
பெட்டிக்கடையில் சர்பத் போட வைத்திருந்த ஐஸைக் கொஞ்சம்எடுத்து, விஸ்கியில் போட்டுக்கொண்டு வந்தான் ஒருவன்.
அதிகாலையில் பிடித்த மழை மதியத்துக்குப் பிறகுதான் ஓய்ந்தது. வெயிலும் மனிதர்களும் மெல்ல வெளியே வந்து நடமாடத் தொடங்கினார்கள். ரோடெல்லாம் ஈரமாயிருந்து. ராயப்பனின் பிணத்தை, தேவாலயத்திலிருந்து கல்லறைக்கு எடுத்துப் போய்க்கொண்டிருந்தார்கள். ‘கொம்பேறி மூக்கன், தான் கொத்தி இறந்தவனை உண்மையிலேயே இறந்துவிட்டானா என்று மரத்திலேறிப் பார்க்கும்’ என்பார்களே... அதுபோல சின்னபர்லாந்தின் ஆட்கள் ஓரிரண்டு பேரும் அந்தச் சாவு ஊர்வலத்தில் இருந்தார்கள். நிச்சயம் அவர்களை சின்னபர்லாந்தோ அல்லது கொடிமரமோதான் அனுப்பியிருப்பார்கள். சமுத்திரமும், அவன் நண்பர்களும் சாவு ஊர்வலத்தின் இறுதி வரிசையில் வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் சமுத்திரத்துக்கு போதை இறங்கவிடாமல் மேலும் மேலும் ஏற்றிவிட்டுக் கொண்டேயிருந்தார்கள். பத்து எட்டு நடப்பதற்குள் அங்கங்கு வெற்றிலை பாக்குக் கடைகளில், சர்பத் கிளாஸ்களை வாங்கி விஸ்கி ஊற்றி ஊற்றி வந்துகொண்டேயிருந்தது. காலையிலிருந்து எவ்வளவு குடித்திருப்பானென்பது சமுத்திரத்துக்கும் நினைவிலில்லை. அநேகமாக ஒரு முழு பாட்டில் விஸ்கி முடிந்து, இரண்டாவதாயிருக்கும். ஆனாலும் நடையில் துளி தள்ளாட்டமில்லை. கண்கள் மட்டும் ரெத்தப்பழமாய்ச் சிவந்து போயிருந்தன. இறந்தவனின் உறவினர் ஒருவர் தொடர்ந்து விஸ்கி வருவதை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டேயிருந்தார்.

பெட்டிக்கடையில் சர்பத் போட வைத்திருந்த ஐஸைக் கொஞ்சம்எடுத்து, விஸ்கியில் போட்டுக்கொண்டு வந்தான் ஒருவன். அதை ஏக்கமாய் பார்த்துக்கொண்டே வந்தவர் சொன்னார். “இந்த வரிசைல எல்லா வெத்தல பாக்குக் கடையிலயும் எந்த ஐஸ் போடுதாங்கனு தெரியுமாடே... எல்லாம் சவக்கிடங்குல பொணத்துக்கு அடியில வெச்சிருந்த ஐசுடே... பொணம் கெட்டு அழுகிப் போயிடக்கூடாதுல்ல...சொல்ல முடியாது... இது ராயப்பன் பொணத்துக்கு அடியில வெச்ச ஐஸாக்கூட இருக்கும்.”
“எவம்லே சொன்னான்?”
“காதுக்கு வந்த விஷயம்... நல்லதுக்குச் சொன்னாக்கா... யாரு சொன்னா எவரு சொன்னான்னு கேட்டுகிட்டு கிடக்க...’’
சமுத்திரம் அதைக் கேட்டும், கேட்காததுபோல அந்த விஸ்கியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு ஒரு பீடியைப் பற்றவைத்தான்.
சாவு ஊர்வலம் போன பாதையெங்கிலும் சாமந்தி, சம்பங்கி, ரோஜாவின் வாசனையும் ஊதுவத்தி வாசனையும் கமழ்ந்தன. ஊர்வலத்தை விலகச்சொல்லி பின்னாலிருந்து ஏதோ பைக் ஹார்ன் விடாமல் அடித்துக்கொண்டேயிருந்தது. சமுத்திரம் எரிச்சலாகி “எந்த நாய்லே அது..?’’ என்பதுபோல் திரும்பிப் பார்த்தான்.
அது கஸ்டம்ஸ் ஆபீஸரின் மகன் ராம். இருபதை நெருங்கிய வயது. இங்கிருக்கும் காலேஜில் படித்துக்கொண்டிருந்தான். சமுத்திரம் கூர்ந்து பார்த்தான். பைக்கின் பின்னால் அமர்ந்திருப்பது ரோசம்மாவின் மகன் ஜான்போல் தெரிந்தது. அவனேதான். ஜான்... நல்ல ஹாக்கி விளையாட்டுக்காரன். ஜானும் சமுத்திரத்தைப் பார்த்துவிட்டான். பதறி, ராமிடம் சொல்லி அருகிலிருக்கும் சந்துக்குள் பைக்கைவிடச் சொன்னான்.
ராம் பைக்கை ஒரு சந்துக்குள்விட்டு, வேறு வழியாக பஜார் சாலையை எடுத்தான்.
“ஏண்டா ஜான்சா அது சமுத்திரம்தான?”
“ம்.’’
“திரும்ப ஆரம்பிச்சிட்டாய்ங்களா?’’
“இப்போ ஒரு வருஷமாத்தான் ஊர் குண்டுச் சத்தமும், அழுகைச் சத்தமுமில்லாம அமைதியா இருந்துச்சு.’’
ஜான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அவனுக்கு சமுத்திரத்தின் முகம்தான் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. ஜானுக்கு சமுத்திரத்தைப் பிடிக்கும்.
பஜாரெல்லாம் சுவரில் யாரோ கறுப்பு வெள்ளை போஸ்டர்கள் ஒட்டிக்கொண்டிருந்தார்கள். ஜான் ஓரிடத்தில் பைக்கை நிறுத்தச் சொன்னான். இருவரும் போஸ்டர்களைப் பார்த்தார்கள். போன வருடம் குத்துப்பட்டு இறந்த முருகனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டரும், அதன் அருகிலேயே இன்று இறந்த திம்மராசு, ராயப்பனின் முகம் தாங்கிய போஸ்டர்களும் மழை ஈரத்தோடும், பசை ஈரத்தோடுமிருந்தன. இருவருக்கும் புரிந்தது. இந்த ஊரில் இது ஒன்றும் புதிதில்லை. இதேபோல பலமுறை நடந்திருக்கிறது. ஒரு தரப்பிலிருந்து ஒருவனைக் கொன்றுவிட்டார்கள் என்றால், அந்தத் தரப்பு அடுத்த வருடம் அதே தேதிக்காகக் காத்திருப்பார்கள். எதிர்த்தரப்பும் அந்த நாளைக் குறித்துவைத்து, முடிந்த வரை சுவடில்லாமல் எங்கேயாவது போய் ஒரு வாரத்துக்காவது மறைந்திருப்பார்கள். ஆனாலும் கடந்த ஆண்டு உயிரை இழந்த தரப்பு, எப்படியாவது அவர்களைத் தேடிப் போய்ப் பழிதீர்த்துவிடுவார்கள். இறந்தவனின் உறவினர்கள், சாதி ஆட்கள் இந்தப் பழிதீர்த்தலுக்கும், கேஸ் நடத்துவதற்கும் எவ்வளவு தொகை செலவானாலும் தங்கள் ஆட்களிடம் தலைக்கட்டு வரி வசூலித்து, செலவைப் பார்த்துக்கொள்வார்கள். இதில்தான் தங்களின் கௌரவம் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். சின்ன பர்லாந்தும் பெரிய பர்லாந்தும் தங்கள் பக்கமிருந்து இறக்கும் ஒவ்வோர் ஆளின் குடும்பத்துக்கும் ரெத்தக்காசு கொடுத்து அதைச் சரிக்கட்டுகிறார்கள். இறந்தவனின் குடும்பம் முதலில் வேண்டாமென்று மறுத்து, கோபமாகத் தூக்கி எறிந்தாலும், பிறகு அந்த ரெத்தக் காசை ஒரு சூழலில் வாங்கிக்கொள்கிறார்கள்.
போஸ்டரை உறையப் பார்த்துக்கொண்டிருந்த இருவரும், மீண்டும் பைக்கை ஸ்டார்ட் செய்து ஜானின் வீட்டை நோக்கி திரேஸ்புரத்துக்குக் கிளம்பினார்கள்.
ராயப்பனின் சாவு ஊர்வலம் கல்லறையை நெருங்கிக் கொண்டிருந்தது. வழியில் ரயில்வே கேட்டை அடைக்க வந்தார்கள். பிணத்தைச் சுமந்து செல்லும் சிலுவைக் குறியிட்ட சகடை வண்டியை உறவினர்கள் வேகமாகத் தள்ளியபடி கேட் மூடும் முன்பே தாண்டினார்கள். ஆட்கள் சிலர் கேட்டின் உள்ளே தன்னை நுழைத்து சாகசத்தோடு மறுபக்கம் போய்க்கொண்டிருந்தார்கள். சமுத்திரமும் அவன் ஆட்களும் ரயில் கடந்துபோகக் காத்திருந்தார்கள். அவர்களை ஒட்டி வேகமாகச் சிறு புழுதியோடு ரயில் கடந்துபோனது. கேட்டைத் திறக்கத் தொடங்கினார்கள். எதிர்ப்பக்கம் ஒரு கறுப்பு பிளசர் `உர்... உர்...’ என்று உறுமிக்கொண்டு, அவ்வளவு வேகமாய்ச் சீறிக்கொண்டு சமுத்திரத்தை மோதித் தூக்கிப் போடுவதுபோல வந்து, விலகிப்போய் நாற்பதடி தள்ளி நின்றது. உடன் வந்த எல்லோரும் பதறிப்போனார்கள். சமுத்திரம் கொஞ்சம்கூட பயம்கொள்ளாமல் திரும்பி பிளசரைப் பார்த்தான். சின்ன பர்லாந்தின் பிளசர்தான். பிளசரின் பின்பக்கமிருந்து ஒரு தலை எட்டிப் பார்த்தது. அது கொடிமரம்தான்.

நொடிப்பொழுது... யாரும் பார்க்கும் முன்பாக சமுத்திரத்தின் ஆள் கடா பாண்டி, ஆத்திரத்தோடு ஒரு நாட்டு வெடிகுண்டை எடுத்து, அந்த காரின் திசைக்கு ஓங்கி எறிந்தான். அவன் முழுக்கக் குடித்திருந்ததால், எறிந்த குண்டு காருக்குப் பத்தடி முன்னாலேயே விழுந்து பெரிய சத்தத்தோடும், கரும்புகையோடும் வெடித்துச் சிதறியது. கொடிமரமும் அவன் ஆட்களும் இதை எதிர்பார்க்காமல் அப்படியே உறைந்துபோய் நின்றுவிட்டார்கள். ஜனங்கள் பதறிச் சிதறி ஓடி கடைகளுக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் பதுங்கினார்கள். யாருக்கும் சிறிய காயமுமில்லை. ஆனால், கடா பாண்டி இன்னும் பத்தடி எக்கி எறிந்திருந்தால், பிளசரில் இருப்பவர்களின் உடலில் பொத்தல் போட்டு பால்ரஸ் குண்டுகளும், கண்ணாடிச் சில்லுகளும், துருவேறிய ஆணிகளும் இறங்கி உடல் கிழிந்திருக்கும். இப்போதும் பிளசரில் ஓரிரு இடத்தில் பால்ரஸ் குண்டுகள் போய்ச் சொருகிக்கொண்டிருந்தன.
அடர்ந்த கரும்புகை கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி, வானத்தில் கரைந்துகொண்டிருந்தது. தன் திசையிலிருந்து ஒரு வெடிகுண்டு எறியப்படுமென சமுத்திரமும் நினைக்கவே இல்லை. கொடிமரம் சுதாரித்துக்கொண்டு கனமான தன் அரிவாளை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினான். அவனைத் தொடர்ந்து அவன் ஆட்களும் கீழே இறங்கினார்கள்.
சமுத்திரத்துக்குக் கொடிமரத்தைப்போலவே இந்த அரிவாளையும் நன்றாகத் தெரியும். அவனோடு பல காலமாக இந்த அரிவாள் உடனிருக்கிறது. மிகுந்த ரெத்த ருசி கண்டது. நாகர்கோவில் பகுதிகளில் மீனவர்கள் இது மாதிரியான அரிவாளை மீன்களை வெட்ட வைத்திருப்பார்கள். இந்த அரிவாளை லாரியின் கீழிருக்கும் கனமான ஸ்பிரிங் இரும்பை உருக்கி வார்த்து அடித்து வைத்திருந்தான் கொடிமரம். மீன் மார்க்கெட்டில் அவன் செல்வாக்கைத் தூக்கி நிறுத்த எத்தனையோ பெரிய மீன்களையும், சுறாக்களையும், மனிதர்களையும் வெட்டிக் கூறு போட்டிருக்கிறது அது. எப்போதும் அவன் அந்த அரிவாளைப் பிடித்திருக்க மாட்டான். அந்த அரிவாள்தான் அவனை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, அவனுக்காகச் சண்டையிட்டிருக்கிறது. ஒரு காலத்தில் இந்த அரிவாளைப் போலத்தான் சமுத்திரமும் இருந்தான். கொடிமரத்தின் கையை எப்போதும் பிடித்துக்கொண்டு... அவனுக்காக மற்றவர்களிடம் சண்டையிட்டுக்கொண்டு.
ஒருகாலத்தில் நெருக்கமான நண்பர்களாயிருந்த சமுத்திரமும் கொடிமரமும், ஒருவரை ஒருவர் கொல்லத் துடித்தபடி அவ்வளவு வெறியும் ஆத்திரமுமாகப் புகை நடுவே நின்றுகொண்டிருந் தார்கள். கொடிமரம் அரிவாளோடு இரண்டடி முன்னே எட்டுவைத்தான். சமுத்திரம் மெல்ல முதுகுப் பக்கம் கையைவிட்டுத் தன் கைத்துப்பாக்கியை எடுத்தான். சமுத்திரத்திடம் துப்பாக்கியிருக்குமென்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. சமுத்திரத்தின் ஆட்கள் உட்பட.
கொஞ்சம் முன்புகூட கொடிமரம் பிளசரைச் செலுத்திய வேகம் சமுத்திரத்தைக் கொல்வதற்காக இல்லை. பயம் காட்டுவதற்காக… `அடுத்து நீதான்’ என்று எச்சரிப்பதற்காக. ஆனால், கடா பாண்டி எறிந்த குண்டும், தன் உடலுக்கு நேராக சமுத்திரம் நீட்டிய துப்பாக்கியும் கொடிமரத்தை அவமானத்தோடு பின்வாங்கும்படி ஆக்கிவிட்டது.
கடாபாண்டியை அழுத்தமாகப் பார்த்தபடி கொடிமரம் பிளசருக்குள் ஏறினான்.
(பகை வளரும்...)