அலசல்
Published:Updated:

‘தொட்டால் பூ மலரும்’ கவர்ச்சி போட்டோஸ்... கரன்சி மழை... பயங்காட்டும் பலே பிசினஸ்!

பயங்காட்டும் பலே பிசினஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பயங்காட்டும் பலே பிசினஸ்!

நீங்கள் எங்கெங்கோ கொடுக்கும் உங்கள் செல்போன் நம்பர், எப்படியோ அவர்களுக்குக் கிடைத்துவிடுகிறது. அதை வைத்துதான் தூண்டில் போடுவார்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தே வேலை செய்துவருகிறார் அந்த இளைஞர். வாட்ஸ் அப்பில் அவருக்கு ஒரு லிங்க் வருகிறது. க்ளிக் செய்ததும், ‘சேவல்’ என்ற ஒரு வாட்ஸ்அப் குழுவுக்குள் அவரது எண் இணைக்கப்படுகிறது. சில நொடிகளிலேயே அந்தக் குழுவில் இளம்பெண்களின் அரைநிர்வாணப் புகைப்படங்களும், மயக்கும் முக பாவனையுடனான புகைப்படங்களும் சரசரவென வந்துவிழுகின்றன. இவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, ஓர் ஆடியோவும் வருகிறது. ‘‘ஹாய்... என்கூட கிளுகிளுப்பா பேசணும்னா ஒரு மணி நேரத்துக்கு 300 ரூபாய். வீடியோ காலில் பேச ஒரு மணி நேரத்துக்கு 600 ரூபாய்... மத்ததையெல்லாம் அட்மின்ஸ் சொல்வாங்க’’ என்கிறது ஒரு வசீகரமான பெண்குரல். அடுத்ததாக அட்மினின் மெசேஜ், ‘‘ஒண்ணும் பயப்படத் தேவையில்லை. உங்க டீட்டெய்ல்ஸ் எங்கயும் போகாது. நாங்க சொல்ற நம்பருக்கு கூகுள் பே செஞ்சீங்கன்னா போதும்’’ - இப்படித்தான், இந்த ஆபத்தான ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், ‘பெயர் வேண்டாம்’ என்ற வேண்டுகோளோடு நம்மிடம் நடந்ததைப் பகிர்ந்துகொண்டார். ‘பெண்களோட படங்கள், வசீகரமான குரல் உண்டாக்குன ஆசையில நானும் அந்த அக்கவுண்ட்டுக்கு ஒரு 300 ரூபா அனுப்பினேன். பிறகு, வாட்ஸ் அப் காலில் பேசினேன். பத்து நிமிஷம் இருக்கும். என்னைப் பத்தின விவரங்களையெல்லாம் கேட்டுச்சு. செம செக்ஸியான வாய்ஸ். அப்புறம் சட்டுனு கட் ஆகிடுச்சு. மறுபடி கான்டாக்ட் பண்ணினப்ப ‘இன்னொரு வீடியோ கால் வந்தது. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ன்னாங்க. எனக்கும் வீடியோல கூப்பிடற ஆசை வந்துச்சு. சரின்னு மறுபடியும் 600 ரூவா அனுப்பினேன். அப்ப அட்மின் கூப்பிட்டு ‘ஏன் இப்படி காச வேஸ்ட் பண்றீங்க. வீக்லி ஆஃபர் இருக்கு. 2,000 ரூவா கட்டினா ஒரு வாரத்துல 10 வாட்டி போன்ல கூப்பிட்டுப் பேசிக்கலாம். 3,000 ரூவா கட்டினா, 10 வாட்டி வீடியோ கால்ல பேசலாம். இப்ப 900 கட்டிட்டீங்க. அதக்கூடக் கழிச்சுக்கலாம்னார். சபலத்துல நானும் 2100 ரூவா அனுப்பினேன். அடுத்த கொஞ்ச நேரத்துல என் நம்பரை பிளாக் பண்ணி என்னை குரூப்ல இருந்து தூக்கிட்டாங்க. எந்த நம்பருக்குமே கூப்பிட முடியல. இதை எப்படி வெளில சொல்றது, சொன்னா என்னையே தப்பா நினைப்பாங்கன்னு கம்முனு இருந்துட்டேன். என்னைப்போல எத்தனை பேர் ஏமாந்திருக்காங்களோ’’ என்றார் சோகமாக.

நீங்கள் எங்கெங்கோ கொடுக்கும் உங்கள் செல்போன் நம்பர், எப்படியோ அவர்களுக்குக் கிடைத்துவிடுகிறது. அதை வைத்துதான் தூண்டில் போடுவார்கள். சேவல், ஆடுகளம், ரைட் சாய்ஸ், டைம்பாஸ், டபுள் ஓகே, தொட்டால் பூ மலரும், வாசனை ரோசா, ப்ளே கேர்ள்ஸ், இருட்டு அறை என்று பல பெயர்களில் வாட்ஸ்அப், டெலிகிராமில் இந்தக் குழுக்கள் செயல்படுகின்றன. தன் மொபைலுக்கு வரும் லிங்கை க்ளிக் செய்து, இந்த குரூப்பில் இணையும் பத்தில் மூன்று பேராவது இவர்களின் தூண்டிலில் சிக்கிவிடுகிறார்கள். ‘‘கல்யாணமாய்டுச்சா?’’, ‘‘இப்ப என்ன டிரெஸ் போட்டிருக்கீங்க?’’, ‘‘இப்ப தனியாவா இருக்கீங்க?’’, ‘‘நான் பேசறது பிடிச்சிருக்கா?’’ என்று பெண்குரலில் சில டெம்ப்ளேட்டான ரெகார்டு வாய்ஸை வைத்தே இந்தக் கும்பல் பேச்சை ஆரம்பிக்கிறது. குரலைக் கேட்டதும் உண்மை என்று நம்பி பலரும், ‘காசு போனா போகுது... டிரை பண்ணிப் பார்ப்போம்’ என்று சிலரும் பணம் கட்டிவிடுகிறார்கள். பணம் கட்டியவர்களின் பயம்தான் அந்தக் குழுவின் முக்கியமான முதலீடு!

 ‘தொட்டால் பூ மலரும்’ கவர்ச்சி போட்டோஸ்... கரன்சி மழை... பயங்காட்டும் பலே பிசினஸ்!

ஒரு நாளைக்குக் குறைந்தது 40 லிருந்து 50 பேர் வரை இதில் ஏமாறுகிறார்கள். ஆளுக்குச் சராசரியாக 2,000 என்று வைத்துக்கொண்டாலும், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வசூலாகிவிடுகிறது. ஒரு வாரம் குறிப்பிட்ட நம்பர்களில் இப்படி ஏமாற்றுபவர்கள், சட்டென நம்பர்களை யெல்லாம் மாற்றிவிட்டு, வேறு பல எண்களிலிருந்து வேறு பல குழுப்பெயர்களில் மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்கள்.

சைபர் க்ரைம் குற்றப்பிரிவிலிருக்கும் காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ‘‘ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு, சைபர் க்ரைம் குற்றங்களும் உயர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. லாக்டௌனில் வெளியில் செல்ல வழியில்லாத ஒருவித மன அழுத்தத்திலேயே இருக்கும் இளைஞர்கள், இவர்களின் வலையில் எளிதில் விழுந்து விடுகிறார்கள். இவர்கள் எங்கிருந்து இயங்குகிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதில் இருக்கும் சிரமமே இவர்களுக்குப் பெரிய ப்ளஸ்ஸாக இருக்கிறது. முந்நூறு ரூபாயிலிருந்து மூவாயிரம் வரைதான் வசூலிக்கிறார்கள். அதிகபட்சம் ஐயாயிரம். ‘இதைப்போய் எப்படி வெளியே சொல்லிக்கிட்டு’ என்று புகார் கொடுக்கவும் யாரும் முன்வருவதில்லை. வாட்ஸ்அப் குரூப்களில் நடக்கும் இந்த மோசடி குறித்து, சைபர் க்ரைம் பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகப் புகார்கள் கொடுத்தால், சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

எந்தப் புதிய டெக்னாலஜியையும் மோசடிக் கும்பல் தன் ஆதாயத்துக்கு வளைத்துக்கொண்டு வலைவீசத்தான் செய்யும். ஏமாறுபவர்கள் விழித்துக்கொள்ளும்வரை, இவர்களின் ஆட்டம் நிற்கப்போவதில்லை. அனாவசிய லிங்க்குகளைத் தொட்டால் பூ மலராது; பிரச்னைதான் மலரும்!

‘எந்த எல்லைக்கும் செல்வார்கள்!’

இந்த மோசடி கும்பலிடம் பணத்தை இழந்த வழக்கறிஞர் ஒருவர், குரூப் அட்மின்களிடம் சட்டரீதியாக போனில் பேசியிருக்கிறார். அவருடன் குரூப் அட்மின்கள் போனிலேயே குழாயடிச்சண்டை போட்டிருக்கிறார்கள். ஒரு வாரம் இவர் தொடர்ந்து, ‘‘பணத்தை எப்ப தரப்போறீங்க?’’ என்று கேட்கவே, ‘‘எங்களப் பத்தித் தெரியாம டார்ச்சர் பண்ற... நாளைக்குப் பாரு’’ என்று போனை வைத்திருக்கிறார்கள். அடுத்த நாள், அவரது குடும்பத்தினரின் புகைப்படங்களை ஆபாசத் தளங்களில் பகிர்ந்து, இவரது எண்ணையும் பகிர்ந்துவிட்டனர். இவருக்குத் தொடர்ந்து அழைப்புகள் வரவே, அந்த ஆபாசத் தளங்களின் மின்னஞ்சலுக்குச் சட்டரீதியாக மெயில் அனுப்பி, ஒரு வாரச் சிரமத்துக்குப் பிறகு குடும்பத்தினரின் புகைப்படங்களை அந்த சைட்டிலிருந்து எடுக்கவைத்திருக்கிறார். மோசடிக் கும்பலிடம் பாதிக்கப்பட்டவர்கள் சண்டையிட்டால், அவர்கள் எந்த எல்லைக்கும் செல்கிறார்கள் என்கிற பயத்தால், இழந்தவர்கள் அமைதியாக இருந்துவிடுகிறார்கள்!