சென்னை, பெருங்குடியை அடுத்த ராஜீவ் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்துவந்திருக்கிறார். ஜெய்கணேஷுக்குத் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இவர், நேற்று முன்தினம் தன்னுடைய நண்பர்களுடன் வெளியில் சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பியிருக்கிறார். அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்மக் கும்பல் ஒன்று, தாங்கள் மறைத்துவைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஜெய்கணேஷை வெட்டியிருக்கிறது.

பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். அங்கு ஜெய்கணேஷைப் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். இதையறிந்த ஜெய்கணேஷின் உறவினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நண்பர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு முன்பு திரண்டு, கொலைக் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்யும்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து சென்னை போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்த நிலையில், இந்தக் கொலைக்குக் காரணம் தாங்கள்தான் என்று கூறி, சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதர், முருகன், பிரவீன் ஆகிய மூன்று பேர் இன்று விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால், அவர்களுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது என சக வழக்கறிஞர்கள் ஒருமித்து குரல் கொடுக்க, குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டது.

வழக்கறிஞரைக் கொலைசெய்த மூன்று பேருக்கும் நீதிமன்றக் காவல் வழங்கக் கூடாது எனவும் வழக்கறிஞர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்தது, குற்றவாளிகள் மூன்று பேரும் நீதிமன்றத்திலிருந்து வெளியில் வரும்போது அவர்கள்மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், நீதிமன்றத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். சரணடைந்த மூன்று பேரையும் வருகிற 5-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி ராதிகா தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, சரணடைந்த மூன்று பேரையும் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே அழைத்து வந்தனர். அப்போது, நீதிமன்றப் பகுதியிலேயே வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து குற்றவாளிகளைத் தாக்க முற்பட்டனர். அப்போது சில அடிகள், சரணடைந்த குற்றவாளிகள்மீது விழுந்தன. தடுக்க காவல்துறையினர் முற்பட்டபோது, போலீஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, சரணடைந்த கொலைக் குற்றவாளிகள் மூன்று பேரும் வேடம்பட்டு மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனர்.