நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள தீட்டுக்கல் வனப்பகுதியில் இரண்டு வளர்ப்பு நாய்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பதாக விலங்குகள் நல பாதுகாப்பு செயற்பாட்டாளர்களுக்கு தகவல் வந்திருக்கிறது. உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்ற செயற்பாட்டாளர்கள், 2 கிரேட் டேன் ரக வளர்ப்பு நாய்களை கட்டிவிட்டுச் சென்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல நாள்களாக உணவு, தண்ணீரின்றி இரண்டு நாய்களும் மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்திருக்கின்றன.

அந்த நாய்களை உடனடியாக மீட்டு, பிக்கட்டியில் இயங்கி வரும் சர்வதேச வளர்ப்பு பிராணிகளுக்கான பராமரிப்பு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அந்த நாய்களுக்கு அங்கு சிகிச்சை அளித்து பராமரித்து வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். கோவையில் வசித்து வரும் ஊட்டியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் இந்த கொடூரத்தை செய்திருப்பதைக் கண்டறிந்தனர். அவர் மீது வழக்குபதிந்து கைது செய்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், ``டாக் பிரீடரான உதயகுமாரின் இந்த 2 கிரேட் டேன் நாய்களும் குட்டி ஈனும் வயதைக் கடந்திருக்கின்றன. இவற்றால் பலனில்லையென சிறுத்தைக்கு உணவாக காட்டில் கட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுகைது செய்துள்ளோம்" என்றனர்.

இந்த போக்கு குறித்து நம்மிடம் பேசிய வளர்ப்பு பிராணிகள் நல பாதுகாப்பு செயற்பாட்டாளர் நைஜில், ``கோவிட் காலத்தில் நிறைய பேர் செல்லப்பிராணிகளை வளர்த்து விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வந்தனர். தற்போது பராமரிக்க முடியாத சூழலில் காட்டிலும், நகரிலும் விட்டுச் செல்கின்றனர். இதை தடுக்க நகராட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.