மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 12

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 12
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 12

“ஒருவன் உயிர் முடிந்தாலும் அவன் பகை முடிவதில்லை!” - மூர்க்கர்கள்

மாலை வானம் மஞ்சளும் சிவப்புமாகக் காட்சியளித்தது. வ.உ.சி மைதானத்தில் ஹாக்கி பேட்டால் பந்தை லாகவமாகத் தட்டிக்கொண்டு கோல் போஸ்ட்டை நோக்கிப் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தான் ஜான். எதிரணியினர் அவனிடமிருந்து பந்தைக் கைப்பற்ற முடியாமல் அவன் பின்னாலேயே வேகுவேகுவென மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தனர். மைதானத்தின் சுற்றுப்பாதையிலிருந்து ராம், தன் நண்பனைக் கைதட்டியும் விசிலடித்தும் உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தான். பிராக்டீஸ் ஆட்டத்தை வழிநடத்திக்கொண்டிருந்த கோச், ராமின் அருகில் வந்து கோபமாகக் கத்தினார்.

“எவம்லே அது... கிரவுண்ட்டுல விசிலடிக்கக் கூடாதுன்னு எத்தன தடவ சொல்லுதேன்... இங்க நான் மட்டும்தான் விசில் அடிக்கணும். பெறவு என்ன மயித்துக்குக் கழுத்துல விசில் தொங்கப்போட்டுருக்கேன்... அப்புறம் நான்தான் ஏதோ இன்ஸ்ட்ரக்‌ஷன் குடுக்கேன்னு என்னய திரும்பித் திரும்பிப் பாப்பானுங்க. இன்னொரு தரம் எவன் விரலாவது வாய்க்குப் போச்சு...’’ சொல்லிக்கொண்டிருக்கும்போதே பின்பக்கமிருந்து வேறு யாரோ ஒருவன் பலமாக விசிலடித்தான்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 12

கோச் வேகமாக “எவம்லே அது...’’ என்று பல்லைக் கடித்துக்கொண்டு அங்கே போனார். ஜான் லாகவமாகப் பந்தை கோல் போஸ்ட்டின் அருகில் இடது ஓரமாக எடுத்துப் போய்விட்டான். ஓங்கி உதைத்து கோலுக்குள் தள்ள வேண்டியதுதான் பாக்கி. எதிரணியின் ராஜபாண்டி சமயம் பார்த்து, பந்தை அடிப்பதுபோல் அருகில் வந்து ஜான்மீது விழுந்து அவனைக் கீழே தள்ளிவிட்டான். ஜான் தடுமாறிக் கீழே விழ அடுத்த நொடி, பந்து எதிரணிக்காரன் ஒருவனிடம் வசமாகச் சிக்கிவிட்டது. ஜானுக்கு சுள்ளென்று வந்தது. கோபமாக கோச்சைப் பார்த்தான். அவர் அமைதியாக விளையாட்டைப் பார்த்தபடியிருந்தார். ராம் எகிறிக்கொண்டு கோச்சிடம் சண்டைக்குப் போனான்.

“சார் என்ன ‘இதுக்கு’ உங்க கழுத்துல விசில் தொங்குது. ஊதி ரெட் கார்டு காட்டுங்க சார்.’’

“எனக்குத் தெரியும் அந்தால போலே...” கோச்சும் பதிலுக்குக் கத்தினார்.

“ஏ... விடுலே பாத்துக்கலாம்...’’ ஜான் உள்ளேயிருந்து ராமைப் பார்த்துக் கையால் சைகை செய்தான். கோபமும் ஆத்திரமுமாக ஒரு முடிவோடு தூரத்திலிருக்கும் பந்தை நோக்கி ஓடினான். பந்தின் அருகில் வந்ததும் கண்மண் தெரியாமல் இஷ்டத்துக்குத் தரையில் ஓங்கிச் செதுக்கி அடித்தான். அவனது நோக்கம் பந்தை அடிப்பதல்ல என்பது எல்லோருக்கும் புரிந்தது. எதிரணிக்காரன் ஒருவனும் அருகில் வரவில்லை. வந்தால் நிச்சயம் மூட்டுக் கிண்ணத்தை அடித்துப் பெயர்த்துவிடுவான். அப்புறம் இனி எப்போதும் விளையாட முடியாது. ஏன் நடக்கக்கூட முடியாது. எல்லோரும் பந்தைவிட்டு கொஞ்சம் பின்னுக்குப் போனார்கள். அவன் அருகில் யாரும் வரவில்லை. ராஜபாண்டி பந்தின் பின்னால் ஓடியபடியே தன் அணிக்காரர்களிடம் சொன்னான்.

“அந்த மயிராண்டி காலுலயே அடிங்கடா...”

ஆனால் யாருக்கும் தைரியமில்லை. ஜான் இன்னும் மூர்க்கமாக ஹாக்கி மட்டையை இறுக்கமாகப் பிடித்தபடி, பந்தை இழுத்துக்கொண்டே வந்து அவ்வளவு வேகமாக ஓடி, எந்தத் தடையுமில்லாமல் போய் கோல் போட்டான்.

ராஜபாண்டி பேட்டைப் பிடித்துக்கொண்டு ஜானை அடிப்பதுபோல் வேகமாக ஓடினான். ராமும் அங்கிருந்த பேட்டை எடுத்துக்கொண்டு வேகமாக கிரவுண்டுக்குள் இறங்கி ஓடினான். கோச் காட்டமாக விசில் அடித்தார். ராஜபாண்டி ஜானை அடித்துவிடுவான் என்பதுபோல் அருகில் போய் நின்றுவிட்டு “பயந்துட்டான்டா...’’ என்று சொல்லிவிட்டு கேலியாகச் சிரித்தான். கூடவே ராஜபாண்டி அணிக்காரர்கள் எல்லோரும் சிரித்தார்கள். அதற்குள் அங்கே வந்துவிட்ட ராமைப் பார்த்து ஜானின் அணிக்காரன் வசந்த் “ஏல... நீயேம்ல கிரவுண்டுக்குள்ள வந்த...’’ என்று கேட்டான்.

கோச், ராமை வெளியே வரும்படி விசிலைத் தொடர்ச்சியாக ஊதிக்கொண்டேயிருந்தார். ஜான் கோச்சிடம் கத்தினான்.

“சப்ஸ்டிட்யூட் சார்.”

“யாருக்குல?”

“வசந்துக்கு சார்...’’

“ஏ... நான் எப்படா கேட்டேன்... எனக்கு சப்ஸ்டிட்யூட் வேணும்னு...”

ராமைப் பார்த்து ‘நீயேன்டா கிரவுண்டுக்குள்ள வந்த...’ என்று கேட்ட வசந்த், இப்போது கிரவுண்டுக்கு வெளியே போய்க்கொண்டிருந்தான்.நண்பர்கள் இருவரும் இப்போது எதிரணியை குறிப்பாக, ராஜபாண்டியை தீர்க்கமாகப் பார்த்துக்கொண்டார்கள்.

ராஜபாண்டி வேறு யாருமல்ல. காசி அண்ணாச்சியின் மகன்தான். அவன் அப்பாவின் பண பலமும், செல்வாக்கும் அவனை ஒரு பணக்கார வீட்டுத் தற்குறிப் பிள்ளையாக ஆக்கிவைத்திருந்தது. விளையாட்டை எப்போதும் விஷமமாகவும் விஷமாகவுமே அவன் அணுகினான். இத்தனைக்கும் ராஜபாண்டி, ஜானுக்கு நிகராக நன்றாக விளையாடத் தெரிந்தவன்தான். ஆனால், ஓர் எளிய மீனவக் குடும்பத்துப் பையன் தனக்குச் சரிக்குச் சமமாக கிரவுண்டில் ஆடுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஜான் கிரவுண்டில் இறங்கினாலே அவன் நெஞ்சு பொரும ஆரம்பித்துவிடும்.

கருவக்காட்டுக்குள் யாரோ வைக்கோல் பொம்மைகளின்மீது நாட்டு வெடிகுண்டை எறிந்து பயிற்சி எடுக்கும் சேதி இரண்டு பர்லாந்துகளின் காதுகளுக்கும் வந்துசேர்ந்தது. ‘நம்ம ஆட்கள் யாரும் இந்த வேலையில் இறங்கியிருக்கீங்களாடே... அப்படி ஏதும் நோக்கமிருந்தா நாலஞ்சு மாசம் கழிச்சுப் பண்ணுங்க. துறைமுகம் லோடுமேன் சங்கத் தேர்தல் வரப்போவுது... என்னத்தையாவது ஏடாகூடமாப் பண்ணித் தொலைச்சு கடல் யாவாரத்த கவுத்தி விட்டுடாதீங்க சொல்லிப்புட்டேன். அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன்.’ இரண்டு பர்லாந்துகளும் வேறு வேறுவிதமாக தங்கள் குழுவினரை எச்சரித்திருந்தார்கள்.

இரண்டு தரப்பினரும் தங்களுக்குள் அப்படி யாரும் பயிற்சி எடுக்கவில்லையென உறுதியாகச் சொன்னாலும், எதிரெதிர் தரப்புமீது தங்களின் சந்தேகத்தை முன்வைத்திருந்தார்கள்.

சமுத்திரத்துக்கு கடா பாண்டி மேல் லேசாகச் சந்தேகம் வந்திருந்தது. ஆனால், தான் அப்படி ஒரு காரியத்தைச் செய்யவே இல்லையென்று கடா பாண்டி சாதித்து சத்தியமே செய்தான். அவன்மீது அடிக்கடி கரிமருந்தின் வாடை வீசுவதும், சொல்லிக்கொள்ளாமல் அவன் காணாமல்போய்விட்டுத் திரும்ப வருவதுமாக இருப்பதும் சமுத்திரத்துக்குச் சந்தேகத்தை வலுவாக்கியது. குரூஸிடம் சொல்லி, அவன் நடவடிக்கையைக் கண்காணிக்கச் சொன்னான் சமுத்திரம். அதனால், கடா பாண்டி கொஞ்ச நாள் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு குரூஸ் அண்ணன் வரும்போதெல்லாம் வீட்டிலேயே கிடந்தான். குரூஸ் அண்ணனும், “அவன் இல்லப்பா... வேற யாராவதாயிருக்கும்” என்று ஜவாப் சொல்லிவிட்டு அமைதியாகியிருந்தார்.

கடா பாண்டிக்கு மீண்டும் கை அரிக்கத் தொடங்கியது. கிழிசல் சட்டையையும், வைக்கோல் போரையும் தேடி அலைந்தான். இந்த முறை இடத்தை மாற்றிவிட்டு, திருச்செந்தூர் ரோட்டுப் பக்கம் வேறொரு பகுதியைக் குறித்துவைத்தான். அதேசமயம் சின்ன பர்லாந்தின் ஆட்கள் கருவக்காட்டுப் பக்கம் வைக்கோல் பொம்மையோடு யாராவது வருகிறார்களாவென கருவக்காட்டை நோட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள். பெரிய பர்லாந்தின் ஆட்களும் வைக்கோல் பிரியோடு யாராவது தென்படுகிறார்களா... பிடித்து நாலு சாத்து சாத்தலாமென அந்தப் பக்கமாகவே திரிய ஆரம்பித்தார்கள். இருவர் கையிலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் யார் யாரோ மாட்டினார்கள். எங்கிருந்தாவது கொஞ்சமாக மாட்டுக்கு வைக்கோல் திருடிக்கொண்டு நடந்தோ, சைக்கிளிலோ போனவர்கள் அடி வாங்கினார்கள். சில நேரங்களில் நோட்டம்போட வந்த இரண்டு தரப்பினரும் எதிரெதிர் திசையில் சந்தித்துக்கொண்டு, ‘இவன்தான்... அவன்தானென்று’ தப்புத் தப்பாகத் தாக்கல் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

யார் யாரோ தாக்கல் சொன்னாலும், சமுத்திரத்துக்கும் கொடிமரத்துக்கும் இது வேறு யாரோ செய்துகொண்டிருக்கும் வேலை என்பதுபோல் மெல்ல உறுத்த ஆரம்பித்தது. கொடிமரத்தின் கண்களுக்கு அடிக்கடி ரயில்வே கேட் அருகே கடா பாண்டி தன்னை நோக்கி நாட்டு வெடிகுண்டை வீசிய சம்பவம் வந்து வந்து போனது. லூர்தம்மாள்புரத்து ஆட்களிடம் பிரத்யேகமாக கடா பாண்டியின் நடவடிக்கைகளை அவன் நோட்டமிடச் சொன்னான். இந்த விஷயம் மெல்ல கடா பாண்டிக்கும் பிடிபட ஆரம்பித்தது. கொடிமரத்தின் ஆட்கள் தன் வீட்டை நோட்டம் போடுவதையும், பீடி சிகரெட் வாங்குவதுபோல் பெட்டிக்கடைகளில் விசாரித்துவிட்டுப் போவதையும் அவன் கண்டுபிடித்திருந்தான். அதனால், பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே அவன் பயிற்சிக்குக் கிளம்பினான்.

இரை விலங்கை, கொடு விலங்கு நெருங்குவதுபோல ஊரை மெல்ல தீபாவளி நெருங்கிக்கொண்டிருந்தது. விளையாட்டுத் துப்பாக்கியால் சிறுவர்கள் மாறி மாறிச் சுட்டுக்கொண்டு சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். நல்ல நாளில் ஊர் வழிக்குக் கிளம்பவும், ஆட்களுக்கு ஜவுளி எடுக்கவும் திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். பண்டிகை தொடும் தூரத்தில் வந்துவிட்டபோது, அந்த வைக்கோல் பொம்மை விவகாரம் மெல்ல அவர்கள் நினைவிலிருந்து கரையத் தொடங்கியது.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 12

தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாள்கள்தான் இருந்தன. சமுத்திரத்தின் மனதில் ஏதோவொன்று உறுத்திக்கொண்டேயிருந்தது. விடிந்தும் விடியாமலும் புறப்பட்டு குரூஸ் அண்ணனைக் கூட்டிக்கொண்டு கடா பாண்டியின் வீட்டுக்குப் போனான். வீட்டில் கடா பாண்டி இல்லை.

“இங்கதான் படுத்துக் கெடந்தான். அதுக்குள்ள காங்கல... முள்ளுக்காட்டுப் பக்கம் கொல்லைக்கிப் போயிருப்பாம்போல. செத்த நேரத்துல வந்துருவான். கடுங்காப்பி போடவா...’’ என்று அவன் அப்பா வெள்ளந்தியாகக் கேட்டார். சமுத்திரம், வீட்டுக்குப் பின்பக்கமிருக்கும் காலியிடத்தைப் போய் பார்த்தான். அங்கு ஒரு பொதி வைக்கோல் பனியில் நனைந்து கிடந்தது.

அதேநேரம் அதிகாலையில், பீக்காட்டுப் பக்கம் பன்றிவிட்டை பொறுக்கவந்த சிறுவன் அங்கங்கு கருகிக்கிடக்கும் வைக்கோல் பொம்மைகளைப் பார்த்தபடியே முன்னேறி நடந்துகொண்டிருந்தான். கொஞ்ச தூரத்திலேயே குண்டுவெடிக்கும் சப்தமும், கரும்புகையும் கிளம்பியதும் சிறுவன் அப்படியே அதிர்ந்துபோய் நின்றான்.

புகைமூட்டத்துக்கு நடுவே கடா பாண்டி, தன் கையில் நான்கைந்து உருண்டைகளோடு நின்றுகொண்டிருந்தான். சிறுவன் கடா பாண்டியையே உறைந்துபோய் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய அண்ணன் கொடிமரத்திடம்தான் வேலை செய்கிறான்!

(பகை வளரும்...)