மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 7

பாய்ச்சல் - 7
பிரீமியம் ஸ்டோரி
News
பாய்ச்சல் - 7

அதுக்கு வெந்நித் தண்ணியக் குடிக்கலாம் நீயி. போய் வேங்கிட்டு வந்தா போடுவேன். இல்லனா ச்சும்மாக்கிட

கஸ்டம்ஸ் ஆபீஸர் மகன் ராமும், ரோசம்மாவின் மகன் ஜானும் பைக்கில் திரேஸ்புரத்துக்குள் நுழைந்தனர். நிறைய வீடுகளின் வாசல்களில் மீன்வலைகள் உலர்த்தப்பட்டுக் கிடந்தன. மேல் சட்டை அணியாத ஓரிரு மீனவர்கள் வீட்டுத் திண்ணையிலமர்ந்து பீடி குடித்துக்கொண்டிருந்தார்கள். ஜான் வீட்டு வாசலில், பைக்கை நிறுத்திவிட்டு இருவரும் உள்ளே போனார்கள். வீட்டின் பின்பக்கத்தில் சப்தமாக ரேடியோ ஒலித்துக்கொண்டிருந்தது.

“நேரம், மாலை ஐந்து மணி நான்கு நிமிடங்கள். இது இலங்கை வானொலி கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு. இன்றைய `புதிய கீதங்கள்’ நிகழ்ச்சியில் பனந்துறை பிரதானவீதி கதிர்காமநாதன், பாலன், பிரமிளா, குமுதா, குணரத்ன... நேயர்களே உங்களுக்காக ‘நினைத்தாலே இனிக்கும்’ என்கிற புதிய படத்திலிருந்து எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து, எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடிய... `எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்..!’’

இவர்கள் வந்ததை கவனிக்காமல் ஜானின் அக்கா பனிமலர், பாடலை ரசித்துத் தலையாட்டிக்கொண்டே தன் உடைகளைக் கும்மித் துவைத்துக்கொண்டிருந்தாள். ஜான், தன் கைநிறைய அடுப்படியில் கிடந்த சாம்பலை அள்ளிச் சென்று, மெல்ல பூனை நடை நடந்து, அவள் துவைத்துக்கொண்டிருந்த துணிமீது போட்டுவிட்டு ஓடினான். துவைத்த துணிகளும், தண்ணீரும் சாம்பல் விழுந்து அழுக்காக, கோபத்தில் ஜானையும் அவன்கூட வந்திருந்த ராமையும் அடிக்க ஓடினாள் பனிமலர். அவளிடமிருந்து விலகிச் சிரித்தபடி ரேடியோவுக்கு அருகே வந்து நின்றுகொண்டான் ஜான். பனிமலர் குடத்தின் மேலேயிருந்த தண்ணீர் சொம்பை எடுத்து அவனை நோக்கி எறிவதற்குக் குறி பார்த்தாள். ஜான் சட்டென ரேடியோவைக் கையிலெடுத்து தன் முகத்துக்கு நேராக அதை மறைத்துப் பிடித்துக்கொண்டான்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 7

“ஒழுங்கு மரியாதையா ரேடியோவ கீழ வெச்சுரு. அதுக்கு என்னமாது ஆச்சு... உன்ன கொன்னே போடுவேன்... சொல்லிட்டேன்.”

“நீ மொத சொம்ப கீழ வைட்டீ.”

“நீ மொத ரேடியோவ அது இருந்த எடத்துல வைய்யில.”

ராம் அதே இடத்தில் நின்றபடி அக்காவும் தம்பியும் சண்டையிடுவதைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். பனிமலரின் கோபம் இப்போது ராம் பக்கம் திரும்பியது.

“நீ என்னத்துக்குப் பல்லக் காட்டுற இப்ப” என்று கோபத்தோடு அவனிடம் வந்தாள்.

“எனக்குத் தெரியாது. மரியாதையா அந்த ரேடியோவ அவன வெக்கச் சொல்லு. இல்ல உனக்குத்தான் அடி விழும்” ராமின் கையைப் பிடித்து, அவன் முதுகு பக்கமாய் மடக்கி முறுக்கினாள்.

“லேய் ஜான்சா... அதவெச்சுத் தொலைல மொத” வலி பொறுக்காமல் ராம் கத்தினான்.

“…காலம் சல்லாபக் காலம்... உலகம் உல்லாசக் கோலம்... இளமை ரத்தங்கள் ஊரும்... உடலில் ஆனந்தம் ஏறும்…” பாடலுக்கு ஆடிக்கொண்டே, “சரி வெக்கேன்... எனக்குக் கடுங்காப்பி போட்டுத் தர்றியா?’’ என்றான் ஜான்.

“மொதல்ல நீ வைய்யி அத... நான் போட்டுத் தாறேன்.’’

ஜான் ரேடியோவை இருந்த இடத்தில் வைத்தான். பனிமலர் அதைக் கையில் எடுத்ததுமே சடீரென்று அவன் முதுகில் ஓர் அறை அறைந்தாள்.

“போயி கருப்பட்டி வாங்கிட்டு வா...”

“ஏன்... கொஞ்சங்கூட இல்லையா வீட்ல... நல்லாப் பாரு. இருக்குறத சொரண்டிப் போடு.”

“அதுக்கு வெந்நித் தண்ணியக் குடிக்கலாம் நீயி. போய் வேங்கிட்டு வந்தா போடுவேன். இல்லனா ச்சும்மாக்கிட.’’

“லே வர்றியா... அங்கன போய் கருப்பட்டி வேங்கிட்டு வருவோம்” ராம் கிளம்ப ஆயத்தமானான்.

“அவம் என்னத்துக்கு... நீ போயிட்டு வா... இந்தா இருக்குற கடைக்கி செட்டு சேர்க்காம்.”

பனிமலர் கண்களால் ராமை `போகாதே’ என்று மிரட்டினாள்.

“நா இருக்கேன். நீ போயிட்டு வாடா.’’

சரியென்று ஜான் மட்டும் வெளியேறினான்.

ஜான் பைக்கை எடுத்துக்கொண்டு தெருமுனையைத் தாண்டியதுதான் தாமசம். அடுத்த நொடியில், ராமின் சட்டையைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டு, கதவுக்குப் பக்கமிருந்த சுவரில் அவனைச் சாய்த்து மூச்சு முட்ட முட்ட இடைவிடாமல் அவனுக்கு முத்தம் கொடுத்தாள் பனிமலர். இதற்குத்தான் அவனைப் போக வேண்டாம் என்று மிரட்டினாள் என்பது ராமுக்கு நன்றாகவே தெரியும்.

பனிமலர் கோவில்பட்டியில் ஆசிரியை பயிற்சி வகுப்புக்குச் செல்கிறாள். ஹாஸ்டலில் தங்கி, வார இறுதிகளில்தான் தூத்துக்குடிக்கு வருவாள். வெள்ளிக்கிழமை வகுப்பு முடிந்து, மதியத்துக்கு மேல் பஸ் ஏறினால், அடுத்த ஒண்ணே கால் மணி நேரம்தான் தூத்துக்குடிக்கு. மீண்டும் திங்கள்கிழமை காலை ஏழு மணி பஸ்ஸுக்கு ஏறினால் வகுப்புக்குச் செல்ல சரியாக இருக்கும்.

பனிமலருக்கு ராமைவிட இரண்டு வயது அதிகம். தன் தம்பி வயதுதான் அவனுக்கு. போன வருடம் லீவில் வீட்டிலிருந்தபோது, ராம் அவளைக் காதலிப்பதாகச் சொன்னபோது அவளுக்குக் கொஞ்சம்கூட அது அதிர்ச்சியளிக்கவில்லை. ஜானின் நண்பனாக ராம் இந்த வீட்டுக்கு வரத் தொடங்கிய இந்த நான்கு வருடங்களில் ஒரு முறைகூட அவன் பனிமலரை `அக்கா’ என்று அழைத்தது கிடையாது. பனிமலரைக் கண்டதும் அப்படியே அவளை விழுங்கத் துடிக்கும் ராமின் கண்கள். அவன் கண்களிலேயே பனிமலர் விஷயத்தைப் புரிந்துகொண்டுவிட்டாள். எல்லாவற்றுக்கும் மேலாக அவளுக்கும் அவனை அவ்வளவு பிடித்திருந்தது.

பைக் சப்தம் வாசலை நெருங்கியதும் இருவரும் சட்டென்று விலகிக்கொண்டார்கள். ராம் மெல்ல மூச்சு வாங்கினான். பனிமலர் அடுப்படிக்குச் சென்று வெந்நீரைக் கொதிக்கவிட்டாள். தடதடவென்று உள்ளே நுழைந்த ஜான், கருப்பட்டிப் பொட்டலத்தை அவள் கையில் கொடுத்துவிட்டு ‘அம்மாவ எங்க?” என்று கேட்டான்.

“அடுத்த தெருவுல அம்மாவோட பிரெண்டு மேரியக்கா இருப்பாங்கள்லா... அவுங்க புருஷன் ராயப்பண்ணன யாரோ கொன்னுட்டாவளாம். அம்மா அங்கதான் துட்டி கேக்கப் போயிருக்கு.”

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 7


“ம்...” என்று கேட்டுக்கொண்டே கட்டிலுக்குக் கீழே ஒதுக்கிவைத்திருந்த கிளாஸை எடுத்து நுகர்ந்து பார்த்தான். அதில் சமுத்திரம் குடித்து முடித்த விஸ்கியின் வாசனை வீசியது. அக்காவும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பனிமலரின் முகம் மெல்ல வாடியது.

நாட்டு வெடிகுண்டு வீசின சம்பவம் தூத்துக்குடி முழுக்கச் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. தூத்துக்குடி தெற்கு போலீஸ் ஸ்டேஷனின் டெலிபோன் இடைவிடாமல் அலறிக்கொண்டேயிருந்தது. “... ஆமாங்கய்யா... எறிஞ்சது பெரியவர் ஆளுதான்... உயிர்சேதானம் ஒண்ணுமில்லங்கய்யா... ச்சும்மா வீசிப் பார்த்திருக்கானுங்க. ஸ்பாட்டுக்கு ஆளனுப்பியாச்சுங்கையா” இன்ஸ்பெக்டர், உயரதிகாரியிடம் போனில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். போலீஸ்காரர்கள் இதுபோல ஏதாவது நடக்குமென்று எதிர்பார்த்தபடியேதான் இருந்தார்கள். மேலதிகாரிகள் ஏற்கெனவே வார்னிங் கொடுத்திருந்தாலும், பர்லாந்து குடும்பத்தின் செல்வாக்கு எல்லோரின் கைகளையும் கட்டிவிடும். `இது எங்களுக்கு இடையேயான மோதல். நீங்கள் அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருங்கள்’ என்பதுபோல் சொல்லாமல் சொல்லப்பட்டுவிடும்.

துறைமுகத்துக்குள் பர்லாந்து குடும்பத்தில் யார் கை உயர்ந்திருந்தாலும், போலீஸ்காரர்கள் காட்டில் எப்போதும் மழைதான். எந்தப் பக்கம் சாவு விழுந்தாலும் அன்றே கூலிக்கு மாரடிக்கும் யாராவது ஒருவன் ‘கேஸ் கூலியாக’ ஸ்டேஷனில் வந்து சரணடைவான். அதனாலேயே, `கேஸ் என்னாச்சு?’ என்கிற மேலதிகாரிகளின் நச்சரிப்பு இருக்காது. இந்த கேஸ் கூலிகளுக்கு கனத்த தொகையும் உண்டு. சிறைக்குள்ளும் நல்ல உணவு... கவனிப்பு... சவரட்டினங்கள்... போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் வெளியே வந்ததும், ஒரு டீக்கடையோ சைக்கிள் கடையோ போட்டு உட்கார்ந்துவிடுவார்கள்.

“நேத்து நைட்டு முழுக்க என்கூடத்தாண்டா படுத்துக்கிடந்த நாசமா போறவனே... எவனோ வெட்டிக்குறான் செத்துக்குறான்... உனக்கென்ன... எவன் பண்ண பாவத்தையோ உன் தலைல வாங்கிட்டு நீ ஜெயிலுக்குள்ள போயிட்டா எனக்கும் எம்பிள்ளைகளுக்கும் யாரு கதி...” என்று சில கேஸ் கூலிகளின் மனைவிகள் நெஞ்சிலடித்துக்கொண்டு அரற்றுவதுமுண்டு.

வேறு சிலரின் மனைவிகள் அப்படியல்ல. சம்பந்தப்பட்டவனை என்று முடித்துவிடப் போகிறார்களென்று வக்கீல்கள் மூலமாகத் தெரிந்துகொண்டதும், முதல் வேலையாகத் தொகையைக் கையில் வாங்கிக்கொள்வார்கள். அன்றிலிருந்து சம்பவம் நடக்கும் நாள் வரைக்கும் புருஷனுக்கு எல்லா வேளையும் சாராயமும், கவுச்சியும், சம்போகமும்தான். உள்ளே கிடந்து வெளியே வரும் வரைக்கும் தாக்குப் பிடிக்க வேண்டுமே?!

ராயப்பனின் உடல் கல்லறைத் தோட்டத்துக்கு வந்துசேர்ந்தது. பெரிய பர்லாந்தின் ஆட்கள் சுற்றிலும் நிறைந்திருந்தார்கள். போலீஸ்காரர்கள் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தார்கள். குண்டுவீச்சுச் சம்பவம் பெரிய பர்லாந்து காதுக்கும் வந்திருந்தது. “நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்... மண்ணுக்கே திரும்புவாய்.”

பாதிரியார் விவிலிய வார்த்தைகள் வாசித்து, ஜெபம் சொல்லி முடித்ததும், சவப்பெட்டியைக் குழிக்குள் இறக்கி மண்ணை மூடி மேடாக்கினார்கள். அப்போது காசி அண்ணாச்சியின் பிளசர் அங்கு வந்து நின்றது. காசி அண்ணாச்சி பெரிய ரோஜா மாலையோடு கல்லறைத் தோட்டத்துக்குள் நுழைந்தார். சமுத்திரமும் பெரிய பர்லாந்தும் அவர் வருகையை வெறுப்புடன் பார்த்த படியிருந்தார்கள்.

காசி அண்ணாச்சி, இதுவரை பெரிய பர்லாந்து தரப்பில் நடந்த எல்லா மரணங்களுக்கும் இதேபோல ரோஜா மாலையோடு வந்திருக்கிறார். இனி நடக்கப்போகும் மரணங்களுக்கும் அவர் ரோஜா மாலை சொல்லிவைத்திருக்கிறார்.

(பகை வளரும்...)