சத்தீஸ்கர் மாநிலம், ஜஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கர் ராம். இவருக்கு ஆஷா பாய் எனும் மனைவி இருந்தார். இந்த நிலையில், இருவரும் கடந்த திங்கள் இரவு மது அருந்திவிட்டு உறங்குவதற்குச் சென்றிருக்கின்றனர். அப்போது சங்கர் ராம் மனைவியைத் தாம்பத்யத்துக்கு அழைத்திருக்கிறார். மனைவி இதற்கு மறுத்ததாகத் தெரிகிறது.
இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதன் இறுதியில் மனைவி ஆஷா பாய் வீட்டின் பின்புறம் இருக்கும் கிணற்றில் குதித்து, தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதை எதிர்பார்க்காத சங்கர் ராம் கிணற்றில் குதித்து மனைவியைக் காப்பாற்றியிருக்கிறார். ஆனால், அதன் பிறகும் இருவருக்குமிடையே சண்டை நீடித்திருக்கிறது.

இதனால், ஆத்திரமடைந்த சங்கர் ராம், ஆஷாவின் அந்தரங்க உறுப்பில் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். இதனால், ஆஷா பாய் பரிதாபமாக இறந்தார். மனைவி இறந்த பிறகு சங்கர் ராம் இரவு முழுவதும் மனைவியின் உடல் அருகே அமர்ந்திருக்கிறார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சங்கர் ராமைக் கைதுசெய்திருக்கின்றனர். ஆஷா பாயின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர். மேலும், இந்தக் கொலைச் சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.