விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இருக்கிறது எக்கியார் குப்பம். மீனவ கிராமமான இந்தப் பகுதியை ஒட்டிய 'வம்பாமேடு' எனும் இடத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வந்திருக்கிறது. இங்கு, பலரும் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்திருக்கின்றனர். அதில், எக்கியார் குப்பத்தைச் சேர்ந்த சந்திரன், சங்கர், தரணிவேல், மண்ணாங்கட்டி, சுரேஷ், மற்றொரு மண்ணாங்கட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் திடீரென சுருண்டு விழுந்து வயிற்று வலியால் துடித்திருக்கின்றனர். சிலர் ரத்த வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

உடனடியாக அவர்கள் அனைவரும் புதுவை, முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் சிலர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு முதற்கட்டமாக அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் எக்கியார் குப்பத்தில் குவிக்கப்பட்டனர். அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், மேலும் சிலர் இவ்வாறு கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
எனவே, அவர்களையும் மீட்ட போலீஸார் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் நம்மிடையே பேசும்போது, "கள்ளச்சாராயம் குடித்ததினால் பாதிக்கப்பட்டு, இதுவரை சுமார் 80 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். அதில் ஏழு பேர் உயிரிழந்துவிட்டனர். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்துவருகின்றனர். இந்த கள்ளச்சாராய விற்பனை போலீஸாரின் ஆதரவோடுதான் நடந்திருக்கிறது. இதுபோல் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, கள்ளச்சாராயத்தைக் குடித்துவிட்டு சுப்புராயன் என்பவர் உயிரிழந்துவிட்டார்.

எனவே, தமிழக அரசு, காவல்துறையைக் கண்டித்து இன்னும் சற்று நேரத்தில், இ.சி.ஆர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறோம்" என்றனர். இந்த நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக மரக்காணம் பகுதியைச் சேர்ந்த அமரன் என்பவரைக் கைதுசெய்திருக்கும் போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்" இந்தச் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.