சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை அமைப்பு சார்பில் சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இசையமைப்பாளர் தேவா, சின்னத்திரை பிரபலம் ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான 'பரிதாபங்கள் கோபி', சுதாகர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட கெளரவ டாக்டர் பட்டம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஒய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் அனைவருக்கும் டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
இந்த நிலையில் சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை சங்கம் என்றே ஓர் அமைப்பே இல்லையென்ற அதிர்ச்சியூட்டும் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. மேலும், நிகழ்வுக்கான அழைப்பிதழில் இந்திய அரசின் முத்திரையும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரும் சட்டவிரோதமாக அச்சிடப்பட்டிருந்தது என்ற தகவலும் வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பாக துணைவேந்தர் வேல்ராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "இந்த அரங்கத்தில்வைத்து இப்படி ஒரு தவறான செயல் நடந்ததற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் பெயர் இருந்ததால், எங்கள் டீனும் கடிதத்தைப் பார்த்தவுடன் அனுமதி வழங்கிவிட்டார். இது வள்ளிநாயகம் கொடுத்த கடிதமா அல்லது அதுவும் போலியா எனத் தெரியவில்லை. அதில் இந்திய அரசு முத்திரை இருந்தது.

வள்ளிநாயகம் வருவதாக எங்களிடம் சொன்னதால் நாங்கள் இடம் கொடுத்திருக்கிறோம். அவர் பெயரை வித்தியாசமாக அவர்கள் உபயோகப்படுத்தியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. எங்கள் பக்கத்திலிருந்து நாங்கள் நடவடிக்கையைத் தொடங்கிவிட்டோம். காவல்துறையில் இது குறித்து புகாரளித்திருக்கிறோம். அண்ணா பல்கலைக்கழகம் புனிதமான இடம். அதிலும் விவேகானந்தா அரங்கம் பழைமைவாய்ந்த, பெருமையான அரங்கம். இந்த அரங்கத்தில்வைத்து இப்படி ஒரு தவறான செயல் நடந்ததற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்" என்றார்.
ஓய்வுபெற்ற நீதியரசர் வள்ளிநாயகம், ``இந்த நிகழ்ச்சிக்காக அனுமதி கேட்டு நான் கையெழுத்து போடவில்லை. உண்மையாகவே எனக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. நான் ஒரு சிறப்பு விருந்தினராக மட்டுமே பங்கேற்றேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்ததால் நான் நிகழ்வில் பங்கேற்றேன்" என்று விளக்கமளித்திருக்கும் நிலையில் விழா அமைப்பாளர்களின் மொபைல் போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கின்றன.

இது குறித்து `பரிதாபங்கள்’ கோபியிடம் பேசினோம். ``எங்களைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்பவர்களுக்குத் தெரியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் எந்தப் பெரிய நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை. இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஹரிஷ் ஒரு மாதத்துக்கு முன்பு என்னை போனில் தொடர்புகொண்டு இந்த நிகழ்வு குறித்துப் பேசினார். அதற்குப் பின்னர் என்னுடைய மேலாளர்தான் அவரிடம் பேசினார். அண்ணா பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நம்பித்தான் நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டோம். இதைச் சொல்லித்தான் பல பிரபலங்களையும் ஏமாற்றியிருப்பதாகத் தெரிகிறது. இதனால் எங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டிருப்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. தவறிழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.