சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

அணையாது எரியும் அநீதி! - குற்றப்பிரதேசம்

குற்றப்பிரதேசம்
பிரீமியம் ஸ்டோரி
News
குற்றப்பிரதேசம்

‘நீங்கள் சொல்வது தவறு. எங்கள் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை எதுவும் நடைபெறவில்லை’ என்கிறார் அவர்.

குபுகுபுவென்று நெருப்பு பற்றி எரியத் தொடங்குகிறது. காவலர்கள் தடுப்பு அரண் போல் சுற்றி நிற்கிறார்கள். செப்டம்பர் 30, அதிகாலை 2 மணி. ஆஜ்தக் நிருபர் தனுஸ்ரீ பாண்டே சீருடை அணிந்த ஒவ்வொருவரிடமும் மைக்கை நீட்டி திரும்பத் திரும்ப மன்றாடுகிறார்.

‘என்ன நடந்துகொண்டிருக்கிறது? அங்கே என்ன எரிந்துகொண்டிருக்கிறது என்று சொல்வீர்களா? உங்களில் யாராவது ஒருவராவது வாய் திறக்கலாமே? இது ஹத்ராஸ் பட்டியலினப் பெண்ணின் சடலமா? இல்லையென்றாவது சொல்லுங்களேன்? இங்கே நம் கண்முன்னால் எரிந்துகொண்டிருப்பது ஒரு பெண்ணின் சடலம்தானா? இங்கே ஏன் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் ஒருவர்கூட இல்லை? தயவு செய்து யாராவது சொல்லுங்களேன்.’

‘எனக்குத் தெரியாது’ என்கிறார் ஒரு காவலர். ‘அதைச் சொல்ல எனக்கு அனுமதி இல்லை’ என்கிறார் இன்னொருவர். ‘நீ மேலதிகாரிகளிடம் சென்று கேட்டுக்கொள்’ என்கிறார் மற்றொருவர். ‘சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதுதான் என் பணி. என் கடமையைத்தான் நான் செய்கிறேன்’ என்கிறார் வேறொருவர்.

‘ஒரு பாவமும் செய்யாத யூதர்களை ஏன் வதைத்தீர்கள்? ஏன் ரகசியமாகக் கொன்றீர்கள்?’ என்று வழக்கு விசாரணையில் கேட்கப்பட்டபோது நாஜி அதிகாரிகளிடமிருந்தும் இதே பதில்களைத்தான் பெறமுடிந்தது.

அணையாது எரியும் அநீதி! - குற்றப்பிரதேசம்

சடலத்தை எரியூட்டிய கையோடு அடுத்த அடக்குமுறைக்குத் தயாராகிவிட்டது உ.பி காவல்துறை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க கடந்த வியாழனன்று ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் இருமுறை காவல் துறையினரால் மூர்க்கத்தனமாகத் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுல் நிலைகுலைந்து சரிந்ததையும் பிரியங்காவின் குர்தாவைப் பிடித்து ஓர் ஆண் காவலர் தடுத்து நிறுத்தியதையும் நேரலையில் காணமுடிந்தது. திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓபிரையன், ராஷ்ட்ரிய லோக் தள் தலைவர் ஜயந்த் சவுத்ரி உள்ளிட்டோரும் காவல்துறையினரால் மோசமாக நடத்தப்பட்டனர். பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாடியும் ஆக்ராவில் சிறிதுநேரம் தடுத்து நிறுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில், பா.ஜ.க தலைவரும் முன்னாள் ஹத்ராஸ் எம்.எல்.ஏ-வுமான ராஜ்விர் சிங் கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள நான்கு தாக்கூர் ஆண்களுக்கு ஆதரவாக வெளிப்படையாகக் களமாடிக்கொண்டிருக்கிறார். ‘நீங்கள் சொல்வது தவறு. எங்கள் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை எதுவும் நடைபெறவில்லை’ என்கிறார் அவர்.

மற்றொரு பா.ஜ.க எம்.எல்.ஏ-வான சுரேந்திர சிங் ஏதோ குற்றம் போலொன்று நடைபெற்றிருக்கிறது என்று மட்டும் ஒப்புக்கொள்கிறார். ஆனால் அதற்குக் காரணம் கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபட்ட நான்கு உயர் ஆதிக்கச்சாதி தாக்கூர் ஆண்கள் அல்ல, காவலர்களால் ரகசியமாக எரியூட்டப்பட்ட 20 வயது இளம்பெண்தான் என்பது அவர் கருத்து. ‘பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை ஆரம்பத்திலிருந்தே புத்திமதி சொல்லிக்கொடுத்து வளர்த்துவந்தால் இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்காது’ என்பது அவருடைய நியாயம்.

தேசம் முழுக்கக் கோப அலைகள் பொங்கி வந்ததைப் பார்த்த பிறகு, அலகாபாத் நீதிமன்றமே அதிர்ந்து வாய் திறந்த பிறகு, ‘நியூயார்க் டைம்ஸ்’ முதல் ‘கார்டியன்’ வரை சர்வதேச அளவில் இந்தக் கொடூரம் ஒரு விவாதப் பொருளாக மாறிய பிறகு, இரண்டாவது மோடியாகவும் பிரகாசமான பிரதமர் வேட்பாளராகவும் இந்துத்துவ ஆதரவாளர்களால் உயர்த்திப் பிடிக்கப்படும் உ.பி முதல்வர் ஆதித்யநாத் யோகி சிடுசிடுப்போடு அசைந்துகொடுக்கவே ஆரம்பித்தார். அப்போதும்கூட, ஒரு பக்கம் சிபிஐ விசாரணை என்று அறிவித்துவிட்டு இன்னொரு பக்கம் ஹத்ராஸ் இளம்பெண்ணுக்கு எதிரான பிரசாரப் போரையே அவர் முன்னெடுத்தி ருக்கிறார்.

மும்பையைச் சேர்ந்த ‘கான்செப்ட் பிஆர்’ என்னும் தனியார் விளம்பர நிறுவனம் களமிறக்கப்பட்டுள்ளது. இவர்கள் தாங்கள் கண்டறிந்த உண்மைகளைப் பரவலாக இணைய ஐடி செல்கள் மூலமாகவும் இன்னபிற வழிகளிலும் மக்களிடையே எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

அணையாது எரியும் அநீதி! - குற்றப்பிரதேசம்

அப்படி என்ன கண்டறிந்திருக்கிறார்கள் இவர்கள்? சம்பந்தப்பட்ட இளம்பெண் பாலியல் வன்முறையைச் சந்திக்கவேயில்லையாம். நடப்பதெல்லாம் எதிர்க்கட்சிகளின் சதியாம். உள்ளூர் எதிரிகள் போக, சர்வதேச அளவிலும் யோகி அரசுக்கும் மோடி அரசுக்கும் எதிராகச் சதி வேலைகள் நடக்கின்றனவாம். உப்புப்பெறாத ஹத்ராஸை எல்லோரும் சேர்ந்து ஊதிப் பெருக்குகிறார்களாம். ஆம், ஒரு சில பிசகுகள் நேர்ந்திருக்கலாம். அதைச் சரிசெய்யத்தான் யோகி இருக்கிறாரே? எனவே, இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்காமல், அடுத்த காரியத்தைப் போய்ப் பாருங்கள்.

உத்தரப்பிரதேசத்தைப் பற்றி மேலோட்டமாக மட்டுமே தெரிந்து வைத்திருப்பவர்களும்கூட ஹத்ராஸ் ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல என்பதை அறிவார்கள். இந்த நிமிடம்வரை உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு பெண்ணால் குறைந்தபட்சம் காவல் நிலையத்துக்குச் சென்று தனக்கு நேர்ந்ததை ஒரு புகாராகக்கூடப் பதிவு செய்யமுடியாது என்பதுதான் உண்மை.

அலிகாரில் பாலியல் வன்முறையை எதிர்கொண்ட ஒரு பட்டியலினப் பணிப்பெண் புகார் அளிக்கக் காவல் நிலையம் சென்றபோது, அங்குள்ள அதிகாரி ஒருவர் அவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘உன்னைத் தொல்லை செய்யும் அளவுக்கு அப்படியொன்றும் நீ அழகாக இல்லையே’ என்று சொல்லித் திருப்பியனுப்பியிருக்கிறார்.

அம்ரோஹாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 19 வயதுப் பெண் தன் தந்தையுடன் காவல் நிலையம் சென்றபோது ஓர் அதிகாரி அமர வைத்து அறிவுரை சொல்லி அனுப்பியிருக்கிறார். ‘இதோ பாருங்கள், புகாரெல்லாம் கொடுப்பதன்மூலம் ஒரு பயனும் உங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. இதில் சாதியெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறது. பேசாமல் சம்பந்தப்பட்ட இருவருக்கும் திருமணம் பேசி முடித்துவிடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.’

பாலியல் வன்கொடுமை குறித்து முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்ய 200 தினங்களுக்கு மேல் காத்திருக்கும் பெண்கள் பலர் உபியில் இருக்கிறார்கள் என்கிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஓர் ஆய்வறிக்கை. ஹத்ராஸ் பெண்ணும்கூட தான் சந்தித்த முதல் பாலியல் சீண்டல் குறித்துப் புகார் அளிக்க இறுதிவரை முயன்று முடியாமலேயே போய்விட்டது. அவரை மரணப்படுக்கையில் தள்ளிய இரண்டாவது வன்கொடுமையைப் பதிவு செய்ய அவர் எட்டு தினங்கள் போராட வேண்டியிருந்தது.

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் மட்டுமல்ல. இந்தியாவின் ஒட்டுமொத்த குற்றத்தலைநகரமாக அறிவிப்பதற் கான எல்லாத் தகுதிகளையும் உத்தரப்பிரதேசம் கொண்டிருக்கிறது. இங்குள்ளதைப் போல் வேறெங்கும் சாதிவெறியும் மதவெறியும் இவ்வளவு அப்பட்டமாகக் கைகுலுக்கிக்கொண்டதில்லை. ஒரு பட்டியலினப் பெண்ணா, நான்கு ஆதிக்கச்சாதி தாக்கூர்களா என்றால் யோகி அரசு தாக்கூர்கள் பக்கம் நிற்கவே விரும்பும். அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருப்பது இந்துத்துவ அரசு மட்டுமல்ல, செல்வாக்கு மிக்க தாக்கூர் ராஜும்தான்.

நாஜிக்களின் வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுவதுண்டு. அவற்றுள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு காரணம், அகந்தை. நாளை யோகியின் வீழ்ச்சிக்கும் இதே காரணத்தை வரலாறு சொல்லப்போகிறது.