தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவுக்குட்பட்ட வேலப்பர் கோயில் அருகே கதிர்வேல்புரம் அமைந்திருக்கிறது. இங்கு பளியர் இனத்தைச் சேர்ந்த 35 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தேன், ஈச்சமாறு, கடுக்காய், நெல்லிக்காய், கிழங்குகள் எடுத்து பிழைத்து வருகின்றனர். ஏழ்மையிலுள்ள இந்தப் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் 14 வயது மகன் தமிழரசன், சீனி என்பவரின் 17 வயது மகன் பட்டவராயன், வேல்முருகன் என்பவரின் 15 வயது மகன் ஞானவேல் ஆகியோரை உசிலம்பட்டியைச் சேர்ந்த காசி, பிரபு ஆகியோர் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரிலுள்ள ஹோட்டலில் வேலைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

கடந்த ஐந்து மாதங்களாக ஹோட்டலுக்கு வேலைக்குச் சென்ற சிறுவர்கள், அவ்வப்போது பெற்றோருடன் போனில் பேசிவந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இது குறித்து சிறுவர்களை அழைத்துச் சென்ற காசியைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, கடந்த மாத இறுதியில் மூன்று சிறுவர்களும் ஊருக்குச் சென்றுவிட்டதாகக் கூறியிருக்கிறார்.
வேலைக்குச் சென்ற சிறுவர்கள் வீடு திரும்பாத காரணத்தால், இவர்களைக் கண்டுபிடித்துத் தரும்படி கடந்த 14-ம் தேதி பெற்றோர்கள் இராஜதானி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மாயமான சிறுவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, வேலைக்குச் சென்ற தங்கள் மகன்களை மீட்டுத் தரும்படி ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெற்றோர், ``எங்கள் மகன்கள் ஊருக்கு வருவதாகத் தகவல் தெரிவிக்கவில்லை. எங்கள் மகன்களை அழைத்துச் சென்றவர்களிடம் விசாரித்தால், முறையான பதில் தரவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் எங்கள் மகன்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.