தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்குவதால் அல்லது பெற்றோர் குறிப்பிட்ட பொருளை வாங்கிக் கொடுக்க மறுத்தால் தற்கொலை செய்யும் அளவுக்கு மைனர்கள் செல்கின்றனர். மும்பை, பயந்தர் கிழக்குப் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்தவர் சத்ருகன் பதக் (13). 8-வது வகுப்பு படித்துவந்தார். சத்ருகன் பெற்றோர் கட்டடத்தின் 16-வது மாடியில் வசித்துவருகின்றனர். இரவு 11:30 மணிக்கு அனைவரும் உறங்கச் சென்ற நிலையில், சத்ருகன் பாத்ரூம் சென்றார். பாத்ரூம் ஜன்னல் வழியாக அவர் வெளியில் குதித்துவிட்டார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த செக்யூரிட்டி, சத்ருகன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவருடைய பெற்றோருக்குத் தகவல் கொடுத்தார். உடனே அவர்கள் சத்ருகனை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விபத்து மரணம் என வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். சத்ருகன் தந்தையிடம் போலீஸார் விசாரித்தபோது, ``காலையில் சத்ருகன் உறவினர் ஒருவருடன் முடிவெட்டுவதற்காகக் கடைக்குச் சென்றார். கடையில் சத்ருகனுக்கு முடியை அதிக அளவில் குறைத்து வெட்டிவிட்டனர். இதனால் வீட்டுக்கு வந்ததிலிருந்து மிகவும் வருத்தத்தில் இருந்தான். நானும், என்னுடைய இரண்டு மகள்களும் அவனைச் சமாதானப்படுத்தினோம். ஆனாலும் அவன் தொடர்ந்து அதிருப்தியில் இருந்துவந்தான். வீட்டு பாத்ரூம் ஜன்னலுக்கு கிரில் தடுப்பு அமைக்கப்படவில்லை'' என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தத் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரித்துவருகிறோம் என்று இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸார் தெரிவித்தனர்.