கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள போவிக்கானம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(36). இவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இவருக்கும் காசர்கோடு அருகேயுள்ள ஊதுமாபாறைப் பகுதியைச் சேர்ந்த தேவிகா(34) என்பவருக்கும் சில ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு இருந்துவந்திருக்கிறது. தேவிகா பியூட்டிஷனாக இருந்துவந்தார். அவருக்கு வேறொருவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவரின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். சதீஷும், தேவிகாவும் அவ்வப்போது தனியாகச் சந்தித்து நெருக்கமாக இருந்துவந்திருக்கின்றனர். இந்த நிலையில், தேவிகாவுடனான தொடர்பு சதீஷின் மனைவிக்கு தெரியவந்திருக்கிறது. இதனால் அவரின் வீட்டில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், தேவிகா அவ்வப்போது சதீஷைத் தனிமையில் சந்திக்க விரும்பியிருக்கிறார். இதற்கிடையே, சதீஷைத் திருமணம் செய்துகொள்ள வலியுறுத்திவந்திருக்கிறார் தேவிகா. திருமணம் மீறிய தொடர்பு தனது குடும்பத்தில் பிரச்னையைக் கிளப்பிய அதே சமயம், திருமணம் செய்ய வலியுறுத்தி நெருக்கடி கொடுத்த தேவிகாவால் கடும் குழப்பத்துக்கு ஆளாகியிருக்கிறார் சதீஷ். ஒருகட்டத்தில் தேவிகாவால்தான் தனக்குப் பிரச்னை என நினைத்து அவரைக் கொலைசெய்ய சதீஷ் திட்டமிட்டிருக்கிறார்.
அதன்படி காஞ்சாங்காடு பகுதியிலுள்ள ஒரு லாட்ஜில் தனிமையில் சந்திக்கலாம் என தேவிகாவை அழைத்திருக்கிறார் சதீஷ். லாட்ஜ் அறையில் சதீஷ், தேவிகா ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தன்னைவிட்டுப் பிரிந்து செல்லும்படி சதீஷ் கூறியிருக்கிறார். ஆனால், `மனைவியை விவகாரத்து செய்துவிட்டு என்னைத் திருமணம் செய்துகொள்' என தேவிகா கூறியதாகத் தெரிகிறது. இதனால் வாக்குவாதம் செய்த சதீஷ் மறைத்துவைத்திருந்த அரிவாளால் தேவிகாவின் கழுத்தில் வெட்டிக் கொலைசெய்திருக்கிறார்.

தேவிகாவைக் கொலைசெய்த பின்னர், சதீஷ் லாட்ஜ் அறையை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு ஹோஸ்துர்க் காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார். போலீஸார் சதீஷைக் கைது செய்ததுடன் லாட்ஜ் அறைக்குச் சென்று தேவிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில், "சதீஷ் செக்யூரிட்டி சர்வீஸ் நடத்திவருகிறார். தனது திருமணத்துக்கு முன்பே தேவிகாவுடன் நெருக்கத்தில் இருந்திருக்கிறார். பியூட்டிசியன்களின் மீட்டிங் ஒன்றில் இருந்த தேவிகாவை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று கொலைசெய்திருக்கிறார் சதீஷ். மனைவியை விவகாரத்து செய்துவிட்டுத் தன்னைத் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியதால், தேவிகாவைக் கொலைசெய்ததாக சதீஷ் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" எனத் தெரிவித்தனர்.