திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா டி.டி 487 திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகச் சாலையில் பணியாற்றுபவர் மேனகா (32). இந்த நுகர்வோர் பண்டகாலச் சாலையில் மொத்தம் 1,233 ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. சந்தைப்பேட்டை, நேருஜி நகர், வசந்தா நகர்ப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்கு ரேஷன் பொருள்களை வாங்குவது வழக்கம். மேனகா நேற்று தனது பணியைச் செய்துகொண்டிருந்தபோது அந்தப் பகுதியின் தி.மு.க அவைத்தலைவர் அமீர் பாட்ஷா என்பவர், மேனகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அது தொடர்பான வீடியோ வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

அந்த வீடியோவில், ``உன்னால் முடிந்ததைப் பார்... எங்கள் கருணாநிதி ஆட்சியில் மூட்டை மூட்டையாகவும், பெட்டிப் பெட்டியாக அரிசி பருப்பை அப்போது இருந்த நகரச் செயலாளர் அன்வரை வைத்து தூக்கிச் சென்றோம். நானும் பெட்டிப் பெட்டியாக வீட்டுக்குத் தூக்கிச் சென்றேன். ரெண்டு பாக்கெட்டுகள் எண்ணெய் இல்லை என்று சொல்கிறாய்... நீ என்ன சேல்ஸ்வுமன். என்னிடம் விளையாடாதே... விபரீதம் ஆகிவிடும்" என்கிறார் தி.மு.க நிர்வாகி அமீர் பாட்ஷா.
இது குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் விசாரித்தோம். ``அனைத்து ரேஷன் கடைகளிலும் இதுபோல அரசியல் பிரமுகர்கள் மிரட்டிப் பொருள்களைக் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். எப்படிச் சமாளிப்பது என்றே தெரியவில்லை. சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் விற்பனையாளர் அந்த தி.மு.க பிரமுகரிடம், `உங்கள் அட்டைக்கு மட்டும் பொருள்கள் கொடுக்கிறேன். பிற அட்டைகளுக்கு தரமுடியாது' எனக் கூறியிருக்கிறார்.

அதற்கு அவர், `நான் சும்மாவா கேட்கிறேன்... பணம் தருகிறேன்' எனக் கூறியிருக்கிறார். பணம் கொடுத்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்குத்தானே பொருள்கள் தரமுடியும். கைரேகைப் பதிவு, ரேஷன் அட்டை காண்பித்தால் மட்டுமே பொருள்கள் தருகிறோம். இது போன்றவர்களால்தான் அனைத்து தரப்புக்கும் முறையாகப் பொருள்கள் வழங்க முடியாமல் போகிறது. அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்திருக்கிறோம்" என்றனர்.