ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியரின் மகன் மோகன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). மோகன் ஈரோட்டிலுள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துவந்தார். இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற மோகன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அவரின் பெற்றோர் ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர்.
புகாரளித்து 10 நாள்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், காவல்துறை தரப்பிலிருந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில் ஈரோட்டில் கஞ்சா, போதை ஊசி, மாத்திரை விற்பனையை முற்றிலுமாகத் தடுக்கக் கோரியும், தன்னுடைய மகனை விரைவாக மீட்டுத் தரக் கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, மாணவரின் தாயார் இன்று சாலை மறியலில் ஈடுபட்டார்.

இது குறித்து நம்மிடம் பேசிய அவர், "என் மகன் படிக்கும் தனியார் கல்லூரியிலிருந்து, கடந்த 15-ம் தேதி எனக்கு போன் வந்தது. என்னைத் தொடர்புகொண்டவர்கள், `கடந்த நான்கு நாள்களாக உங்கள் மகன் கல்லூரிக்கு வரவில்லை' என்று தெரிவித்தனர். அவன் ஏன் கல்லூரிக்குச் செல்லவில்லை எனக் கேட்பதற்காக, அவனைத் தொடர்புகொண்டேன். ஆனால் அவனுடைய மொபைல் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இன்றுவரை அவனை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்த நிலையில், காவல் நிலையத்தில் புகாரளித்தேன். அவர்களும் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். கல்லூரியிலிருந்து ஏற்கெனவே ஒருமுறை எங்களை அழைத்து, எங்கள் மகன் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர். பெற்றோர்கள் கண்காணிப்பு இல்லாததால் படிப்புக்காக வெளியூர்களில், அறை எடுத்துத் தங்கிப் படிக்கும் மாணவர்கள்தான், பெரும்பாலும் இது போன்ற போதைப் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர்.

ஈரோட்டில் மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா, போதை ஊசி, மாத்திரை விற்பனை எந்தத் தடையுமின்றி நடக்கிறது. என் மகனைப் பார்த்ததாகச் சொல்லும் இடங்களுக்குச் சென்று பார்த்தால், அங்கிருக்கும் மாணவர்கள், இளைஞர்கள் சொல்ல முடியாத அளவிலான போதையில் கிடக்கின்றனர். ஈரோட்டில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கவும், காணமால்போன என் மகனைக் கண்டுபிடித்துத் தரக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டேன்" என்றார்.
பின்னர், அவரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய போலீஸார், "போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறோம். போதைப்பொருள் விற்பனையாளர்களும், புதிய புதிய உக்திகளைப் பயன்படுத்தி வருகின்றனர். காணாமல்போன மோகனின் மொபைல் சுவிட்ச் ஆஃப்பில் இருக்கிறது. விரைவில் அவரைக் கண்டுபிடித்துவிடுவோம்" என்றனர்.