமும் ஒரு சடலம் வீதம் மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கடைசியாக நேற்றும் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தினமும் ஆற்றில் சடலங்கள் மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் ஆற்றில் ஆய்வு மேற்கொண்டு சடலங்கள் இருக்கின்றதா என்பது குறித்து தேட ஆரம்பித்தனர். இதில் மூன்று உடல்கள் கிடந்தன. அவை ஒவ்வொன்றும் வெறும் 200 மீட்டர் தூரத்துக்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடைசி நாளில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று பேரும் சிறார்கள் ஆவர். அவர்களில் ஒரு பெண்ணிடம் மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் போனில் கிடைத்த தகவலில் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்துபோன அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

அவர்கள் அனைவரும் தற்கொலை செய்திருந்தனர். இது குறித்து புனே ரூரல் பிரிவு போலீஸ் அதிகாரி அங்கிட் கோயல், ``தற்கொலை செய்தவர்களில் மோகன் குடும்பத்தில் மூத்தவர். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மகளுக்கு திருமணமாகிவிட்டது. அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். அவரின் கணவரும், மோகன் வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், மோகனின் இளைய மகனுக்கு உறவினர் பெண் ஒருவருடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது. இந்த விஷயம் தெரிந்ததும் மோகன் அவரைக் கண்டித்திருக்கிறார். ஆனால், அவர் மகனோ தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் பழகிவந்திருக்கிறார். அண்மையில் அவர் வீட்டைவிட்டு, அந்தப் பெண்ணுடன் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, மனஉலைச்சலுக்கு ஆளான மோகன் குடும்பத்தினர், ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். இருப்பினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முடிவில்தான், உண்மையான காரணம் என்னவென்று தெரியவரும்" எனத் தெரிவித்தார்.