மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 11

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 11
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 11

“பகை, வீட்டை முட்செடிபோல் செழிப்பாக வளர்ந்து மூடும். விதைத்தவனையும் அது காயப்படுத்தும்!” - மூர்க்கர்கள்

கொல்லப்பட்ட திம்மராசுவின் மனைவி, விடிந்தும் விடியாததுமாக கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நெடுநேரமாகத் தன் கைக்குழந்தையோடு அமர்ந்திருந்தாள்.

“புருஷன் செத்து ரெண்டு வாரம்தான் ஆகுது. பதினாறுகூட முடியல. இங்கல்லாம் வரக் கூடாதும்மா... பெரிய ஆபீசர் வந்தா எங்களத்தான் மானாங்காணியா ஏசுவாரு... கிளம்பும்மா. போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏதாவது கேடு வந்து தொலைக்கப்போவுது.”

அவள் எதையும் கண்டுகொள்ளாமல் அங்கேயே ஓரமாகக் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தாள்.

இன்ஸ்பெக்டர் உள்ளே நுழையும்போதே அவளை கவனித்தார்.

“என்னவாம்..?’’

“திம்மராசு செத்து பதினாறாவது நாள் சாமி கும்பிடுதாங்களாம். அவன் போட்டோ ஒண்ணு வேணுமாம் அதான்...’’

“நம்ம என்ன போட்டா ஸ்டூடியோவா வெச்சுருக்கோம்... அவன் போட்டோ நம்மகிட்ட ஏதுய்யா?”

“இல்லைங்கய்யா அவன் இங்க கேஸுக்கு வந்தப்போ, அக்யூஸ்ட்ட எடுத்த போட்டோ இருக்கு. அத ஞாபகம்வெச்சு கேக்குது அந்தம்மா...’’

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 11

“செத்துப்போன அன்னைக்கி ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சிருந்தானுவ. அது எங்கருந்து வந்துச்சாம்?”

“நானும் கேட்டேங்கய்யா... அது செத்த அன்னைக்கி மார்ச்சுவரில தலைய ஒட்டவெச்சு எடுத்த போட்டோவாம். அதப் பார்த்தாலே பிள்ள மிரளுதானாம். வேற எங்குனயும் அவன் ஒத்த போட்டோவும் பிடிச்சதில்லயாம். நம்மதான் அந்த மூஞ்சிய மொத போட்டோ எடுத்திருக்கோம்போல.”

“பச்சப்புள்ளைங்க... நாளப்பின்ன அப்பன் முகம் எப்படி இருக்கும்னு கேட்டா, காட்டுறதுக்கு ஒரு படம் வேணும். கொஞ்சம் குடுத்தீங்கன்னா. அதவெச்சு வரைஞ்சுட்டு திருப்பித் தந்துர்றோம்.’’ - திம்மராசுவின் மனைவி பாவமான முகத்தோடு கேட்டாள்.

“யோவ்... அவன் போட்டோ இருக்காய்யா?”

காவலர் கேஸ் ஃபைலிலிருந்து நொடிக்குள் எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தார்.

“ஓ... ரெடியாத்தான் எடுத்து வெச்சுருக்கீங்கபோல...’’

தீப்பெட்டி அளவிலான அந்தச் சிறிய புகைப்படத்தில் திம்மராசுவின் முகத்தைப் பார்த்துவிட்டு, அந்தப் பெண்ணிடம் கொடுக்கச் சொல்லி காவலரிடம் நீட்டினார். காவலர் அதை வாங்கி அவளிடம் கொடுத்தார்.

திம்மராசுவின் மனைவி அதை வாங்கி, உள்ளங்கையில் மறைத்துவைத்திருந்த இருபது ரூபாயைப் பொத்தினாற்போல் அவர் கையில் கொடுக்க, இன்ஸ்பெக்டர் அதைப் பார்க்க, காவலர் அந்தக் காசை வாங்க மறுத்து, “அட ஏம்மா என்னய வம்புல மாட்டி விடுற. எடுத்துட்டுப் போம்மா’’ என்று விரட்டினார்.

திம்மராசுவின் மனைவி, “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த ஆளுதான கேட்டான். இப்போ என்னமோ யோக்கியன் மேனிக்குக் கிடந்து நடிக்கான்’’ என்று புலம்பியவாறே கிளம்பினாள்.

“எதெதுக்குத்தான் பணம் வாங்கணும்னு வெவஸ்தையே கிடையாதா?”

இன்ஸ்பெக்டர் அந்தக் காவலரைப் பிடித்து திட்டத் தொடங்கினார். அப்போதுதான் ஸ்டேஷனுக்கு அந்த போன் வந்தது.

“சார் தூத்துக்குடிக்கு மேக்கே கருவக்காட்டுக்குள்ள ஒரு ஆளு முழுக்க எரிஞ்சு கரிக்கட்டையா கிடக்குதானாம் சார்” என்றார் ஏட்டையா. இன்ஸ்பெக்டர் தன்னுடன் இரண்டு காவலர்களை அழைத்துக்கொண்டு விறுவிறுவென ஸ்பாட்டுக்குப் புறப்பட்டார்.

அடையாளம் சொன்ன இடத்துக்கு இன்ஸ்பெக்டர் போனபோது, இரண்டு பேர் சற்றுத் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அடர்ந்த கருவேலம் புதருக்குள் கரிக்கட்டையாக ஓர் உருவம் கிடந்தது. முட்கள் அடர்ந்திருந்ததால், அதனருகே செல்வது சிரமமாயிருந்தது. இன்ஸ்பெக்டர் அங்கு நின்று கொண்டிருந்தவர்களை அழைத்து முட்களை ஒதுக்கிவிடச் சொன்னார். ‘இவ்வளவு பெரிய உருவம் எரிஞ்சிருக்கு... கொஞ்சம்கூட வாடையில்லயே...’ இன்ஸ்பெக்டருக்குச் சந்தேகம் வந்தது.

முட்களை ஒதுக்கிய ஆட்கள் சப்தம் கொடுத்தார்கள். “சார்...” இன்ஸ்பெக்டர் அருகில் சென்று பார்த்து எரிச்சலானார்.

“ச்ச்சேய்... எந்த நாயிலே ஸ்டேஷனுக்கு போன் பண்ணுனது?” வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இருவரும் அங்கிருந்து தெறித்து ஓடினார்கள். முழுக்க வைக்கோல் திணிக்கப்பட்ட சோளக்கொல்லை பொம்மை ஒன்று அசப்பில் ஓர் ஆள் கருகிக்கிடப்பதுபோலக் கிடந்தது.

உடன் வந்த காவலர் சொன்னார், “சார் புது வீடு கிரகப்பிரவேசம் பண்ணியிருப்பாங்க சார். அந்த திருஷ்டி பொம்மையைத்தான் எவனோ கொண்டுவந்து இங்க எரிச்சுப் போட்டிருக்கான்.”

“யோவ்... ஏதாவது சொல்லிரப் போறேன். இந்த முள்ளுக்காட்டுக்குள்ள எவன்யா வீடு கட்டிருப்பான்... சுத்தி ரெண்டு மைலுக்கு ஒத்த வீடு இல்ல. இது என்ன முச்சந்தியா?”

இன்ஸ்பெக்டர் இன்னும் கொஞ்ச தூரம் உள்ளே நடந்துபோனார். அதேபோல அங்கங்கு எப்போதோ எரிந்து கருகிப்போன சில பொம்மைகள் கிடந்தன. இது எல்லாமுமே ஓரிரு வாரங்களுக்குள்ளாகக் கொண்டுவந்து எரித்தவைபோலத் தெரிந்தது. கவனமாக அதை ஆராய்ந்தபோது, பொம்மைகளுக்கு நடுவே கண்ணாடி சில்லுகளும், துருவேறிய ஆணிகளும் கிடந்தன. இன்ஸ்பெக்டருக்குப் புரிந்தது.

“யாரோ ஒரு ஆளை நாட்டு வெடிகுண்டு வீசிக் கொல்றதுக்கு இங்கவெச்சு, தீவிரமா பயிற்சியெடுத்திருக்கானுங்க.” இன்ஸ்பெக்டர் தனக்கு மட்டும் கேட்கும்விதமாகச் சொல்லிக்கொண்டார்.

ராம் பைக்கை ஓட்டிக்கொண்டு தெருவுக்குள் நுழையும்போது, ஜானின் வீட்டின் முன்னால் பெண்கள் கூட்டமாக எதையோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான்கைந்து வீடுகளுக்கு முன்பே வண்டியை நிறுத்திவிட்டு ராம் அங்கு வந்தான். பெண்களின் சிரிப்புச் சப்தமும், கூடவே பயத்தில் கத்தும் சப்தமும் கேட்டன. அவனுக்கு எதுவும் தென்படவில்லை. தெருவில் கவிழ்த்துகிடந்த ஒரு பெரிய ஆட்டு உரலின் மேலே ஏறி நின்று பார்த்தான்.கூட்டத்தின் நடுவே ஜான் தன் கையில் ஒரு நீளமான, ஒல்லியான பச்சைக்குச்சியின் மேல் நுனியைப் பிடித்திருப்பதுபோல் தெரிந்தது. யாரோ ஒரு பெண் பயந்தபடியே அந்தக் குச்சியைத் தொட்டு உருவிவிட்டதும், குச்சி வளைந்து நெளிந்து ஜானின் கையில் சுற்றிக்கொண்டது. கூட்டத்துக்குள் சிறுவர்கள் கத்தினார்கள். “டேய்... பச்சப் பாம்புடா...’’ ஜான் மீண்டும் கையில் சுற்றிய பச்சையின் வாலை எடுத்துவிட்டான். மீண்டும் ஓர் இளம்பெண் பயத்தில் வேர்த்த தன் கையால் அந்தப் பாம்பின் உடலை மேலிருந்து கீழாக ஒரு முறை உருவிவிட்டாள்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 11

“வேற யாரும் உருவிவிடணுமா.?’’

இன்னும் சில பெண்கள் “நானு நானு...” என்று சொல்லிக்கொண்டு முன்னால் வந்தார்கள். ராம் கத்தினான்.

“டேய்... ஜான்... டேய்...”

பெண்களின் சப்தத்துக்கு நடுவே அவன் குரல் எட்டவில்லை. வீட்டிலிருந்து வெளியே வந்த பனிமலர்தான் ராமை கவனித்தாள்.

“டேய் ஜான்சா... ராம் வந்துருக்கான்.” ஜான் கூட்டத்தின் நடுவிலிருந்து எட்டிப் பார்த்தான்.

“ராம்... வா வா நீயும் இந்தப் பச்சப் பாம்பு உடம்பப் பிடிச்சு ஒருக்கா உருவிவிட்டுக்கோ... டேய் வாடா...” கூட்டத்தின் நடுவே பாம்பை உயர்த்திக் காண்பித்தான்.

“ஏய்... வாடா... லேட்டாகுது.’’ ராம் கத்தினான். “இருடா வர்றேன்...” என்று சொன்னபடியே பாம்பின் தலையை பனிமலரின் கையில் கொடுத்தான். ராமை கவனித்துக்கொண்டே பனிமலர் அதன் தலையைப் பிடிக்காமல் கழுத்தில் கைவைத்தாள். விருட்டென்று தலையைச் சாய்த்து அவள் கையைக் கடிப்பதுபோல் வந்தது பச்சைப் பாம்பு.

“யேய்... தலைய நசுக்கிப் பிடி.” ஜான் அவளைத் திட்டினான். கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஜான் ஓடி வந்தான்.

“வாடா போகலாம்...” பனிமலர் தன் கையில் பாம்பைப் பிடித்துக்கொண்டு ராம் கிளம்பிச் செல்வதையே பார்த்தபடியிருந்தாள்.

“ஏதுடா இந்த பச்சப் பாம்பு?” ராம் கேட்டான்.

“எதிர்த்த வீட்டு முருங்க மரத்துல தொங்குச்சிடா. பச்சைப் பாம்ப ஒருக்கா கையால உருவிவிட்டா, அவங்க கைப்பக்குவம் சமையல்ல செம ருசியா இருக்குமாம். அதான் எல்லாப் பொம்பளைங்களும் ஆளாளுக்கு நானு நானுன்னு வர்றாங்க.’’

“ம்...’’ ராம், பைக்கை லட்சுமி டாக்கீஸ் பக்கமாக ஓட்டினான்.

இன்ஸ்பெக்டர் வெளியே போயிருந்த நேரத்தில், போலீஸ் ஸ்டேஷனிலிருந்து காவலர் பாலமுருகன் சின்ன பர்லாந்து வீட்டுக்குப் போன் செய்து, கருவக்காட்டுக்குள் பொம்மைகள் எரிந்துகிடந்த விஷயத்தைச் சொன்னார்.

“உங்க ஆட்கதானான்னு விசாரிச்சிக்கோங்க. அப்படி அவுங்க யாரும் இல்லாட்டி... கவனமா இருக்கச் சொல்லுங்க... யாரோ பிளான் பண்றானுவோ.”

அன்று சாயந்தர நேரத்தில், கடா பாண்டி பழைய துணிக் கடையிலிருந்து கழித்துப்போட்ட சட்டைகள் நான்கைந்தை எடுத்துக்கொண்டு, கோணிக்குள் வைக்கோல் பிரியைத் திணித்துக்கொண்டு கருவக்காட்டுக்குள் தனியாக நுழைந்தான்.

அவன் கையில் ஒரு பித்தளைத் தூக்குச்சட்டியும் அதனுள்ளே நான்கைந்து நாட்டு வெடிகுண்டுகளும் சணல் கயிற்றால் சுற்றிவைக்கப்பட்டிருந்தன!

(பகை வளரும்)