Published:Updated:

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் இன்றைய நிலையென்ன? #DoubtOfCommonMan

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
News
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

வழக்கமாகக் குற்றவாளிகள் யார், என்னென்ன குற்றம்செய்தார்கள் என்பது ஒரு வழக்கில் தெளிவாகத் தெரிந்துவிடும். தண்டனை என்ன என்பதற்குத்தான் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்த வழக்கில் குற்றவாளிகள் யார் யார், கூட்டாளிகள் யார் யார் என்பதே இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Published:Updated:

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் இன்றைய நிலையென்ன? #DoubtOfCommonMan

வழக்கமாகக் குற்றவாளிகள் யார், என்னென்ன குற்றம்செய்தார்கள் என்பது ஒரு வழக்கில் தெளிவாகத் தெரிந்துவிடும். தண்டனை என்ன என்பதற்குத்தான் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்த வழக்கில் குற்றவாளிகள் யார் யார், கூட்டாளிகள் யார் யார் என்பதே இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
News
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
"தமிழகத்தையே அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்யப்பட்டு மிகச்சரியாக 160 நாள்கள் கடந்துவிட்டன. இப்போது அந்த வழக்கின் நிலை என்னவாக இருக்கிறது?" இப்படியொரு கேள்வியை விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் எழுப்பியிருந்தார், எம்.ஸ்டீபன்ராஜ் என்ற வாசகர். களத்தில் இறங்கி விசாரித்தோம்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

நடந்த சம்பவம் ஒரு ஃப்ளாஷ் பேக்!

Doubt of Common Man
Doubt of Common Man

கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவி அளித்த அந்தப் புகார் தமிழகத்தையே அதிரவைக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

"பிப்ரவரி 12-ம் தேதி, ஃபேஸ்புக் மூலம் என் நண்பரான ரிஷ்வந்த் என்ற சபரிராஜன், `அவுட்டிங் போகலாம்’ என்று சொல்லி என்னைக் காரில் அழைத்துச் சென்றான். திருநாவுக்கரசு என்பவன் காரை ஓட்டினான். பின் சீட்டில் நானும், சபரிராஜனும் அமர்ந்திருந்தோம். நடுவழியில் வசந்தகுமார், சதீஷ் ஆகிய இருவரும் காருக்குள் ஏறினார்கள். சில நிமிடங்களிலேயே என்னைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தி அதை ஒரு செல்போனில் வீடியோ எடுத்தார்கள். பின்பு நான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு, `நாங்கள் விரும்பும்போதெல்லாம் நீ வர வேண்டும். நாங்கள் சொல்கிறபடியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும்; கேட்கும் போதெல்லாம் பணம் தர வேண்டும்; இல்லையெனில், இந்த வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிடுவோம்' என்று மிரட்டினார்கள்.

வீட்டுக்குத் தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என்பதால் நான் யாரிடமும் இதுபற்றிச் சொல்லவில்லை. ஆனால் அவர்கள், தொடர்ந்து மிரட்டினார்கள். வேறுவழியின்றி, என் அண்ணனிடம் விஷயத்தைச் சொன்னேன். இதையடுத்து சபரிராஜனையும், திருநாவுக்கரசையும் பிடித்து என் அண்ணன் விசாரித்தார். வீடியோவை டெலிட் செய்வதற்காக அவர்களது செல்போனைப் பிடுங்கிப் பார்த்துள்ளார். அதில், இன்னும் சில பெண்களையும் இவர்கள் இப்படி செய்ததற்கான வீடியோ ஆதாரங்கள் இருந்திருக்கின்றன. இவர்களை வெளியேவிட்டால் இன்னும் ஏராளமான பெண்கள் பாதிக்கப்படுவார்கள்” என்று முடிந்தது அந்தப் புகார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

உடனடியாக சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரையும் கைதுசெய்தது பொள்ளாச்சி போலீஸ். முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட திருநாவுக்கரசு தலைமறைவானார். அடுத்த சில நாள்களில் இந்தத் தகவல் ஊடகங்களில் வெளியாகி விஷயம் பூதாகரமானது.

அரசியல் புள்ளிகள் தலையீடு

Doubt of Common Man
Doubt of Common Man

பிப்ரவரி 26-ம் தேதி, அதே பொள்ளாச்சி கிழக்குக் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் ஒரு புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், "செந்தில் (33), ஆச்சிப்பட்டி வசந்தகுமார் (26), மணிவண்ணன் (25), `பார்' நாகராஜ் (28), பாபு (26) ஆகிய ஐந்துபேர், என் தங்கை கொடுத்திருக்கும் புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி என்னைத் தாக்கினார்கள்” என்று கூறப்பட்டிருந்தது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

அதன்பிறகுதான் இந்த விவகாரத்துக்குள் அரசியல் பின்புலம் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. ஆம்! அடிதடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட `பார்' நாகராஜ் என்பவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர். இந்த வழக்கில் மணிவண்ணனைத் தவிர, (அவர் தலைமறைவாக இருந்தார்) கைதுசெய்யப்பட்ட நால்வரும் உடனடியாக ஜாமீனில் வெளிவந்ததும்தான் இதன் பின்னணியில் அரசியல் புள்ளிகள் இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டியது. `பார்' நாகராஜ் ஆதரவில்தான் இத்தனையும் நடந்திருக்கிறது என்றும், பார் நாகராஜுக்குப் பின்னால் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் இருக்கிறார் என்றும் தகவல் உலவ ஆரம்பித்தது. அதற்கேற்றாற்போல் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனோடு திருநாவுக்கரசு அண்டு கோ இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக, விஷயம் பற்றி எரிந்தது.

அது தேர்தல் நேரம் என்பதால், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த பொள்ளாச்சி தி.மு.க-வினர், 'தலைமறைவாக இருக்கும் திருநாவுக்கரசை கைதுசெய்ய வேண்டும்' என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு, மார்ச் 4-ம் தேதி மாக்கினாம்பட்டியில் கைதுசெய்யப்பட்டார். அதற்கு முதல்நாள், `நாளை நான் சரணடைந்துவிடுவேன். என்மீது எந்தத் தவறும் கிடையாது. எந்தப் பெண்ணையும் நான் மிரட்டவில்லை. எல்லாப் பெண்களும் எனக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். இதில் அரசியல் இருக்கிறது. பலபேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். என் உயிரே போனாலும் பரவாயில்லை... நான் எல்லா உண்மைகளையும் சொல்வேன்... எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எனக்கு சப்போர்ட் பண்ணணும்’ என்று வாட்ஸ்-அப்பில் ஆடியோ வெளியிட்டிருந்தார். இந்த விவகாரத்தின் பின்னணியில் இருக்கும் விபரீதங்களை அந்த ஆடியோ வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.

இன்னொரு பக்கம், தங்கள்மீது வீண் பழி சுமத்தப்படுவதாகக் கொந்தளித்த அ.தி.மு.க-வினர், "தி.மு.க மாவட்டச் செயலாளர் `தென்றல்' செல்வராஜின் மகனான மணிமாறனோடுதான் திருநாவுக்கரசு அண்டு கோவுக்குத் தொடர்பிருக்கிறது" என்று புகார் சொல்லி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்கள் மணிமாறனோடு இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் உலவவிட்டார்கள். இந்த விவகாரத்தில் மாறிமாறி வெளிவந்த புகைப்பட பூதங்களைக் கண்டு தமிழகமே மிரண்டுபோனது.

பார் நாகராஜ் சொன்ன பகீர் ஸ்டேட்மென்ட்!

மக்கள் கொந்தளிப்பு அதிகரித்ததை அடுத்து, இந்த வழக்கைக் கடந்த மார்ச் 12-ம் தேதி, சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றியது அரசு. ஆனாலும், `சி.பி.ஐ விசாரணை வேண்டும்' என்ற கோஷம் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருந்தது. வேறுவழியின்றி மறுநாளே சி.பி.ஐ விசாரணையைக் கோரியது தமிழக அரசு. அதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையிலும் வெடித்தது சர்ச்சை. அதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியிடப்பட்டதால் வெகுண்டெழுந்தார்கள் சமூக ஆர்வலர்கள்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பாதிக்கப்பட்ட வேறு பெண்கள் யாரும் புகார் கொடுக்க வரக் கூடாது என்பதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்று சர்ச்சை கிளம்பியது. அப்போது கோவை எஸ்.பி-யாக இருந்த பாண்டியராஜன்தான் இதற்குக் காரணம் என்றும், அவர் ஆளும்கட்சிக்கு ஆதரவாக நடந்துகொள்கிறார்கள் என்றும் எதிர்க்கட்சியினர் காய்ச்சி எடுத்தனர். இந்தப் பரபரப்பான சூழலில், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமா, எப்போது விசாரணையைத் தொடங்கும் என்று எல்லோரும் எதிர்கார்த்துக் காத்திருக்க, "சி.பி.ஐ வரும்வரை நாங்கள் விசாரணை நடத்துவோம்" என்று சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி நிஷா பார்த்திபன் தலைமையிலான டீம் மும்முரமாக செயல்படத் தொடங்கியது.

சி.பி.சி.ஐ.டி வேகம் காட்டத் தொடங்கியதும், அடிதடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்திருந்த `பார்' நாகராஜ், "எனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. என் மீது தவறாகக் குற்றம்சாட்டுகிறார்கள். தன் மகனைக் கடத்திவைத்திருப்பதாக திருநாவுக்கரசின் அம்மா சொன்னதால்தான் அந்தப் பெண்ணுடைய அண்ணனை அடிக்கப்போனேன். இப்படியான விஷயம் என்று தெரிந்திருந்தால் நான் போயிருக்கவே மாட்டேன். சென்ற ஆண்டுகூட இதேபோல என் நண்பன் ஒருவனின் தங்கையை சபரிராஜன் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியுள்ளான். விஷயம் என்னிடம் வந்தது. நான் போலீஸில் புகார் கொடுக்கலாம் என்று சொன்னேன். ஆனால், என் நண்பன்தான் `தங்கையின் வாழ்க்கை பாழாகிவிடும்’ என்று சொல்லி மறுத்துட்டான்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

அதன் பின்பு, நான்தான் சபரிராஜனைக் கூப்பிட்டு மிரட்டி, அந்த வீடியோவை டெலிட் செய்யவைத்தேன். அப்படி இருக்கும்போது நான் எப்படி அவர்களோடு கூட்டுச்சேர்ந்து இப்படிச்செய்வேன்" என்று கூறியிருந்தார். `தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை' என்பதற்காக 'பார்' நாகராஜன் இதைச் சொல்லப்போக, சபரிராஜனின் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்கும் விதமாக அது அமைந்தது.

"நான் பொள்ளாச்சியிலேயே இல்லை..." திருநாவுக்கரசு கொடுத்த ஷாக்...!

இதையடுத்து, திருநாவுக்கரசை கஸ்டடியில் எடுத்து விசாரித்தது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில், திருநாவுக்கரசு ஒரு புதுக்குண்டைப் போட்டார். "சம்பவம் நடந்ததாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ள பிப்ரவரி 12-ம் தேதி, நான் பொள்ளாச்சியிலேயே இல்லை. காங்கிரஸின் மாநிலச் செயல்தலைவராக நியமிக்கப்பட்ட மயூரா ஜெயக்குமாருக்கு வாழ்த்துச் சொல்வதற்காக என் அப்பா மற்றும் சக நிர்வாகிகளோடு கோயம்புத்தூருக்குச் சென்றுவிட்டேன்" என்று சொல்ல, மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பி விசாரித்தது சி.பி.சி.ஐ.டி. அதுதொடர்பாகப் பேசிய மயூரா ஜெயக்குமார், "திருநாவுக்கரசையோ அவரின் தந்தை கனகராஜையோ எனக்கு நேரடியாகத் தெரியாது. சி.பி.சி.ஐ.டி சம்மன் அனுப்பிய பிறகுதான் 12-ம் தேதி, திருநாவுக்கரசும் அவரின் தந்தை கனகராஜும் என்னைச் சந்திக்க வந்துள்ளார்கள் என்ற தகவல் தெரிந்தது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

மாநிலச் செயல்தலைவராக நான் நியமிக்கப்பட்டதற்காக எனக்கு வாழ்த்துச் சொல்ல அன்றைய தினம் நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தார்கள். அதில் திருநாவுக்கரசு இருந்தாரா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஏனென்றால், அவரை அதற்குமுன் நான் பார்த்ததில்லை. பொள்ளாச்சியிலிருந்து கட்சி அபிமானிகளை அழைத்து வந்திருந்த காங்கிரஸ் பிரமுகர் ராஜசேகரை அழைத்து விசாரித்தேன். அவர்தான், `திருநாவுக்கரசுவும் அவரின் தந்தை கனகராஜும் அன்றைய தினம் வந்திருந்தார்கள்’ என்று சொன்னார். அவர் சொன்னதை அப்படியே நான் சி.பி.சி.ஐ.டி-யிடம் சொல்லியிருக்கிறேன்" என்றார். `இது வழக்கின் அஸ்திவாரத்தையே அசைக்கிறதே' என்று பேசப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்பிருப்பதாக திருநாவுக்கரசு வெளியிட்ட ஆடியோ தொடர்பான தகவல் எதுவும் வெளிவரவில்லை.

அடிதடி வழக்கில் சரண்டரான மணிவண்ணன் பாலியல் வழக்கில் அப்ரூவர் ஆனாரா?

திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய நான்கு பேர் மட்டுமே பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அடிதடி வழக்கில் தேடப்பட்டு வந்த மணி என்கிற மணிவண்ணன் கோவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மணிவண்ணனை கஸ்டடியில் எடுத்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மணிவண்ணனுக்கும் பாலியல் விவகாரத்தில் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி தரப்பில் கூறப்பட்டது.

"திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகியோரோடு சேர்ந்து நானும் திருநாவுக்கரசுவின் பண்ணை வீட்டில் பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவுசெய்தோம்'' என்று மணிவண்ணன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து, பொள்ளாச்சி போலீஸார் நான்குபேர் மீது பதிவுசெய்த வழக்கை விட்டுவிட்டு, மணிவண்ணனோடு சேர்த்து ஐந்துபேர் மீதும் புதிய எஃப்.ஐ.ஆரைப் பதிவுசெய்தது சி.பி.சி.ஐ.டி போலீஸ். பழைய வழக்கில், `குற்றவாளிகளுக்கு ஐந்து ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்கமுடியும்' என்ற சூழல் நிலவியது. ஆனால், தற்போது பதியப்பட்டுள்ள வழக்கில், 'குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள்தண்டனை வரை வழங்க வாய்ப்புள்ளது' என பரபரப்பாகப் பேசப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

"சி.பி.ஐ என்ட்ரியும்... சீக்ரெட் விசாரணையும்..!”

சி.பி.சி.ஐ.டி போலீஸார் குற்றப்பத்திரிகை தயார்செய்துகொண்டிருந்த நிலையில், ஏப்ரல் 26-ம் தேதி இந்த வழக்கைக் கையிலெடுத்தது சி.பி.ஐ ! எஸ்.பி கலைமணி, இன்ஸ்பெக்டர் விஜயா வைஷ்ணவி ஆகியோர் அடங்கிய குழு, சி.பி.சி.ஐ.டி போலீஸார் திரட்டிய வழக்குதொடர்பான ஆவணங்களை முறைப்படி பெற்றுக்கொண்டு தங்களுடைய விசாணையைத் தொடங்கினர்.

கடந்த மே, 10-ம் தேதி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலிருந்து சி.பி.ஐ. விசாரணை ஆரம்பித்தது. குறிப்பிட்ட காலகட்டத்தில் அங்கு உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றவர்களின் பட்டியலை சி.பி.ஐ அதிகாரிகள் பெற்றுச்சென்றனர். `சமீபத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளம்பெண்கள் பற்றிய தகவல்களையும், அதற்கான காரணங்களையும் திரட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டது. பொள்ளாச்சி எம்.ஜி.ஆர் நகரில் உள்ள சபரிராஜன் வீட்டுக்குச் சென்று, அவரின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தியது சி.பி.ஐ டீம்.

அடுத்ததாக மே 14-ம் தேதி இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பூர்வீக வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த வீட்டின் அருகில் குடியிருப்பவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

இப்படி, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் பெற்றோர்கள், உறவினர்கள், அவர்களுடைய கல்லூரி நண்பர்கள், அடிதடி வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் எனப் பலரிடம் பல கட்டங்களாகத் தங்களது விசாரணையை மிகவும் ரகசியமாக நடத்திய சி.பி.ஐ., பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் உள்ளிட்ட ஐந்து பேர் மீதும் மே மாதம் 24-ம் தேதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இதையடுத்து, மணிவண்ணன் சார்பாகத் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, தங்களது விசாரணையை மேற்கொண்டு வரும் சி.பி.ஐ., விரைவில் கூடுதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யும் என்று கூறப்படுகிறது. அந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகே, இந்த வழக்கில் சி.பி.ஐ எந்தக் கோணத்தில் பயணித்திருக்கிறது, யார் யாரெல்லாம் குற்றவாளிகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியே வரும்.

விசாரணையில் ரகசியம்!

Doubt of Common Man
Doubt of Common Man

`முதன் முதலாகப் புகார் கொடுத்த பெண்ணைத் தவிர பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் புகார் கொடுத்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். காரணம், இவ்வளவு பரபரப்புக்குள்ளான இந்த வழக்கில் புகார் கொடுத்தால் தகவல் கசிந்து தங்கள் வாழ்க்கை வீணாகிவிடும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சப்பட்டு ஒதுங்கிக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதனாலேயே இம்மியளவுகூடத் தங்களது விசாரணை விவரம் வெளியில் கசிந்துவிடக் கூடாது என்பதில் சி.பி.ஐ மிகவும் கவனமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள், போலீஸ் வட்டாரத்தினர்.

வழக்கமாகக் குற்றவாளிகள் யார், என்னென்ன குற்றம்செய்தார்கள் என்பது ஒரு வழக்கில் தெளிவாகத் தெரிந்துவிடும். தண்டனை என்ன என்பதற்குத்தான் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த வழக்கில் குற்றவாளிகள் யார் யார், கூட்டாளிகள் யார் யார் என்பதே இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சி.பி.ஐ விசாரித்தாலும் இதிலுள்ள அரசியல் தொடர்புகளை அவர்கள் வெளியே கொண்டு வருவார்களா அல்லது பெயரளவில் சிலரைக் கைகாட்டி தண்டனை வாங்கிக்கொடுத்துவிட்டு வி.ஐ.பி குற்றவாளிகளை வெளியில் விட்டுவிடுவார்களா என்ற விவாதம் நிறையவே நடக்கிறது.

குற்றப்பத்திரிகை வெளியே வந்தால்தான் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்!

Doubt of Common Man
Doubt of Common Man