அமெரிக்காவைச் சேர்ந்த கேண்டேஸ் சாப்மேன் ஸ்காட் (36) என்ற பெண், ஆர்கன்சாஸ் மாகாணத்தில் `சென்ட்ரல் மார்ச்சரி சர்வீசஸ்' எனும் சவக்கிடங்கு ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அங்கு இறந்த உடல்களை 'எம்பாம்' செய்யும்போது, அப்புறப்படுத்தப்படும் எச்சங்களை எடுத்துச் சென்று தகனம் செய்வது அவரது பிரதான வேலை. இந்த நிலையில் கேண்டேஸ் சாப்மேன் ஸ்காட், உடல்களைச் சவக்கிடங்கிலிருந்து அப்புறப்படுத்தும்போது, அவற்றிலிருந்து உறுப்புகளைச் சட்டவிரோதமாகத் திருடி விற்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பில், கேண்டேஸ் சாப்மேன் ஸ்காட், Oddities என்ற ஃபேஸ்புக் குழுவின் மூலம் குறிப்பிட்ட நபரைச் சந்தித்து, அவருக்கு உடல் உறுப்புகளை 11,000 டாலருக்கு விற்றது தெரியவந்திருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, கேண்டேஸ் சாப்மேன் ஸ்காட்மீது வழக்கு தொடரப்பட்டு, ஃபெடரல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், உடல் உறுப்புகளைச் சட்டவிரோதமாக விற்றது, எல்லையைக் கடந்து கடத்திச் சென்றது, சதி செய்தல் உள்ளிட்ட 12 வழக்குகள் அவர்மீது தொடரப்பட்டன. இது குறித்து ஊடகங்களிடம் பேசிய காவல்துறை தரப்பு, ``கேண்டேஸ் சாப்மேன் ஸ்காட், 2021 அக்டோபரில் பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஒருவருக்கு முழுமையாக, எம்பாம் செய்யப்பட்ட மூளையை விற்றிருக்கிறார்.

மேலும், அந்த நபருக்கும் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணுக்குமிடையேயான நிதி பரிவர்த்தனைகள் ஒன்பது மாதங்கள் நீடித்திருக்கின்றன. மேலும், அப்போது அவருக்குக் கரு, இதயம், பிறப்புறுப்பு, நுரையீரல், தோல், மூளை உள்ளிட்ட உடல் பாகங்களை விற்றதும் தெரியவந்திருக்கிறது" எனத் தெரிவித்தது.
இந்த வழக்கு குறித்து, நீதிபதி ஜே தாமஸ் ரே, ``குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் நடவடிக்கைகள் மிகவும் மோசமானவை... அதே நேரத்தில் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கின்றன" என்று தெரிவித்து, மேலதிக விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.