பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது இசாஜ் (26). இவர் சென்னை அண்ணாசாலை, பார்டர் தோட்டம், ஜி.பி.ரோடு பகுதியிலுள்ள வீட்டில் நண்பர்களுடன் தங்கியிருந்தார். மேலும் முகமது இசாஜ், ஜாம்பஜார் பகுதியிலுள்ள சிக்கன் கடை ஒன்றில் வேலை செய்துவந்தார். இந்தநிலையில் கடந்த 21-ம் தேதி முகமது இசாஜிக்கும் அவருடன் தங்கியிருந்த அலி உசேன் என்கிற குட்டு என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குட்டு கத்தியை எடுத்து முகமது அசாஜை சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த முகமது இசாஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து முகமது இசாஜின் சகோதரர் முகமது கலாம் என்பவர் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில் கூறியிருப்பதாவது, ``எனது சொந்த ஊர் பீகார், ஜெய்நகர். நான், என் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருக்கிறோம். நான் சிக்கன் கடையில் வேலைப்பார்த்து வருகிறேன். என் தம்பி முகமது இசாஜிம் என்னுடன் சிக்கன் கடையில் கறி வெட்டும் வேலையை கடந்த 4 ஆண்டுகளாக செய்து வந்தான்.
நாங்கள் இருவரும் தினமும் காலையில் 7 மணி முதல் மாலை 6 மணி வரை கடையில் வேலை செய்வோம். பின்னர், வீட்டுக்கு வந்துவிடுவோம். கடந்த சனிக்கிழமை, பீகாரைச் சேர்ந்த குட்டு என்பவர் மது அருந்திவிட்டு என் தம்பி முகமது இசாஜிடம் தகராறு செய்தான். உடனே நான் குட்டுவிடம் ஏன் தம்பியிடம் பிரச்னை செய்கிறாய் என்று கேட்டதற்கு உன் தம்பி கிட்ட சொல்லி வை தேவையில்லாமல் என் வழியில் குறுக்கே வருகிறான்.அவனை சாவடிச்சிருவேன் என்று மிரட்டினான்.
இதையடுத்து கடந்த 23-ம் தேதி காலை 7 மணிக்கு நானும் தம்பி முகமதுவும் சிக்கன் கடைக்கு வேலைக்குச் சென்றோம். மாலையில் நானும் முகமதுவும் காய்கறிகளை வாங்கிக்கொண்டு நைனியப்பன் தெரு சந்திப்பில் வந்துகொண்டிருந்தோம். என் தம்பி முன்னால் செல்ல, நான் பின்னால் வந்துகொண்டிருந்தேன். அப்போது பீகாரைச் சேர்ந்த குட்டு என்பவன், என் தம்பி முகமதுவை வழிமறித்து அசிங்கமாகத் திட்டினான் பின்னர் அவன் இடுப்பில் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து மார்பில் ஓங்கிக் குத்தினான். பின்னர் கழுத்திலும், இடது பக்கத்திலும் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

உடனடியாக நான் என் தம்பியைக் காப்பாற்றச் சென்றேன். அப்போது கத்தியைக் காட்டி மிரட்டியபடி அவன் தப்பி விட்டான். இதையடுத்து ஆட்டோவில் என் தம்பி முகமதுவை ஏற்றிக்கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். ஆனால், அங்கு என் தம்பி இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். என் தம்பியைத் திட்டமிட்டுக் கொலைசெய்த குட்டு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வீராசாமி வழக்கு பதிவுசெய்து விசாரித்தார். தலைமறைவாக இருந்த குட்டுவை போலீஸார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். இவரும் பீகாரைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு குட்டுவை கைதுசெய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.