மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னுடைய காதலனைத் திருமணம் செய்யலாம் என்று அழைத்து, அடித்து உதைத்திருக்கிறார்.
மும்பை, அந்தேரியைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (23). இவருக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் மணீஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர்களுக்கிடையே ஏற்பட்ட உறவு, நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தனர். ஜெயஸ்ரீயின் பெற்றோர் அகமதாபாத்துக்குச் சென்று மணீஷின் பெற்றோரைச் சந்தித்துப் பேசி, திருமண நிச்சயதார்த்தமும் செய்தனர். ஆனால் சில நாள்கள் கழித்து, மணீஷ் சரியாகச் சம்பாதிக்கவில்லை என்று ஜெயஸ்ரீயின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இதனால் திருமண நிச்சயதார்த்தத்தை முறித்துக்கொண்டனர்.

ஆனால் மணீஷ், வீட்டைவிட்டு வெளியேறி தன்னுடன் வரும்படி ஜெயஸ்ரீயிடம் தொடர்ந்து நிர்பந்தம் செய்துகொண்டேயிருந்தார். அதோடு அடிக்கடி போன் மூலமும், மெசேஜ் மூலம் நெருக்கடி கொடுத்துவந்தார். இது குறித்து ஜெயஸ்ரீ தன்னுடைய சகோதரியிடம் தெரிவித்தார். உடனே அவர்கள், மணீஷை மும்பைக்கு வரவழைக்கத் திட்டமிட்டனர்.
ஜெயஸ்ரீ, மணீஷ் போனை எடுத்துப் பேசி திருமணம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும், மும்பைக்கு வரும்படியும் கேட்டுக்கொண்டார். உடனே திருமண ஆசையில் மணீஷ், ஜெயஸ்ரீயைத் தேடி மும்பைக்கு வந்தார். மணீஷை ஜெயஸ்ரீ அந்தேரி கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றார்.

கோர்ட்டில் திருமணம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்தார். கோர்ட்டில் ஏற்கெனவே ஜெயஸ்ரீயின் சகோதரி தன்னுடைய நண்பர்கள் சிலருடன் காத்திருந்தார். அவர்கள் மணீஷை இரும்புக்கம்பியால் அடித்து உதைத்தனர். இதில் மணீஷுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரைத் தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். தகவலறிந்து மணீஷை மீட்ட போலீஸார், அவரை மருத்துமனையில் சேர்த்தனர். பின்னர் அவரிடம் விசாரித்ததில் உண்மை தெரியவந்தது. உடனே போலீஸார் வழக்கு பதிவுசெய்து ஜெயஸ்ரீயையும், அவரின் சகோதரியையும் கைதுசெய்தனர்.