திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகேயுள்ள அத்திப்பட்டு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியிலுள்ள கழிவுநீர்த்தொட்டியைச் சுத்தப்படுத்தும் பணியை மீஞ்சூர் பேரூராட்சி ஊழியர்களான கோவிந்தன், சுப்பராயலு ஆகிய இருவர் மேற்கொண்டுவந்தனர்.

தொட்டியைச் சுத்தம் செய்யும்போது கழிவுநீர்த்தொட்டியிலிருந்து வந்த விஷவாயு தாக்கியதில் இருவரும் மயங்கி தொட்டியில் விழுந்தனர். இதைப் பார்த்தவர்கள் சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தொட்டியில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
குறுகிய தொட்டி என்பதால் இருவரையும் மேலே கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்தச் சுவர்களை இடித்து இருவரின் உடலையும் மேலே கொண்டுவந்தனர். தொட்டியில் விஷவாயு தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. மீட்கப்பட்ட இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

சம்பவ இடத்துக்கு வந்த மீஞ்சூர் பகுதி போலீஸார் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், போலீஸார் இந்த விவகாரம் குறித்து அந்தத் தனியார்ப் பள்ளியில் தாளாளரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள். மே 1-ம் தேதி, உழைப்பாளர்கள் தினத்தில் கழிவுநீர்த்தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.