அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

ஆத்திரம் தாங்க முடியலை... கொன்னுட்டேன்... ‘பாபநாசம்’ பாணியில் கொலை!

விசாரணை
பிரீமியம் ஸ்டோரி
News
விசாரணை

`கனகாதான் கொலையாளி என்று எப்படி உறுதிசெய்தீர்கள்?’ என்று போலீஸாரிடம் கேட்டோம். “அது பெரிய கதை. கனகாவைப் பார்த்தால், இவர் ஒரு கொலையைச் செய்திருப்பார் என்று யாராலும் நம்ப முடியாது

முசிறி அருகே கணவரைக் கொன்றுவிட்டு நாடகமாடிய பெண், நான்கு மாதங்களுக்குப் பிறகு கைதுசெய்யப்பட்டிருப்பதும், போலீஸாரிடம் அவர் கொடுத்திருக்கும் வாக்குமூலமும் `பகீர் கிளப்பியிருக்கின்றன!

கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் கனகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் இறந்துபோனதால், கூலி வேலைக்குச் சென்று தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளையும் காப்பாற்றிவந்திருக்கிறார். வேலைக்குச் சென்ற இடத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபு என்பவருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. பிரபுவும் மனைவியைப் பிரிந்தவர் என்பதால், இருவரும் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். அதையடுத்து திருச்சி மாவட்டம், முசிறி அய்யம்பாளையம் பகுதியில் செங்கல்சூளையில் இருவரும் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். செங்கல்சூளையை ஒட்டியே காவிரி ஆற்றுப்படுகையில் சிறிய ஆஸ்பெஸ்டாஸ் வீடு அமைத்து குழந்தைகளுடன் வசித்திருக்கின்றனர்.

ஆத்திரம் தாங்க முடியலை... கொன்னுட்டேன்... ‘பாபநாசம்’ பாணியில் கொலை!

இந்த நிலையில், பிரபு திடீரென மாயமானார். ‘மகனிடமிருந்து எந்த போனும் வரவில்லையே?’ என பிரபுவின் தந்தை ஆறுமுகம், கனகாவிடம் விசாரித்திருக்கிறார். ‘குடிபோதையில் என்னிடம் பிரச்னை செய்துவிட்டு, எங்கேயோ அவர் போய்விட்டார்’ என்று பதில் சொல்லியிருக்கிறார் கனகா. நாளாக நாளாக ஆறுமுகத்துக்குச் சந்தேகம் தட்ட, கனகாவின் பதில்களும் செயல்களும் முன்னுக்குப் பின் முரணாக இருந்திருக்கின்றன. இதனால், மகன் மாயமானது குறித்து கடந்த வாரம் முசிறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த ஆறுமுகம், கனகாமீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். பிரபு காணாமல்போன அதே காலகட்டத்தில், கனகாவின் வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் ஆற்றங்கரையிலிருந்து முகம் சிதைந்த ஆண் பிணம் ஒன்றைக் கைப்பற்றியதும், ‘மேன் மிஸ்ஸிங்’ குறித்தான வழக்குகள் பதியப்படாததால், `அநாதைப் பிணம்’ என அதைத் தாங்களே அடக்கம் செய்ததும் போலீஸாருக்குச் சட்டென நினைவுக்கு வந்திருக்கிறது.

உடனே கனகாவை அழைத்து போலீஸார் விசாரிக்க, ‘அப்படியா... அவர் இறந்துவிட்டாரா?’ என்று போலியாக அதிர்ச்சியடைந்திருக்கிறார். ‘குடிபோதையில் போனவர், ஆற்றில் விழுந்துவிட்டார்போல’ என்றும் நாடகமாடியிருக்கிறார். போலீஸார் துருவித் துருவி விசாரிக்க அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாமல், கணவரைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

`கனகாதான் கொலையாளி என்று எப்படி உறுதிசெய்தீர்கள்?’ என்று போலீஸாரிடம் கேட்டோம். “அது பெரிய கதை. கனகாவைப் பார்த்தால், இவர் ஒரு கொலையைச் செய்திருப்பார் என்று யாராலும் நம்ப முடியாது. அப்படியோர் அப்பாவி முகம். நடிப்பிலும் ‘பாபநாசம்’ கமல்ஹாசனை மிஞ்சுகிறார். கொடுமை என்னவென்றால், பிரபுவை வெட்டிக் கொலை செய்த அரிவாளைத் தொடர்ந்து சமையலுக்குப் பயன்படுத்திவந்திருக்கிறார் கனகா.

கொலையான பிரபு, தன்னுடைய முதல் மனைவி சந்திராவின் பெயரை மார்பிலும், சில இனிஷியல்களைக் கையிலும் பச்சை குத்தியிருந்திருக்கிறார். பிரபுவின் தந்தை ஆறுமுகம் சொன்ன இந்த அடையாளம்தான், நான்கு மாதங்களுக்கு முன்பு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது பிரபு என்பதை உறுதிப்படுத்த உதவியது. இதனால் ஒரு கட்டத்துக்கு மேல் கனகாவால் உண்மையை மறைக்க முடியவில்லை.

மது போதைக்கு அடிமையான பிரபு, மகள்களாக நடத்தவேண்டிய தன் மூன்று பெண் குழந்தைகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், பலமுறை கண்டித்தும் பிரபு திருந்தவில்லை என்றும் சொல்லி அழுதார் கனகா. ‘கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் தனியே இருந்த குழந்தைக்கு பிரபு பாலியல் தொல்லை கொடுத்ததை நேரில் பார்த்துவிட்டேன். தடுத்தும் அவர் கேட்காததால், அரிவாளை எடுத்து வெட்டினேன். குற்றுயிராகத் துடித்த அவரைக் கட்டையால் அடித்துக் கொன்றேன். சடலத்தை இழுத்துக்கொண்டுபோய் காவிரி ஆற்றில் போட்டுவிட்டு எதுவும் நடக்காததுபோல இயல்பாக இருந்தேன்’ என்றார். பிரபுவின் தந்தை மட்டும் புகார் செய்யவில்லையென்றால், இப்படியொரு கொலை நடந்ததே வெளியில் தெரிந்திருக்காது. அடுத்து, கொலை செய்த தடயத்தை கனகா மறைக்கும்போது, அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அதைப் பார்த்திருக்கிறார். அதைச் சொல்லி மிரட்டியே அவரிடம் சில ஆதாயங்களையும் அவர் பெற்றிருக்கிறார். அதுகுறித்தும் விசாரணை நடக்கிறது” என்றனர்.

ஆத்திரம் தாங்க முடியலை... கொன்னுட்டேன்... ‘பாபநாசம்’ பாணியில் கொலை!

முசிறி இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் பேசினோம். “பிரபு மீது ஏற்கெனவே விழுப்புரத்தில் சில வழக்குகள் இருக்கின்றன. கனகாவின் குழந்தைகள் மூன்று பேரும் பிரபுவிடம் ‘அப்பா… அப்பா...’ என்றே பாசமாக இருந்திருக்கிறார்கள். ஆனால், போதை தலைக்கேறினால் பிரபுவின் செயல்பாடுகள் மிருகம்போல மாறியிருக்கின்றன. சம்பவத்தன்றுகூட ‘ச்சீ… மகளுங்கக்கிட்டயே இப்படி நடந்துக்குறியே?’ என்று கனகா கேட்டிருக்கிறார். ‘அதுங்க ஒண்ணும் நாம பெத்தது இல்லையே’ என்றிருக்கிறான் பிரபு. ‘அதான், ஆத்திரம் தாங்க முடியல... கொன்னுட்டேன்’ என்று சொல்லும் கனகா, பிரபுவைக் கொன்று சடலத்தை ஆற்றில் வீசியிருக்கிறார். மறுநாள் காலை ஆற்றோரமாகச் சென்று நோட்டம்விட்டிருக்கிறார் கனகா. அப்போது, வீட்டிலிருந்து 100 மீட்டர் தூரத்திலேயே செடிகளில் சிக்கியபடி பிரபுவின் சடலம் கிடந்திருக்கிறது. அதைக் கண்டு அதிர்ந்துபோன கனகா, அங்கிருந்து சடலத்தை மீண்டும் ஆற்றில் தள்ளிவிட்டிருக்கிறார். கனகா சிறைக்குச் சென்றிருப்பதால், அவரின் குழந்தைகள் மூவரையும் காப்பகத்தில் சேர்த்திருக்கிறோம்” என்றார்.

தமிழ்நாட்டில் நடக்கும் பாதிக் குற்றங்களின் பின்னணியில் மது இருக்கிறது. அந்தப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த அரசுக்கு மனது இருக்கிறதா?!