சென்னை, கே.கே.நகர் அம்பேத்கர் குடிசைமாற்றுப் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்கிற மண்டக்குட்டி ரமேஷ். இவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. மேலும், இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகியாக இருந்தார். இவர்மீது சென்னையிலுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, ஆள் கடத்தல், அடிதடி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மேலும், சென்னை காவல்துறையின் ஏ கேட்டகரி ரௌடி பட்டியலிலும் ரமேஷின் பெயர் இருந்தது.

இந்த நிலையில் சென்னை கே.கே நகர், பாரதிதாசன் காலனி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே இன்று காலை ரமேஷ், டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்மக் கும்பல், ரமேஷை சராமாரியாக வெட்டியது, இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ரமேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் ரமேஷ் கொலை குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து போலீஸார் பேசுகையில், ``கொலைசெய்யப்பட்ட ரமேஷ்மீது 2014, 2017, 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதில் கொலை வழக்குகளும் இருக்கின்றன. ரியல் எஸ்டேட் தொடர்பான பிசினஸ் டீலிங்கிலும் ரமேஷ் ஈடுபட்டுவந்தார். அதனால் ரமேஷுக்குப் பலருடன் முன்விரோதம் ஏற்பட்டுவந்தது.

அதன் காரணமாக அவர் கொலைசெய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தப்பி ஓடிய கொலையாளிகளைப் பிடிக்க நான்கு தனிப்படைகளை அமைத்திருக்கிறோம். சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வுசெய்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவார்கள்" என்றனர்.