இங்கிலாந்தில் குற்றவாளி ஒருவருக்கு வித்தியாசமான முறையில், `ஐந்தாண்டுகளுக்கு இனி வாகனங்களையே தொடக் கூடாது’ என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது குறித்து வெளியான தகவலின்படி தண்டிக்கப்பட்டிருக்கும் நபர், கேம்பிரிட்ஜ்ஷையரிலுள்ள (Cambridgeshire) பென்னிங்டனில் (Pennington) வசிக்கும் பால் ப்ரீஸ்ட்லி (Paul Priestley). இவர் மார்ச் 25, 26-ம் தேதி வாக்கில், மூன்று இடங்களில் யாருக்கும் தெரியாமல் வாகனங்களுக்குள் நுழைய முயன்றது சிசிடிவி கேமராவில் பதிவானதையடுத்து கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட பின்னர், அந்த நபரிடம் கத்தி, கஞ்சா போன்றவையும் இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில், நூற்றுக்கணக்கான திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டிருக்கும் பால் ப்ரீஸ்ட்லியின் வழக்கு பீட்டர்பரோ மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கு வந்தபோது, இனி வாகன உரிமையாளரின் அனுமதியின்றி ஐந்தாண்டுகளுக்கு வாகனங்களுக்குள் நுழையவோ, தொடவோ கூடாது என அந்த நபருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
மேலும், பால் ப்ரீஸ்ட்லிக்கு ஒன்பது மாத சிறைத் தண்டனையும், 10 நாள் மறுவாழ்வு நடவடிக்கையும், 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தினமும் இரவு 11 முதல் காலை வரை ஊரடங்கு உத்தரவை (வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது) கடைப்பிடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.