ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தில் பயிற்சிக் காவலர் ஒருவர் வசித்துவந்திருக்கிறார். அவர் வசித்த வீட்டுக்கு அடுத்த வீட்டில் 7 வயது சிறுமியுடன், ஒரு குடும்பம் வசித்துவந்திருக்கிறது. இந்த நிலையில், சிறுமியின் பெற்றோர், சிறுமியை வீட்டில் தனியாக இருக்கச் சொல்லிவிட்டு, சொந்த வேலையாக வெளியே சென்றிருக்கின்றனர். இதையறிந்த பயிற்சிக் காவலர் சிறுமியின் வீட்டுக் கதவைத் தட்டி திறக்கச் சொல்லியிருக்கிறார். சிறுமி கதவைத் திறந்ததும், வீட்டுக்குள் நுழைந்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
அதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் வீடு திரும்பியதும், சிறுமி நடந்த சம்பவத்தைக் கூறியிருக்கிறார். உடனே பெற்றோர் சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். புகாரின் அடிப்படையில், காவல்துறை அதிகாரி, பயிற்சிக் காவலரை நேற்று கைதுசெய்திருக்கிறார்.

இது குறித்துப் பேசிய கோரா காவல் நிலைய பொறுப்பாளர் உத்தம் குமார் திவாரி, "சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் உறுதியாகியிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட பயிற்சிக் காவலர் கைதுசெய்யப்பட்டு நேற்று தலைமை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திவருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.