இந்தியாவில் சமீபகாலமாகவே ஆம்புலன்ஸுக்குப் பணமில்லை என்ற காரணத்தினால் பலதரப்பட்ட ஏழைகள் தங்களுடைய தாய், தந்தை, மனைவி, பிள்ளைகளின் சடலங்களை நடந்தே தோளில் சுமந்து செல்வது, பைக்கில் கொண்டுசெல்வது போன்ற அவலங்களைக் கண்டுவருகிறோம். அதன் நீட்சியாகத் தற்போது மேற்கு வங்கத்தில் ஆஷிம் தேப்சர்மா என்பவர் ஆம்புலன்ஸுக்குப் பணமில்லாததால் இறந்த தன்னுடைய ஐந்து மாதக் குழந்தையின் உடலை பையில் மறைத்து வைத்துக்கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்குப் பேருந்தில் 200 கி.மீ பயணம் செய்த அவல நிகழ்வு நடந்திருக்கிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஷிம் தேப்சர்மா, ``சிலிகுரியிலுள்ள வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆறு நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு என்னுடைய ஐந்து மாத மகன் நேற்றிரவு இறந்தார். இதற்கிடையில், என் மகனின் சிகிச்சையின்போது ரூ.16,000 செலவு செய்தேன். என் மகன் இறந்தபோது உடலை கலியகஞ்சிலுள்ள என் வீட்டுக்குக் கொண்டும்செல்ல ஆம்புலன்ஸ் கேட்டபோது, `102 ஆம்புலன்ஸ் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு மட்டுமே ஆம்புலன்ஸ் இலவசம், சடலங்களுக்கு அல்ல’ என்று டிரைவர் கூறிவிட்டார்.
மேலும், உடலை ஆம்புலன்ஸில் கொண்டுசெல்ல ரூ.8,000 பணம் கேட்டார் டிரைவர். ஆனால், அந்த அளவுக்கு என்னிடம் பணமில்லை. இதனால் பேருந்தில் செல்ல முடிவுசெய்தேன். அப்போது பேருந்தில் எங்கு சக பயணிகளுக்குத் தெரிந்தால் பேருந்திலிருந்து இறக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில், யாருக்கும் தெரியாமல் உடலை பையில் துணியால் சுருட்டி வைத்துக்கொண்டு சிலிகுரியிலிருந்து கலியகஞ்சிக்கு சென்றேன்" என்றார்.

இதற்கிடையில் மாநில பா.ஜ.க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, ``திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் 'ஸ்வஸ்த்ய சதி' மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் சாதித்தது இதுதான்" என ட்விட்டரில் விமர்சனம் செய்தார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென், ``குழந்தையின் இறப்பை வைத்து இழிவான அரசியல் செய்ய பா.ஜ.க முயல்கிறது" எனக் குற்றம்சாட்டினார்.