சென்னை, புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அழகப்பன் (33). சின்னத்திரை நடிகரான இவர், சென்னையில் சீரியல் ஷூட்டிங் ஒன்றுக்குச் சென்றிருந்தபோது, இரண்டு பெண்கள் தன்னுடைய செல்போனைத் திருடிவிட்டதாக திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அந்தப் புகாரில், ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். ஜன. 23-ம் தேதி பெரம்பூரிலுள்ள ஜவுளிக்கடைக்கு `ஆனந்தராகம்' என்ற சீரியலுக்கான ஷூட்டிங்குக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னுடைய அறுபதாயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை கடையில் வைத்திருந்தேன். அதை வாடிக்கையாளர்கள்போல வந்த இரண்டு பெண்கள் எடுத்துச் சென்றுவிட்டனர்.
அந்தக் காட்சி கடையிலிருந்த சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. எனவே, என்னுடைய செல்போனைக் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் திரு.வி.க நகர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து சிசிடிவி கேமராவில் பதிவான இரண்டு பெண்களைத் தேடிவருகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்து போலீஸார், `` `ஆனந்த ராகம்’ சீரியல் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள வந்த நடிகர் அழகப்பன், தன்னுடைய செல்போனைக் கடையின் மேஜையில் வைத்திருக்கிறார். பின்னர் அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது செல்போனைக் காணவில்லை. இது தொடர்பாக கடையின் உரிமையாளரிடம் தெரிவித்திருக்கிறார். அந்தக் கடையில் ஷூட்டிங் நடந்தபோது அதைப் பார்க்க ஏராளமானவர்கள் வந்திருந்தனர்.
அதனால் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது வாடிக்கையாளர்கள்போல வந்த இரண்டு பெண்கள், கடையின் ஊழியரிடம் பேச்சுக் கொடுத்தபடி செல்போனை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. செல்போனைத் திருடிய பெண்கள், சீரியல் நடிகர் அழகப்பனுடன் செல்ஃபியும் எடுத்த வீடியோ காட்சியும் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் அந்தப் பெண்களைத் தேடிவருகிறோம்" என்றனர்.