விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த சிறுமி திடீரென அங்கிருந்து மாயமானார். மருத்துவமனை ஊழியர்கள் பாதுகாப்பையும் மீறி சிறுமி மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் பேசுகையில், "ராஜபாளையம் வட்டத்தில் தாய், தந்தையை இழந்த 16 வயது சிறுமி ஒருவர், தனது பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்துவந்திருக்கிறார்.

அப்போது அவர்களுக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த திருமணமான நபர் தேவையான உதவிகளைச் செய்துவந்திருக்கிறார். இந்த நிலையில் சிறுமியின் பாட்டி, முதுமையின் காரணமாக சமீபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆதரவின்றி இருந்த சிறுமியை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. நாளடைவில், கணவரின் நடத்தைமீது சந்தேகமடைந்த மனைவி, இது குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவுசெய்து புகாரளித்த பெண்ணின் கணவரைக் கைதுசெய்தனர்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தொடர்ந்து அதிகாரிகளின் ஆலோசனைப்படி, அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மருத்துவச் சோதனையில் சிறுமி கருவுற்றிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், மருத்துவரின் அறிவுரைப்படி சிறுமிக்குக் கருக்கலைப்பு செய்யவும், பாதுகாப்புக் கருதி, சிறுமியை பாண்டியன் நகர் காப்பகத்தில் தங்கவைக்கவும் நடவடிக்கை எடுத்தனர். உடல்நிலை கருதி, காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த சிறுமி கண்காணிக்கப்பட்டு, பிறகு கருக்கலைப்புக்காக நேற்று விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, கருக்கலைப்புக்கான முதற்கட்ட சிகிச்சைகளை எடுத்துக்கொண்ட சிறுமி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார்.

இந்த நிலையில் இரவு நேரத்தில் மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியிலிருந்தவர்களை ஏமாற்றிவிட்டு, அங்கிருந்து சிறுமி திடீரென மாயமானார். மருத்துவமனையிலிருந்து சிறுமி மாயமானது குறித்துத் தகவலறிந்த விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர்.