மேற்கு அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தை சேர்ந்தவர்கள் கூரி ரிச்சின்ஸ் (33) மற்றும் அவரின் கணவர் எரிக் ரிச்சின்ஸ் (39). கூரி ரிச்சின்ஸின் கணவர், கடந்த வருடம் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மூன்று ஆண் குழந்தைகளுக்கு தாயான கூரி ரிச்சின்ஸ், ‘குட் திங்ஸ் யூட்டா’ என்ற தலைப்பில் தந்தை இல்லாத துக்கத்தை கையாள்வது தொடர்பாக குழந்தைகளுக்கான ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அந்தப் புத்தகத்துக்கான விற்பனை மற்றும் புரமோஷன்களில் கலந்துகொண்ட ரிச்சின்ஸ் தன் வாழ்க்கை பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது தன் கணவர் உயிரிழந்த வழக்கில் கூரி ரிச்சின்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். `2022-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி கமாஸில் உள்ள வீட்டில் எரிக் மற்றும் கூரி ஆகிய இருவரும் வீடு விற்றதை கொண்டாடும் வகையில் தங்கள் வீட்டிலேயே இரவு விருந்து தயார் செய்து மகிழ்ச்சியுடன் இருந்துள்ளனர். இந்தக் கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் மனைவி கூரி, கணவர் எரிக்கிற்கு கலவையான ஓட்கா பானத்தை கொடுத்துள்ளார்.
பின்னர் தன் குழந்தை அழுததால் அவரை சமாதானப்படுத்தி தூங்க வைக்க, அவர் வேறு ஓர் அறைக்குச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது தங்கள் பெட்ரூமின் கட்டிலுக்கு அருகில் எரிக் சுயநினைவின்றி உடல் மிகவும் குளிர்ச்சியாகிக் கிடந்ததை பார்த்து அதிர்ந்து, அவசர உதவி எண்ணான 911-க்கு அழைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவலர்கள் எரிக் உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதி செய்தனர்’ எனக் காவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், எரிக் உயிரிழந்ததற்கு கூரி ரிச்சின்ஸ்தான் காரணம் என அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். எரிக்கின் பிரேத பரிசோதனை மற்றும் நச்சுயியல் அறிக்கையில், அவர் ஃபென்டானிலின் என்ற வலி நிவாரணி மருந்தை ஐந்து மடங்கு அதிகமாக உட்கொண்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் கூரி, தன் குழந்தையை சமாதானப்படுத்த சென்றதாகக் கூறிய அந்த நேரத்தில் அவரது போனில் இருந்து ஒருவருக்கு தொடர்ந்து செய்திகள் அனுப்பப்பட்டு பின்னர் அவை அனைத்தும் டெலீட் செய்யப்பட்டுள்ளன. ஆனால் விசாரணையில், தன்னிடம் போன் இல்லை கணவர் இருந்த அறையிலேயே போனை விட்டு சென்றதாக கூரி சொல்லியதில் சந்தேகம் அடைந்து அவர் மீதான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அடையாளம் தெரியாத ஒருவர் தடை செய்யப்பட்ட ஃபென்டானிலின் மருந்தை, கூரி ரிச்சின்ஸுக்கு விற்றுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.