Published:Updated:

விமான நிலைய கடத்தல் தங்கம் எங்கு இருக்கும்? என்னவாகும்? #DoubtOfCommonMan

கடத்தல் தங்கம்
News
கடத்தல் தங்கம் ( விகடன் )

ஆண்டுக்கு 300 முதல் 400 டன் தங்கம்வரை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வருவதாக உலக தங்கக் கவுன்சில் கூறுகிறது.

Published:Updated:

விமான நிலைய கடத்தல் தங்கம் எங்கு இருக்கும்? என்னவாகும்? #DoubtOfCommonMan

ஆண்டுக்கு 300 முதல் 400 டன் தங்கம்வரை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வருவதாக உலக தங்கக் கவுன்சில் கூறுகிறது.

கடத்தல் தங்கம்
News
கடத்தல் தங்கம் ( விகடன் )
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "சமீபகாலமாக, சுங்க அதிகாரிகளால் வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்திவருபவர்கள் விமானநிலையத்தில் கைது செய்யப்படுகின்றனர். எதனால் இந்தத் தங்கம் இந்தியாவுக்குள் கடத்திவரப்படுகிறது? அப்படிக் கடத்திவருபவர்கள் சுங்கத்துறையால் பிடிபட்டால், அவர்களின்மீது போடப்படும் வழக்கின் தன்மை என்ன? அவ்வாறு பிடிபடும் தங்கத்தினை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்?" என்ற கேள்வியைக் கேட்டிருந்தார் விகடன் வாசகர் கார்த்தி. அதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டக் கட்டுரை இது.
Doubt of common man
Doubt of common man

உலகில் அதிகளவில் தங்கம் நுகர்வு செய்யும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியா, அதிகம் தங்கக் கடத்தல் நடக்கும் நாடுகளில் முதலிடத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. தங்கத்தின் மீதான ஈர்ப்பு நம் மக்களிடையே அதிகம். காதுகுத்து முதல் கல்யாணம் வரை தங்கத்தின் தேவையும் ஆதிக்கமும் அன்றாடம் வாழ்வில்  நிறைந்துள்ளது. 

இறங்கு முகமே காணாமல் ஏறு முகத்துடன் மட்டுமே போய்க் கொண்டிருக்கும் தங்கத்தின் விலை, தங்கத்தின் மீதான முதலீடு நல்ல பலன் கொடுக்கும் என்ற எண்ணமும் மக்களிடையே நிலவி வருகிறது. இது ஒருபுறமிருக்க ஆண்டுக்கு 300 முதல் 400 டன் தங்கம்வரை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வருவதாக உலக தங்கக் கவுன்சில் கூறுகிறது.

மும்பை, சென்னை, திருவனந்தபுரம், மங்களூர், மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலையங்களின் வழியாகவே அதிக கடத்தல்கள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

 கடத்தல் தங்கம் (Representational Image)
கடத்தல் தங்கம் (Representational Image)
விகடன்

கச்சா எண்ணெயைப்போல் தங்கத்தையும் நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிதான் செய்துகொண்டிருக்கிறோம். நமது நாட்டில் தங்கத்துக்கு அதிக அளவில் டிமாண்டு இருப்பதால், அதைக் கடத்திக்கொண்டு வருவதும் அதிகரிக்கிறது.

விமானத்தில் பயணித்த பயணியிடமிருந்து இவ்வளவு ரூபாய் மதிப்புள்ள தங்கம் அல்லது வைரம் சுங்க வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டதென்ற செய்தியை அடிக்கடி பார்த்திருப்போம்.

பொதுவாக, வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாகக் கடத்திக் கொண்டு வரப்படும் பொருள்கள் விமான நிலையத்தில் வைத்து சுங்கவரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப் படுகின்றன, ஆனால், அதன் பிறகு என்ன நடக்கின்றது என்பது பலருக்கும் தெரியாது. இதுகுறித்து மத்திய சுங்கவரித்துறையின் முன்னாள் அதிகாரி நடராஜனைச் சந்தித்துப் பேசினோம். 

"வெளிநாடுகளிலிருந்து தங்கம் மற்றும் இதர உலோகப் பொருள்கள் கடத்திக்கொண்டு வருவது நாளுக்குநாள் அதிகரித்தபடியே இருக்கிறது. அதிகாரிகளும் முழு வீச்சில் செயல்பட்டு பல கடத்தல்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இன்றளவும் செய்திகளில் சுங்கவரி துறை சோதனையில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்றே வெளியாகிறது. ஆனால், அது சரியல்ல. பொதுவாக, விமான நிலையங்களில் சுங்கவரித்துறையின் சோதனையில் சிக்கும் பொருளை அவர்கள் அந்த நேரத்துக்குக் கைப்பற்றுதல் மட்டுமே செய்கின்றனர். கைப்பற்றுதல் வேறு, பறிமுதல் வேறு அதை முதலில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

பொதுவாக, சோதனையில் சட்ட விரோதமாகக் கடத்தி வரப்படும் தங்கம் மற்றும் வைரம் முதலிய பொருள்களைச் சுங்கவரித் துறையினர் முதற்கட்ட நடவடிக்கை பேரில் சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து கைப்பற்றி அவர்களைக் கைது செய்கின்றனர்.

கடத்தல் தங்கம்
கடத்தல் தங்கம்

அதன் பின் கைப்பற்றப்பட்ட அந்தப் பொருள், சுங்கவரித் துறையின் கட்டுப்பாட்டில் வழக்கு முடியும் வரை இருக்கும். சோதனையின்போது மேற்கொள்ளப்படும் கைப்பற்றுதல் நடவடிக்கையும் கைது நடவடிக்கையும் இறுதியானதல்ல. வெளிநாடுகளிலிருந்து அந்தப் பொருளை கடத்திவரும் சம்பந்தப்பட்ட நபரை வெளியே விட்டுவிட்டு பின் கைப்பற்றிய நாளிலிருந்து அடுத்த மூன்று மாதங்களுக்குள் அந்த நபருக்கு, சுங்கவரித்துறை சம்பவம் குறித்து விளக்கி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அந்த நோட்டீஸைப் பெற்றுக்கொண்ட குற்றம்சாட்டப்பட்ட நபர் வழக்குக்கு ஒத்துழைக்க வேண்டும். வழக்கு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு பின் சுங்கவரித்துறையினரும் குற்றம்சாட்டப்பட்ட நபரும் தங்கள் பக்க விளக்கங்களை நீதிமன்றத்தில் வாதிட வேண்டும். இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்துவிட்டு நீதிபதி அளிக்கும் தீர்ப்பின் நோக்கில்தான் முடிவு இருக்கும். 

முறையான சான்றுகள் இல்லாமல் சட்ட விரோதமாகக் கடத்தி வரப்பட்டது நிரூபணமாகும் பட்சத்தில் குற்றவாளிக்குச் சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்கப்படும். அதேபோல் கைப்பற்றப்பட்ட தங்கம், இதன் பின்புதான் முறையாகப் பறிமுதல் செய்யப்பட்டு அரசாங்கத்தின் கஜானாவுக்கு அனுப்பப்படும். 

வெளிநாடுகளிலிருந்து தங்கம், வைரம் முதலிய பொருள்களைக் கொண்டு வருவது தவறில்லை. ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாமலும் சுங்க வரி கட்டப்படாமலும் கொண்டு வரும்போதுதான் அது குற்றமாகிறது. உதாரணத்துக்கு, வெளிநாட்டில் பல வருடங்களாக வேலை புரியும் நபர் ஒருவர், தாய் நாட்டுக்குத் திரும்பும்போது தன் உழைப்பின் மூலம் வாங்கப்பட்ட தங்கம், வைரம் எடுத்து வருவது குற்றமல்ல. ஆனால், தங்கத்துக்கு அந்நிய பணமதிப்பில் முறையாகச் சுங்கவரியைக் கட்டாமல் கொண்டு வருவது குற்றமே. 

சுங்கவரித்துறையினர் சோதனையில் எதிர்பார்ப்பது இரண்டுதான். ஒன்று, முறையாகச் சுங்கவரி கட்டியிருக்க வேண்டும். மற்றொன்று, பொருளுக்கு முறையான ஆவணங்கள் இருக்க வேண்டும். இவை இருந்தால் அது சட்ட விரோதமான செயலாகக் கருதப்பட மாட்டாது. அதேபோல் எடுத்து வரும் பொருளுக்குச் சுங்க வரி செலுத்தி முறையான ஆவணங்கள் வைத்திருந்தாலும்கூட எடுத்து வரும் பொருளை சோதனையின்போது வெளிப்படையாகக் காட்டாமல் மறைப்பதும் குற்றமே. எல்லாக் குற்றங்களுக்குமே சிறை வாசமும், பொருள் பறிமுதலும் நடைமுறையில் சாத்தியமல்ல. குற்றத்தின் தன்மையைப் பொறுத்து தண்டனைகள் மாறுபடும்.

முறையான ஆவணங்கள் இருந்தும், சுங்க வரி கட்டியிருந்தும் சோதனையின்போது மறைத்து வைத்திருந்தால் அதற்கு அபராதம் விதிக்கப்பட்டு பொருள்கள் அந்த நபரிடமே கொடுக்கப்படும். அதற்கு சுங்கவரித்துறை ஆணையருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், கடத்தல் நோக்கத்துடன் சட்ட விரோதமாக மறைத்துக்கொண்டு வந்து சிக்கும் பட்சத்தில் அந்த நபர் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம்  தீர்ப்பளிக்கும். அதுவரை கைப்பற்றப்பட்ட தங்கம், வைரம் முதலிய பொருள்கள் சுங்கவரித்துறையினரிடமே இருக்கும். பின்னாளில் தீர்ப்பு வெளியாகும் தறுவாயில் தீர்ப்புக்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒரு வேலை குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்/வைரம் போன்ற பொருள்கள், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு அந்த நகைகள் அரசால் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாய் அரசு கருவூலத்துக்கு அனுப்பி வைக்கப்படும். சோதனையில் சிக்கிய நபர் குற்றம் புரிந்திருந்தாலும் இல்லை என்றாலும் அதை நிரூபிப்பதற்குக் குறைந்தது ஒரு வருட காலமாகும்" என்றார்.

Doubt of common man
Doubt of common man

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!