பீகார் மாநிலத்தில் அடிக்கடி வினோதமாகத் திருட்டு நடப்பது வழக்கமாக இருந்துவருகிறது. கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் பழைமையான இரும்பு மேம்பாலம் ஒன்றை மர்ம நபர்கள் நீர்ப்பாசனத்துறை ஊழியர்கள் என்று கூறி வெட்டி எடுத்துச் சென்றுவிட்டனர். இது தவிர பெகுசாராய் மாவட்டத்தில் சுரங்கப்பாதை அமைத்து ரயில் இன்ஜின் ஒன்றை ஒவ்வொரு பகுதியாகக் கழற்றி எடுத்துச் சென்றுவிட்டனர். இதுபோல் எத்தனையோ திருட்டுகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.
அந்த வகையில், தற்போது மொபைல் போன் டவர் ஒன்றை கழற்றி எடுத்துச் சென்றிருக்கின்றனர். பாட்னாவில் ஏர்செல் நிறுவனம், கடந்த 2006-ம் ஆண்டு ஒரு மொபைல் போன் டவரை அமைத்திருந்தது. ஏர்செல் நிறுவனம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, ஜி.டி.எல் நிறுவனம் அந்த மொபைல் போன் டவரைப் பராமரித்து வந்தது. கடந்த சில மாதங்களாக இந்த மொபைல் போன் டவர் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு வாடகை கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் மொபைல் டவரைக் கழற்றி எடுத்துச் செல்லும்படி டவர் இருந்த வீட்டு உரிமையாளர் கம்பெனி ஊழியர்களிடம் தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து, கம்பெனி ஊழியர்கள் மொபைல் டவரிலிருந்து குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் கழற்றி எடுத்துச் சென்றனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சிலர் வந்து மொபைல் போன் டவரைக் கழற்ற வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றனர்.
அவர்கள் தாங்கள் கம்பெனி ஊழியர்கள் என்றும் தெரிவித்தனர். இதனால் கழற்றி எடுத்துச் செல்ல வீட்டு உரிமையாளர் சம்மதித்தார். அதையடுத்து, அவர்கள் 29 அடி உயரம் கொண்ட மொபைல் போன் டவரைக் கழற்றி லாரியில் எடுத்துச் சென்றுவிட்டனர். இந்த நிலையில், ஜி.டி.எல் கம்பெனி ஊழியர்கள் வந்து பார்த்தபோது மொபைல் டவர் காணாமல் போயிருந்தது. இது குறித்து மொபைல் போன் டவர் வைக்கப்பட்டிருந்த இடத்தின் உரிமையாளரிடம் கேட்டதற்கு, கம்பெனி ஊழியர்கள் என்று கூறி சிலர் வந்து கழற்றி எடுத்துச் சென்றுவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, இது குறித்து கம்பெனி ஊழியர்கள் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.