விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ஆன்லைன் கடன் ஆப் மூலமாக 18 லட்சத்து 15 ஆயிரத்து 991 ரூபாயை மர்மக் கும்பல் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை போலீஸ் கைதுசெய்துள்ளது. இது குறித்து போலீஸாரிடம் பேசினோம். "விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தொழில் விரிவாக்கத்துக்காக சிலரிடம் பணம் கேட்டிருக்கிறார். ஆனால், அவருக்கு வேண்டிய தொகை கிடைக்காததால் ஆன்லைனில் உடனடி கடன் ஆப் மூலமாக தொழில் கடன் பெற முயன்றிருக்கிறார். இதற்காக 31.03.2022-ம் தேதி கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 27 இன்ஸ்டன்ட் லோன் ஆப்களை டௌன்லோடு செய்து அதன் மூலமாக 28 லட்சத்து 93 ஆயிரத்து 643 ரூபாயைக் கடனாகப் பெற்றிருக்கிறார்.

தொடர்ந்து 04.04.2022-ம் தேதியிலிருந்து அவருக்குப் பல்வேறு நபர்கள் வெவ்வேறு நம்பர்களிலிருந்து போன் செய்து கடனை திருப்பிக் கேட்டுள்ளனர். `கடனைத் திருப்பித் தராவிட்டால் குடும்பத்துடன் இருக்கும் போட்டோவை ஆபாசமாகச் சித்திரித்து இணையத்தில் வெளியிடுவோம்’ என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர், குற்றவாளிகள் சொன்னபடி பல்வேறு யு.பி.ஐ நம்பர்களுக்கு மொத்தம் 47 லட்சத்து 9 ஆயிரத்து 634 ரூபாய் வரை திருப்பிக் கொடுத்திருக்கிறார். ஆனாலும், அவரை விடாமல் தொடர்ந்து பணம் கேட்டு குற்றவாளிகள் மிரட்டியுள்ளனர். ஒருகட்டத்தில் அவர், பணம் தர மறுத்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளிகள், தொழிலதிபரின் படத்தை ஆபாசமாகச் சித்திரித்து அவரின் நண்பர்களுக்கு ஆன்லைனில் அனுப்பியுள்ளனர். இதனால் மனவேதனையடைந்த அவர், சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவின் பேரில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைப் பிடிப்பதற்கான பணிகள் தொடங்கின.

அதன்படி, போலீஸ் விசாரணை நடத்தியதில் கோயம்புத்தூரைச்ச் சேர்ந்த புரோக்கர் ஒருவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினோம். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், மாஞ்சேரி மற்றும் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், முகமது சாதிக் ஆகியோர்தான் சாத்தூர் தொழிலதிபரிடம் பேசி பணத்தை மோசடி செய்தார்கள் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அப்துல் ரஹ்மான், முகமது சாதிக் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 65 சிம் கார்டுகள், 17 செல்போன்கள், 10 வங்கிக் காசோலைப் புத்தகங்கள், 6 ஏ.டி.எம் கார்டுகள், 1 லேப்டாப், மோடம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்த பணம் முடக்கிவைக்கப்பட்டிருக்கிறது.
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கைதுசெய்யப்பட்ட நபர்கள் அடிமட்ட ஆட்கள் மட்டுமே. இந்தக் கும்பலின் தலைவன் வெளிநாட்டில் இருந்துகொண்டு மூளையாகச் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது. எனவே, இந்தச் சங்கிலித் தொடரில் உள்ளவர்கள் குறித்து தொடர் விசாரணை நடத்திவருகிறோம். இந்த நெட்வொர்க்கில் உள்ளவர்கள் இது போன்று பல நபர்களிடம் பணத்தை மோசடி செய்திருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அது குறித்தும் விசாரணை நடத்துகிறோம்.
மோசடிக் கும்பல்கள் பெரும்பாலும் தமிழகத்தைக் குறிவைத்தே களத்தில் இறங்கியுள்ளன. எனவே, ஆன்லைனில் இன்ஸ்டன்ட் லோன் சம்பந்தமாக எந்த அப்ளிகேஷனையும் பதிவிறக்கம் செய்து ஏமாற வேண்டாம். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மோசடி அப்ளிகேஷன்கள் குறித்து புகாரளிக்கப்பட்டு அவை தற்போது பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும் மோசடிக் கும்பல்கள், ஏமாற்றிச் சேர்த்த பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றி, பல்வேறு நாடுகளில் முதலீடு செய்துவைத்திருப்பதாகத் தெரியவருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்துவருகிறோம். விரைவில் வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் கைதுசெய்வோம்" என்றனர்.