
திம்மராசுவின் மனைவி, பிணத்தின் கால்மாட்டில் தலைவிரி கோலமாக மயங்கிக் கிடந்தாள். அவளை அணைவாய்ப் பிடித்தபடி நீச்சத்தண்ணி புகட்டிக்கொண்டிருந்தார்கள் சொந்தக்காரப் பெண்கள்
பெரிய பர்லாந்தும் சமுத்திரமும் மார்ச்சுவரி நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். மழையினால் மார்ச்சுவரியின் வெளியே ஜனக்கூட்டம் கலைந்திருந்தது. சமுத்திரம் தன் புல்லட்டை நிறுத்தி அங்கிருப்பவரிடம் விசாரித்தான். “பிணத்தை வாங்கிட்டு இப்போதான் வீட்டுக்குப் போறாங்க. பத்து நிமிஷம்தான் ஆகியிருக்கும்” என்று பதில் கிடைத்தது. பின்னாலேயே வந்த பெரிய பர்லாந்து, பிளசரின் வேகத்தைக் குறைத்தார். சமுத்திரம் அவரை `நிறுத்த வேண்டாம்’ என்று கைகாட்டியபடியே மீண்டும் மழையோடு கிளம்பினான்.
உப்பளப் பாதையில் இடதுகைப் பக்கம் திரும்பினால் திம்மராசு வீடு. தெருமுனையில் மழையோடு பிணத்தை எடுத்துப்போக பாடையைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். ஓட்டுச் சாய்ப்பு போட்ட அந்த வீட்டின் வெளியே சனத்திரள் அம்மிக்கொண்டிருந்தது. பிணம் வீட்டுக்குள் கிடத்திவைக்கப்பட்டிருந்தது. பெரிய பர்லாந்து வருவதை கவனித்து, சனங்கள் நகர்ந்து வழிவிட்டனர். அவரைப் பார்த்ததும் வீட்டினர் வந்து அவரிடம் முறையிட்டபடியே கதறி அழுதார்கள். “நேத்தைக்குத்தான் வீட்ல ஒரு விசேஷம் வெச்சுருந்தோம். சொக்காரன், சொந்தக்காரன் அம்புட்டுப் பேரும் அங்கதான் இருந்தோம். ஆள் அரவமில்லாம வந்து நிமிஷத்துல செஞ்சுப்புட்டுப் போயிட்டானுங்க.’’

திம்மராசுவின் மனைவி, பிணத்தின் கால்மாட்டில் தலைவிரி கோலமாக மயங்கிக் கிடந்தாள். அவளை அணைவாய்ப் பிடித்தபடி நீச்சத்தண்ணி புகட்டிக்கொண்டிருந்தார்கள் சொந்தக்காரப் பெண்கள். பெரிய பர்லாந்து, திம்மராசுவின் உடலை வெறித்துப் பார்த்தபடியிருந்தார். கழுத்து துண்டிக்கப்பட்டது தெரியாமலிருக்க வெள்ளைத்துண்டைச் சுற்றியிருந்தார்கள். அறை முழுக்க அழுகுரல்கள். இறந்தவனின் இழப்பை ஈடு செய்ய, ரெத்தக்காசாக நாலைந்து பணக்கட்டுகளை எடுத்து சமுத்திரத்திடம் நீட்டி, திம்மராசுவின் மனைவியிடம் கொடுக்கச் சொன்னார் பெரிய பர்லாந்து. சமுத்திரம் அவளின் கையில் திணித்தான். அவள் அதைக் கைகொண்டு வாங்கவில்லை. தயங்கியவனாக, பணத்தை அவளருகில் வைத்துவிட்டு பெரிய பர்லாந்தைப் பின்தொடர்ந்தான் சமுத்திரம்.
சுற்றியிருந்த கண்களில் ‘இவ்வளவு பணமா?’ என்று ஆச்சர்யம் புகைந்தது. ‘இழப்புக்கு இவ்வளவு காசு தருவாரென்றால், தங்கள் புருஷனையுமேகூட சாவுக் களத்துக்கு அனுப்பலாம். தப்பில்லை’ என்று சில பெண்கள் மனசுக்குள் நினைத்துக்கொண்டார்கள். வேறு சிலர் ‘காசைக் கொண்டாந்து நீட்டிட்டா, இழந்தவளுக்கு புருஷனும், பிள்ளைக்கு அப்பனும், தாய்க்கு மகனுமா திரும்ப வந்துடுவானா?” என்று உள்ளுக்குள் முனகினர். பர்லாந்து, வீட்டின் நிலைப்படியைத் தாண்டி, மீண்டும் மழைக்குள் இறங்கி ஓர் அடிதான் எடுத்து வைத்திருப்பார். வீட்டுக்குள்ளிருந்து ‘ஓ...’வென ஆங்காரத்துடன் கத்திக்கொண்டு அந்தப் பணக்கட்டுகளை வாசலை நோக்கி வீசியடித்தாள் திம்மராசுவின் மனைவி.
விழுந்த வேகத்தில் எல்லா கட்டுகளிலும் நூல்கண்டு அறுந்து, பணத்தாள்கள் ஈரத்தரையில் சிதறி விழுந்தன. வீட்டின் வாசலில் ஓடிய கழிவுநீர் வாய்க்காலில் பத்திருபது தாள்கள் விழுந்தன. அவற்றை மழைத்தண்ணீர் அடித்துக்கொண்டுபோனது. சுதாரித்துக்கொண்டு நான்கைந்து பேர் அவற்றை எடுக்க ஓடினார்கள். அதைப் பார்த்த பெரிய பர்லாந்தும் சமுத்திரமும் இறுக்கமான மனத்தோடு அங்கிருந்து கிளம்பிப்போனார்கள்.
தெருக்களைக் கடந்து, மீண்டும் பிளசரும் புல்லட்டும் ரோட்டை எட்டின. அந்தப் பெண் பணத்தைத் தூக்கி எறிந்தது பர்லாந்துக்கு என்னவோபோலிருந்தது. பிளசரை நிறுத்தினார். அவர் நிறுத்தியது தெரியாமல் சமுத்திரம் மழையைத் துரத்திக்கொண்டு புல்லட்டில் முன்னால் போய்க்கொண்டிருந்தான்.
பர்லாந்து ஹாரனை அழுத்திச் சத்தமெழுப்பினார். இரண்டு, மூன்று ஹாரன் சத்தம் தொடர்ந்து கேட்டதும், சமுத்திரம் புல்லட்டைத் திருப்பிக்கொண்டு பிளசருக்கு அருகில் வந்தான்.
பிளசர் கண்ணாடியை இறக்கி, “உள்ள வா” என அழைத்தார். புல்லட்டை ஓரமாக நிறுத்திவிட்டு, ஈரத்தோடு பிளசருக்குள் ஏறி அமர்ந்தான். பர்லாந்தின் கையில் விஸ்கி பாட்டில் ஒன்று இருந்தது. தேன் நிறத்தில் மின்னிய விஸ்கியைப் பார்த்ததும், சமுத்திரம் டேஷ்போர்டைத் திறந்து கிளாஸைத் தேடி எடுத்தான். கிரிஸ்டல் கண்ணாடியில் செய்ததுபோலப் பளபளப்பாக இருந்தது அந்த கிளாஸ். அதில் விஸ்கியை ஊற்றி, கார் ஜன்னலைத் திறந்து மழைநீரைக் கொஞ்சமாய் நிரப்பி அவரிடம் கொடுத்தான். இதேபோல ஐந்தாறு முறை அவன் கரம் மழைநீரைப் பிடிக்க வெளியே நீண்டது. பிறகு, சமுத்திரமும் அதே கிளாஸில்தான் குடித்தான். இருவருக்கும் போதை ஏறியிருந்தது. அப்போதுதான் பர்லாந்து சமுத்திரத்திடம் கேட்டார். “என்னாலதான இவ்வளவு சாவு. எனக்காகத்தான இம்புட்டு பொம்பளைக தாலி அறுக்காளுவோ...”
சமுத்திரம் பதிலேதும் சொல்லாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு மெதுவான குரலில், “வாங்க கிளம்பலாம்” என்று காரிலிருந்து இறங்கி, தனது புல்லட்டை எடுத்துக்கொண்டு கிளப்பினான். இப்போது மழையின் வேகம் கொஞ்சம் தணிந்திருந்தது. கடற்கரைச் சாலையிலிருக்கும் பழைய தேவாலயத்துக்குள் பிளசர் நுழைந்தது. அங்குதான் ராயப்பனின் உடல் கொண்டுவரப்பட்டிருந்தது. சமுத்திரம், பர்லாந்தை வண்டியிலேயே இருக்கச் சொன்னான். அவர்கள் அங்கு வந்து சேரும்போதே தேவாலயத்துக்கு வெளியே கூச்சலும் கலவரமுமாயிருந்தது. வெள்ளை அங்கியோடு இரண்டு பாதிரிமார்கள் கூட்டத்துக்கு மத்தியில் நின்று கத்திக் கத்திப் பேசிக்கொண்டிருந்தார்கள். ரோசம்மாவின் கணவன் மரியதாஸ், பாதிரிமார்களுக்குக் குடை பிடித்தபடி அங்கு நின்றுகொண்டிருந்தார். சமுத்திரத்துக்கு அங்கு மரியதாஸைப் பார்த்ததும் எரிச்சலாக வந்தது.
சற்றுத் தள்ளி இறந்தவனின் மனைவியைச் சுற்றிப் பெண்கள் சிலர் அமர்ந்திருந்தார்கள். சட்டென யாரோ தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதாகத் தோன்ற, பெண்கள் கூட்டத்தின் நடுவே உற்று கவனித்தான் சமுத்திரம். ரோசம்மா ஈரச் செம்மண் நிறத்தில் சேலை உடுத்தி, துக்க வீட்டிலும்கூட அவ்வளவு அழகாக இருந்தாள். அருகில் ரோசம்மாவின் மகள் பனிமலரும் நின்றுகொண்டிருந்தாள்.
சமுத்திரமும், கூடவே பர்லாந்தும் வந்திருப்பதைக் கண்ட அவர்களின் ஆட்கள் மரியாதையோடு பிளசருக்கு அருகே போனார்கள். பர்லாந்து வண்டியிலிருந்து இறங்காமல் உள்ளே அமர்ந்திருந்தார். வந்தவர்களில் ஒருவன் பேசினான். “நோவு வந்தோ, சாதாரணமாவோ செத்தாத்தான் தேவாலயத்துக்குள்ள கொண்டுபோயி பூசை வெச்சு பொதைக்க கல்லறை குடுப்பாங்களாம். தற்கொல கேஸு... அறுத்துப்போட்ட கேஸுக்கெல்லாம் உள்ள பூசவெக்க மாட்டாராம். கல்லறையும் தர மாட்டாராம். சாமி சொல்தாரு.”
சமுத்திரம் பாதிரியார்களிடம் போனான். “ஒரே கேள்விதாம், இப்போம் மரியாதையா உடம்ப உள்ள கொண்டுபோயி பூச வெச்சு... கல்லற குடுக்க முடியுமா... முடியாதா?” பாதிரியார் முகத்தில் எந்தக் கலக்கமுமில்லை. “ஏய்... யார்லே இவன். என்ன மிரட்டுதியோ... வாலே பாத்துக்கலாம். நானும் கடற்கரகாரந்தான். துடுப்புப் புடிச்ச கைதான் இப்ப பைபிள புடிச்சிக்கிட்டிருக்கு. எங்க வந்துல ஏறுத... மாதாவுக்கும், சபைக்கும், ஆயருக்கும்தாம்ல கட்டுப்படுவேன். வெட்டிக்கிட்டும் குத்திக்கிட்டும் சாவும்போது தெரியல. இப்ப பொதைக்க மட்டும் இங்க இடம் குடுக்கணுமோ... கொண்டுபோய் கடலுக்குள்ள தாத்துங்க. சபையில இருந்துல்லாம் கல்லற ஒதுக்க முடியாது. ஒன்னால முடிஞ்சதப் பாத்துக்கோ...’’ அங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு பாதிரியார் கொந்தளித்தார்.

பதிலுக்கு ஆத்திரத்தோடு சமுத்திரமும் கத்தினான். “என்னால முடிஞ்சத பாத்துக்க சொல்லிட்டீர்ல... பாத்துக்கிடுதேன். கல்லறத் தோட்டத்துல ஒத்தப் பொணம்கூட நிம்மதியாத் தூங்க முடியாது. எல்லாத்தையும் தோண்டி எலும்பை வெளியே எடுத்து, ஒண்ணா குமிச்சி போடுதேன். எது எவன் எலும்பு, எந்தச் சாதி, எந்தக் குடும்பத்தானோடதுன்னு பதில் சொல்லி நீரு கெடந்து மாளும்...”
பாதிரியார்கள் இருவரும் அரண்டுபோய் நின்றார்கள். பர்லாந்து இப்போது பிளசரிலிருந்து இறங்கி வந்தார். பாதிரியார்கள் அவரைக் கண்டதும் சற்று நிதானமானார்கள். அவர், அவர்களைத் தனியே அழைத்துக்கொண்டுபோய் பேசினார். பிறகு தங்களது அறைக்குள் பெரிய பர்லாந்தை அழைத்துப் போனார்கள். சமுத்திரம் தேவாலய வாசலில் தனியே நின்றுகொண்டிருந்தான். யாரோ அவன் தோளைத் தொடுவதுபோலிருந்தது. சட்டென அவன் கரங்கள் தன்னியல்பாகச் சூரிக்கத்திக்குச் சென்றது. திரும்பினான். ரோசம்மா அவனை, “வா...” என்று சொல்லிவிட்டு, விறுவிறுவென ஈரத்துக்குள் சேலைத் தலைப்பைக் குடைபோல் பிடித்துக்கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தாள்.
கூட்டத்திலிருந்து விலகி, தன் அம்மா ரோசம்மா மட்டும் நடந்துபோவதையே பார்த்துக்கொண்டிருந்தாள் பனிமலர். சமுத்திரத்துடன் ரோசம்மாவுக்கு இருந்த உறவை அவள் சகிக்கவில்லை. மழை நின்றுபோயிருந்தது. தேவாலயத்தின் பின்பக்கத் தெருவிலிருந்த ரோசம்மாவின் வீட்டை எட்டியிருந்தான் சமுத்திரம். அவள் கதவைத் திறந்துகொண்டிருந்தாள். தேவாலயத்தில் இறந்தவருக்கான திருப்பலி தொடங்கிய சப்தம் கேட்கத் தொடங்கியது.
ரோசம்மா சமுத்திரத்தை இறுக்கி அணைத்துக் கட்டிலில் சாய்த்தாள். அவன் விருப்பமில்லாதவன்போல் முரண்டுபிடித்தான். அவனுக்குள் கட்டுக்கடங்காத நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. மூச்சுக்காற்றில் அனல் தெறித்தது. கொஞ்ச நேரத்தில், ரோசம்மா அவனைத் தன் வழிக்குக் கொண்டுவந்திருந்தாள். மூர்க்கமான பாம்புகள் ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டன. சட்டையை உரிப்பதுபோல ஈரத் துணிகளை உருவிப் போட்டுவிட்டு, சமுத்திரம் அவளை வெறிகொண்டவனாக பின்னத் தொடங்கினான்.
“இறந்த ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் நித்திய இளைப்பாறுதல் அடைவதாக..!’’ திருப்பலி இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது, வியர்த்து அடங்கிய நேரத்தில் ரோசம்மா உச்சம் தொட்டிருந்தாள். எரியும் கொள்ளிக்கட்டைகள் மழைத்துளிகள் பட்டுச் சுரீரென்று அணைவதுபோல அவள் அணைந்துகொண்டிருந்தாள். ஆனாலும், சமுத்திரத்தின் கண்களில் பிண நெருப்பின் ஜுவாலை அணைவதாயில்லை.
இருவரும் எழுந்து, தத்தம் உடைகளை அணிந்தார்கள். ரோசம்மா இதெல்லாம் வழக்கம் என்பதுபோல நடந்து சென்று, பித்தளைப் பானைக்குப் பின்புறமிருந்து ஒரு விஸ்கி பாட்டிலை எடுத்து டம்ளரில் ஊற்றி, தண்ணீரைக் கலந்து அவனிடம் கொடுத்தாள். அவன் குடித்து முடிக்க, இன்னும் ஒரு ரவுண்டு ஊற்றிக்கொடுத்தாள். தட்டில் தொடுகறியாகப் பொரித்த சூரை மீனை வைத்தாள். அதன் வால் துண்டை எடுத்துக் கடித்தபடியே, அலமாரியில் கவிழ்ந்துகிடந்த ஒரு பித்தளைக் குத்துச்சட்டியைக் காட்டி, “அதை எடு...’’ என்றான் சமுத்திரம்.
ரோசம்மா திகைத்துப்போய், அவனிடம் “வேண்டாம்” என்று மறுத்தாள். சமுத்திரம் அவளைப் புறந்தள்ளி குத்துச்சட்டியை நெருங்க, ரோசம்மா அவனைத் தடுத்து நிறுத்தினாள். பிறகு, அவளே கால்களை எக்கி ஒரு பொட்டலத்தை எடுத்துக்கொடுத்தாள். அதனுள்ளே ஒரு கறுத்த பிஸ்டலும், முப்பது தோட்டாக்கள்கொண்ட மரப்பெட்டியும் இருந்தன!
(பகை வளரும்...)