உத்தரப்பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சுரேஷ் சந்திரா என்பவர் மார்பு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டதால், உடனடியாக அவரை லக்னோவில் உள்ள வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர். உடனே சுரேஷ் சந்திராவின் குடும்பத்தினர் அவரை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு, அந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல ஆயத்தமாகியிருக்கின்றனர்.

அந்தச் சமயத்தில் பா.ஜ.க நிர்வாகியான உமேஷ் மிஸ்ரா தன்னுடைய காரை சாலையில் நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டார். 30 நிமிடங்களுக்கும் மேல் ஆம்புலன்ஸால் நகரக்கூட முடியவில்லை. இதற்கிடையே, ஆம்புலன்ஸில் இருந்த நோயாளிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி விரைவாக லக்னோ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முடியாமல் குடும்பத்தினர் திணறியிருக்கின்றனர். உரிய நேரத்தில் சிகிச்சையளிக்காததால், நோயாளி ஆம்புலன்ஸிலேயே மரணமடைந்தார். அதன் பிறகு ஏறத்தாழ 30 நிமிடங்கள் கழித்துதான் பா.ஜ.க நிர்வாகி உமேஷ் மிஸ்ரா காரை எடுக்க வந்திருக்கிறார்.
அப்போது சுரேஷ் சந்திராவின் குடும்பத்தினருக்கும், பா.ஜ.க நிர்வாகி உமேஷ் மிஸ்ராவுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கோபமடைந்த பா.ஜ.க நிர்வாகி உமேஷ் மிஸ்ரா, "இந்தத் தொகுதித் தலைவர் ராம்கிங்கர் பாண்டேவின் சகோதரன் நான்... என்னிடமே கேள்வி கேட்கிறாயா என்ற தொணியில் பேசியிருக்கிறார். மேலும், இறந்தவரின் மைத்துனரிடம், "உன்னைக் காவல்துறையில் பொய் வழக்கு பதிவுசெய்து சிக்கவைத்துவிடுவேன்" எனவும் மிரட்டியிருக்கிறார்.
இது அனைத்தையும் அந்தப் பகுதியிலிருந்தவர்கள் தங்கள் செல்போனில் பதிவுசெய்திருக்கிறார்கள். மேலும், அந்தப் பகுதியிலிருந்த காவல்துறை அதிகாரிகள் யாரும் இதில் தலையிடவில்லை என்றும் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் பா.ஜ.க நிர்வாகி உமேஷ் மிஸ்ரா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். தற்போது இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.