Published:Updated:

3-வது திருமணத்துக்கு பெண் தேடி அப்ளிகேஷன்! - நடுரோட்டில் கணவரைப் பின்னியெடுத்த 2 மனைவிகள்

கணவனுக்கு விழுந்த அடி
News
கணவனுக்கு விழுந்த அடி

கோவை சூலூரில், மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னனுக்கு, முதல் இரண்டு மனைவிகள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Published:Updated:

3-வது திருமணத்துக்கு பெண் தேடி அப்ளிகேஷன்! - நடுரோட்டில் கணவரைப் பின்னியெடுத்த 2 மனைவிகள்

கோவை சூலூரில், மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னனுக்கு, முதல் இரண்டு மனைவிகள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கணவனுக்கு விழுந்த அடி
News
கணவனுக்கு விழுந்த அடி

கோவை மாவட்டம் சூலூர், நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் தினேஷ் ( 26). இவர், ராசிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். இவருக்கும் திருப்பூர் கணபதி பாளையத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகள் பிரியதர்ஷினி-க்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணமான 15 நாள்களிலேயே, அரவிந்த் தனது மனைவியை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். அவர் உடலில் கைகளால் கீரியும் வயிற்றில் உதைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பிரியதர்ஷினி தனது மாமனார் மாமியாரிடம் சொன்னபோது, 'அவன் அப்படித்தான் அடிப்பான்' என்று கூறியுள்ளனர்.

முதல் மனைவியுடன் அரவிந்த் தினேஷ்
முதல் மனைவியுடன் அரவிந்த் தினேஷ்

இதையடுத்து, பிரியதர்ஷினி சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவர் தற்போது திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அரவிந்த், கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரது மகள் அனுபிரியாவை ( 23) கடந்த ஏப்ரல் 10-ம் தேதி இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். அனுப்பிரியாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. அதைத் தெரிந்தே திருமணம் செய்து கொண்ட அரவிந்த், முதல் மனைவி இருப்பதை மறைத்துவிட்டார்.

இரண்டாவது மனைவியுடன்
இரண்டாவது மனைவியுடன்

ஆனால், முதல் மனைவியை கொடுமைப்படுத்தியது போன்றே அனுபிரியாவையும் கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும், அவரது குழந்தைக்குச் சூடுவைத்து சித்ரவதை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால், இவரது தொல்லை தாங்க முடியாமல், தனது தாயார் வீட்டுக்குச் சென்றுவிட்டார் அனுபிரியா.

இந்நிலையில், மீண்டும் கல்யாண வலைதளத்தில் மணமகள் தேடி விண்ணப்பித்துள்ளார் அரவிந்த். முதல் மனைவி பிரியதர்ஷினி குடும்பத்தினரும் இரண்டாவது மனைவி அனுபிரியா குடும்பத்தினரும் இதுகுறித்துக் கேட்டபோது, `அப்படித்தான் செய்வேன். உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, பிரியதர்ஷினி மற்றும் அனுபிரியா ஆகியோர் சூலூர் வந்து, அரவிந்த்தின் தந்தை சௌந்தர்ராஜை அழைத்துக் கொண்டு, அவர் பணியாற்றிவரும் தொழிற்சாலைக்குச் சென்றுள்ளனர். ஆனால், கம்பெனி நிர்வாகம் அரவிந்த்தை வெளியில் அனுப்ப மறுத்துவிட்டது. இதையடுத்து, இருவரும் அங்கேயே தர்ணாவில் ஈடுபட்டனர்.

பிரியதர்ஷினி, அனுபிரியா
பிரியதர்ஷினி, அனுபிரியா

இதையடுத்து, சூலூர் போலீஸார் அங்கு சென்று, அரவிந்த் மற்றும் அவரது இரண்டு மனைவிகளையும் சூலூர் காவல் நிலையத்துக்கு வருமாறு கூறிவிட்டுச் சென்றுவிட்டனர். அப்போது, கம்பெனியில் இருந்து வெளியே வந்த அரவிந்த்தை இரண்டு மனைவிகளின் குடும்பத்தினரும் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

சம்பவ இடத்துக்கு மீண்டும் வந்த போலீஸார், அவர்கள் மூன்று பேரையும் சூலூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து, பிரியதர்ஷினியும் அனுபிரியாவும், அரவிந்த் மீது போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.