
இங்கிருக்கும் லோடுமேன்கள் எல்லோருக்கும் பம்பாய் துறைமுகத்திலிருக்கும் ஆட்களோடு எப்போதும் தொடர்பு உண்டு. அவர்கள் பெரும்பாலும் இங்கிருந்து போன தமிழ் ஆட்கள்தான்.
“ஆத்திரக்காரனின் கோபம் அவன் சொந்த வீட்டையும் எரிக்கவைக்கும்!” - மூர்க்கர்கள்
காசி அண்ணாச்சிக்கும் பர்லாந்து குடும்பத்து ஆட்களுக்கும் பிரச்னை தொடங்கியது ஹார்பர் லோடுமேன் சங்கத் தேர்தலில்தான். பத்து வருடங்களுக்கு முன்பு அண்ணன், தம்பி இருவரும் ஒற்றுமையாக இருந்த காலத்தில், வழக்கமாகப் பெரிய பர்லாந்து கைகாட்டிய ஆள்தான் சங்கத் தேர்தலில் போட்டியிடுவார்கள். எதிர்த்துப் போட்டியிட காசி அண்ணாச்சியின் ஆட்கள் யாராவது மனு கொடுப்பார்கள்.
காசி அண்ணாச்சியும் கடல் வணிகத்தில் பெரிய ஆள்தான். அவருக்கு அவர் சமூகத்து ஆட்களிடம் செல்வாக்கு உண்டு. அவர்கள் சமூகத்து ஆட்கள் பெரும்பாலும் வற்றல், பருப்பு, நவதானியங்கள், கருப்பட்டி, மிளகு, கடலை எண்ணெய் சமாசாரங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில், காசி அண்ணாச்சியின் சமூகத்து ஆட்கள் துறைமுகத்துக்குள் அவரை முன்னிலைப்படுத்தத் தீர்மானித்திருந்தார்கள். அதற்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தார்கள். கடலும் ஹார்பரும் அண்ணாச்சியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால், தங்கள் சரக்குகளை உள்ளே எடுத்துப்போவதிலும், வெளியே கொண்டுவருவதிலும் எந்தக் கெடுபிடியும் இருக்காது என்று அவர்கள் நினைத்தார்கள்.

அண்ணாச்சியும் ஹார்பர் லோடுமேன்கள் குடும்பத்துக்குக் காசை வாரி இறைத்தார். ராலே சைக்கிள், வழுவழுவென மலேசியா சட்டைகள், சிங்கப்பூர் புடவைகள், டின் பவுடர், குடும்பத்தோடு சினிமா ஆட்டம் பார்க்க டிக்கெட், இடைவேளைகளில் டொரினோவும், பப்ஸுகளுமாக ஏக கவனிப்பு நடந்தது. சிலர், வீட்டின் தென்னைங்கூரையை மாற்ற வழியில்லாமல் நின்றபோது, அவர்களுக்கு ரெட்டை யானை ஓடு வேய்ந்து கொடுப்பதுவரை உதவிகளும் செய்தார். இப்படி, காசி அண்ணாச்சி செலவழித்த பணமும், அவர் எண்ணமும் வீண்போகவில்லை. அதே வருடத்தில், தூத்துக்குடி கடலும் துறைமுகமும் பர்லாந்து சகோதரர்களிடமிருந்து, அண்ணாச்சியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
ஒரு சாதாரண ஹார்பர் லோடுமேன் சங்க தேர்தலுக்கு ஏன் காசி அண்ணாச்சி இவ்வளவு செலவு செய்தாரென்று எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். ஆனால், பர்லாந்துகளுக்கும் அண்ணாச்சிக்கும் தெரியும்... இந்தத் துறைமுகத்தில் எந்தச் சரக்கைக் கையாளவும், சரக்கு ஏற்றும் இடங்களுக்குள் போகவர, எந்தத் தடையுமின்றி திரியவும் உரிமைபெற்றவர்கள் கஸ்டம்ஸ் ஆபீஸர்களும் லோடுமேன்களும்தான். அவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்கள் தயவு இருந்தால் எந்தச் சரக்காக இருந்தாலும் டிரான்ஸிட் ஷெட்டுக்குள் அனுப்பி இறக்கிவிட முடியும். வார்ஃபேஜ் கட்டணத்துக்காக எடையைக் குறைத்து, தேவைப்படும்போது கூட்டி, இருக்கும் சரக்கை இல்லாமலாக்கி, இல்லாத சரக்கை இருப்பதாகக் கணக்குக் காட்டி... என்ன வேண்டுமானாலும் அவர்களால் செய்துவிட முடியும்.
இங்கிருக்கும் லோடுமேன்கள் எல்லோருக்கும் பம்பாய் துறைமுகத்திலிருக்கும் ஆட்களோடு எப்போதும் தொடர்பு உண்டு. அவர்கள் பெரும்பாலும் இங்கிருந்து போன தமிழ் ஆட்கள்தான். குறிப்பாக, தூத்துக்குடி ஹார்பரிலிருந்து போனவர்கள்தான். ஹாஜிமஸ்தான், பம்பாய் துறைமுகத்தைத் தன் கையில் வைத்திருந்தபோது, அவரோடு தொழில் செய்த திரவியம் அண்ணாச்சி, பர்லாந்துவிடம் ஒரு உதவி கேட்டுப் பெற்றுக்கொண்டார்.பர்லாந்துதான் தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர்களில் நூற்றி சொச்சம் பேரை முதல் தவணையாக பம்பாய் துறைமுகத்திற்கு அனுப்பிவைத்தவர். அடுத்த பத்து வருடத்தில் அந்த எண்ணிக்கை ஐநூறைத் தாண்டியது. துறைமுகத்தைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் நிறைய பேர் அங்கு குடும்பமாகப் போய் தங்கத் துவங்கினார்கள். இப்படியாக இந்த இரண்டு துறைமுகங்களின் சரக்கு ஏற்றும் இறக்கும் வேலை தமிழ் ஆட்களின் கைக்கு வந்தது. குறிப்பாகத் தூத்துக்குடி ஆட்களின் கைக்கு.
காசி அண்ணாச்சியின் வசம் துறைமுகம் கிடைத்த அடுத்த சில மாதங்களிலேயே அவரின் ஏற்றுமதி, இறக்குமதி யாவாரத்தில் லாபம் கொழிக்கத் தொடங்கியது. மலிவான விலையில் கப்பல் கப்பலாக பாமாயிலை வாங்கி விற்கத் தொடங்கினார். அதுவரை விற்றுக்கொண்டிருந்த சமையல் எண்ணெய்களின் விலையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், பாமாயில் பாதிக்கும் கீழான விலைக்குக் கிடைத்தது. நடுத்தர, ஏழை மனிதர்களுக்கும், சிறிய ஹோட்டல்காரர்களுக்கும் அது வரப்பிரசாதமாக மாறிப்போனது. ஓரிரு மாதங்களிலேயே தூத்துக்குடி துறைமுகத்தில் நிற்கும் கப்பல்களில், பெரும்பாதி கப்பல்கள் அண்ணாச்சி சரக்கு ஏற்றிவந்த பாமாயில் கப்பல்களாக இருந்தன. அண்ணாச்சியின் செல்வாக்கு இன்னும் பல மடங்கு அதிகரிக்கத் தொடங்கியது.
அதே ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அண்ணாச்சிக்கு சீட் கிடைத்தது. பெருவாரியான வாக்குகளைப் பெற்று, தூத்துக்குடியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஆனார் காசி அண்ணாச்சி. பர்லாந்து குடும்பத்தின் எக்ஸ்போர்ட் ஆபீஸ் இருக்கும் அதே சிலோன் ஆபீஸ் தெருவில், தனது கப்பல் சரக்கு புக்கிங் ஆபீஸை பிரமாண்டமாகத் தொடங்கினார் அண்ணாச்சி. அவரின் சமூகத்து ஆட்களின் சரக்குகள் மொத்தமும் அவரின் நிறுவனம் வழியாகவே வெளிநாடுகளுக்குச் சென்றன. ஆரம்பத்தில் குறைந்த வாடகைக்கு புக்கிங் எடுத்தவர், கட்சி, பதவி, சௌகரியங்களைச் சமாளிக்க சில நாள்களிலேயே புக்கிங் விலையையும், வார்ஃபேஜ் கமிஷனையும் ஏகத்துக்கு ஏற்றினார். இதனால், தேவையில்லாமல் அண்ணாச்சியைப் பெரியாளாக்கிவிட்டோமோ... என்று அவரின் சமூக ஆட்களே புலம்பத் தொடங்கினார்கள். ஆனாலும் அண்ணாச்சியின் கொடி, தூத்துக்குடித் துறைமுகத்தில் உச்சத்தில் பறந்தது.
அண்ணாச்சியின் நாற்பத்தைந்தாவது வயதில், பதினொன்றாவது படிக்கும் அவர் மகள் சித்ராவின் வகுப்புத் தோழியான பத்மாவுடன் அவருக்கு இரண்டாவது திருமணம் நடந்தது. பக்கத்துத் தெருவில் குடியிருந்த அந்தச் சிறுபெண், தினமும் அண்ணாச்சியின் மகளுடன் பிளசர் காரில் பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருந்தாள்.
அதுவொரு தனிக்கதை. ஒருநாள், வேம்பாரிலிருக்கும் அண்ணாச்சியின் மாமியாருக்கு உடல்நிலை மோசமாகிவிட்டதாகச் செய்தி வந்தது. நள்ளிரவில் காசி அண்ணாச்சியின் மனைவியும் மகளும் டிரைவருடன் பிளசர் காரில் கிளம்பிப் போனார்கள். வீட்டில் யாருமில்லை. மறுநாள் காலையில் வழக்கம்போல பள்ளிக்கூடம் செல்வதற்காக அண்ணாச்சி வீட்டுக்கு வந்த பத்மாவைப் பார்த்து, மதிமயங்கிய காசி அண்ணாச்சி அவளை உள்ளே வைத்து கதவைச் சாத்திவிட்டார்.
பெரிய வீட்டின் அறைகளுக்குள் வெடித்த பத்மாவின் அழுகையும் கெஞ்சலும் வெளியே யாருக்கும் கேட்கவில்லை. அன்றைக்கு மதியம் வரைக்கும் அண்ணாச்சி அந்தச் சிறு பெண்ணின் உடலை வேட்டையாடினார். யாருமில்லாத வீட்டின் அறைகளுக்குள் பத்மா கூடு சிதைந்து கீழே விழுந்த சிட்டுக்குருவிபோலத் துடித்துக் கிடந்தாள். காமமும் போதையும் தலைக்கேற காசி அண்ணாச்சி, தன் கனத்த உடலால் அவளைக் குதறிப்போட்டிருந்தார்.
வேம்பாரிலிருந்து காசி அண்ணாச்சியின் மனைவியும் மகளும் திரும்பி வந்தபோது, ஏதிலிகளாக வாசலில் நின்றுகொண்டிருந்த அந்தச் சிறுபெண்ணின் வீட்டாள்கள் அவர் மனைவியிடம் அழுது முறையிட்டார்கள். அண்ணாச்சி, பத்மாவை இரண்டாவது தாரமாகக் கட்டிக்கொள்ளப்போவதாகச் சொல்லி இடியை இறக்கினார். அவரை எதிர்த்து குரல் கொடுக்கவோ, மன்றாடவோ யாருக்கும் திராணியில்லை. பெத்த அப்பனைவிட நாலு வயது மூத்தவனுக்குப் பிள்ளையைக் கட்டி வைப்பதா என்று தலையிலடித்துப் புலம்பினார்கள். அழுது முடங்கி, ஒடுங்கிப்போய்க் கிடந்த பத்மா எழுந்து வந்து அவர்களிடம், “நீங்க போங்க... நான் இங்கேயே இருந்துக்குவேன்” என்று வழியனுப்பிவைத்தாள். அதிர்ச்சி நீங்காமல் எல்லோரும் அவளையே பார்த்துக்கொண்டிருந்த சில நாள்களுக்குப் பிறகு, தன் வகுப்புத் தோழி சித்ராவுக்கு முறைப்படி சித்தியாக ஆனாள் பத்மா.
கொடூரமாக நடந்த திருமணம்தான் என்றாலும், வெகு சில மாதங்களிலேயே அண்ணாச்சிக்குச் சட்டைப் பொத்தான்களை மாட்டிவிடவும், அவர் தலைக்கு எண்ணெய் தேய்த்துவிடவும், சிரித்த முகத்தோடு அருகிலிருந்து சாப்பாடு பரிமாறவும், உவந்து தன்னுடலை அவருக்கு வழங்கவுமாக பத்மா மொத்தமாக மாறிப்போயிருந்தாள். ஆரம்பத்தில் இது அண்ணாச்சியின் முதல் மனைவிக்கும், மகள் சித்ராவுக்கும் தாங்கமுடியாத அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதைவிட காசி அண்ணாச்சி அவளைப் பார்கிறபோதெல்லாம் தன் குற்ற உணர்வைக் களைந்து, ஒருவித திகில்கூடிய மனநிலையோடுதான் எதிர்கொண்டார். ஆனாலும், பத்மா விஷயத்தில் மொத்த தூத்துக்குடியுமே அண்ணாச்சியின் மேல் பொறாமையோடும், எரிச்சலோடுமிருந்தது.
சிலோன் ஆபீஸ் தெருவில் சின்னச் சின்ன புக்கிங் ஆபீஸ்களெல்லாம் காலியாகத் தொடங்கின. எல்லாப் பக்கங்களிலும் காசி அண்ணாச்சியின் சாம்ராஜ்யக்கொடியே பறந்தது. தங்களின் பழைய பாரம்பர்யங்களால் பர்லாந்துகள் மட்டும் எதிர்த்து நின்று மோதிப் பார்த்தார்கள். துறைமுக லோடுமேன் சங்கம், காசி அண்ணாச்சியின் கைவசமிருந்ததால் சரக்கு ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி, கப்பல் வாடகை எல்லாற்றிலும் அவர் சொன்னதுதான் சட்டம், அவர் வைத்ததுதான் விலை என்றானது. இதனால், வேண்டுமென்றே பர்லாந்துகளின் தோணிகளுக்கு ஏற்றுக் கூலியைக் கூட்டிச் சொன்னார்கள். அதிகம் கொடுத்தாலும் தோணிகளை ‘பெர்த்’ ஏரியாவில் நீண்டநேரம் காக்கவைத்தார்கள்.

சரக்குகளைச் சரியான நேரத்துக்கு, சரியான இடத்துக்கு எந்தவிதச் சேதாரமுமில்லாமல் கொண்டுசெல்ல வேண்டியதே இந்தத் தொழிலுக்கு அடிப்படை நேர்மையும், வணிக நற்சான்றும். சிலோன் ஆபீஸ் தெருவில் பர்லாந்துகள் அல்லது அண்ணாச்சி இரண்டு பேரில் யாராவது ஒருவர்தான் கடை விரிக்க வேண்டுமென்ற நிலையில் சமுத்திரம் ஒரு திட்டம் போட்டான். அண்ணாச்சியின் புக்கிங் சரக்குகள் பெரும்பாலும் தானியங்கள், பருப்பு மூட்டைகள், கருப்பட்டி, மிளகுதான். அவரின் சரக்கு சிப்பங்கள் செல்லும் எல்லாக் கப்பல்களிலும் பர்லாந்துகளின் விசுவாசியான சில லோடுமேன்கள் மூலம் இரண்டு பை நிறைய வயல் எலிகளை யாருக்கும் தெரியாமல் ஏற்றினான்.
கடலில் கப்பலோ, தோணியோ நகர்ந்த சில மணி நேரத்திலேயே பசியெடுத்த அந்த வயல் எலிகள் கோணிச் சிப்பங்களைப் பற்களால் பிய்த்துக் கிழித்துக்கொண்டு வெளியே வரும். சமுத்திரம் போட்ட திட்டப்படி, அத்தனை எலிகளும் தங்கள் வேலைகளைக் காட்டின. காசி அண்ணாச்சியின் சரக்குகள் மொத்தமும் எலி கடித்த பண்டங்களாக ட்ரான்ஸிட் ஷெட்டின் ஓரத்தில் குவிக்கப்பட்டன. இதனால், வியாபாரம் கெட்ட அவரின் சமூகத்து ஆட்கள் மத்தியில், காசி அண்ணாச்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் காசி அண்ணாச்சியின் சமூகத்தினரே அவருக்கு எதிராகக் களமிறங்கி வேலை செய்தார்கள். காசி அண்ணாச்சி தோற்கடிக்கப்பட்டார். லோடுமேன் சங்கம் அவர் கையை விட்டுப்போனது. காசி அண்ணாச்சியின் கொடிக்கம்பம் கடற்கரையில் முறிந்து விழத் தொடங்கியது.
(பகை வளரும்...)