ஒடிசா மாநிலம், கட்டாக்கில் நேற்று பிரம்மாபூர் - ஷங்கர்பூர் ஆகிய இரு அணிகளுக்குமிடையிலான உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு லக்கி ரௌத் (Lucky Raut) (22) என்பவர் அம்பயராக இருந்தார். இந்த நிலையில், விளையாடிக்கொண்டிருக்கும்போது அம்பயர் `நோ பால்' சிக்னல் காண்பித்திருக்கிறார். இதனால், பந்து வீச்சாளர் ஸ்ம்ருதி ரஞ்சன் ரௌத்துக்கும் (Smruti Ranjan Rout), அம்பயர் லக்கி ரௌத்துக்கும் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. அது தொடரவே கைகலப்பாகவும் மாறியிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த பந்து வீச்சாளர் ஸ்ம்ருதி ரஞ்சன் ரௌத், கூர்மையான ஆயுதத்தால் லக்கி ரௌத்தைக் குத்தியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள், லக்கி ரௌத்தை சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றிருக்கிறார்கள். ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும், தப்பிக்க முயன்ற ஸ்ம்ருதி ரஞ்சன் ரௌத்தை மைதானத்திலிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தக் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க அந்தப் பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், ஸ்ம்ருதி ரஞ்சன் ரௌத் மீது வழக்கு பதிவுசெய்து, விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது.