பட்டுக்கோட்டை அருகே தெருக்களில் கிடந்த பாட்டில், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்களைச் சேகரித்த பழங்குடியினப் பெண்கள் இரண்டு பேரை, தி.மு.க பிரமுகர் ஒருவர் செருப்பால் அடித்து விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலீஸார் அவரை உடனடியாகக் கைதுசெய்தனர்.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள துறவிக்காடு எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் பழங்குடியினப் பெண்கள் இரண்டு பேர், குறிச்சி மாரியம்மன் கோயில் பகுதியில் தெருக்களில் கிடந்த வேஸ்ட் பிளாஸ்டிக் பொருள்கள், பாட்டில் உள்ளிட்டவற்றைச் சேகரித்துக்கொண்டிருந்தனர். அப்போது குறிச்சி, ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகரான சுவாமிநாதன்(56) என்பவர் அந்த இடத்துக்கு வந்தார். இவரின் மனைவி தீபாலெட்சுமி தி.மு.க-வில் பேராவூரணி ஒன்றிய மகளிரணி அமைப்பாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பழங்குடியினப் பெண்கள் பெரிய சாக்கில் வேஸ்ட் பொருள்களைச் சேகரித்துவைத்திருந்தனர். தன்னுடைய இடத்திலிருந்து பொருள்களைத் திருடிச் செல்வதாகக் கூறி, அந்த சாக்கைப் பிடுங்கிய சுவாமிநாதன் அதிலிருந்த பொருள்களைக் கீழே கொட்டினார். இதையடுத்து, `ஓடுங்க, ஓடுங்க’ எனச் சொல்லிக்கொண்டே காலில் அணிந்திருந்த செருப்பைக் கழட்டி பழங்குடியினப் பெண் முதுகில் செருப்பால் ஓங்கி அடித்தார்.

அதில் ஒரு பெண் இடுப்பில் குழந்தை வைத்திருந்தார். அவர்கள் `நாங்கள் எதையாச்சும் எடுத்திருந்தால் அடிக்கலாம், குப்பையைத்தான் எடுத்தோம் அதுக்கு முதுகிலேயே செருப்பால் அடிக்கிறார்' என அழுதுகொண்டே இரண்டு பெண்களும் ஓடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சுவாமிநாதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார், சுவாமிநாதனைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பழங்குடியினப் பெண்களிடம் பேசினோம், ``தெருக்களில் கிடப்பதைப் பொறுக்கி அதைப் பழைய இரும்புக்கடையில் போடுவோம்.

அதில் கிடைக்கும் பணத்தில் அரிசி, காய்கறி வாங்கிச் சென்று மாலை வேளையில் சோறாக்கிச் சாப்பிடுவோம். இப்படித்தான் எங்களுக்கு ஒவ்வொரு நாள் வயித்துப் பொழப்பு நடக்கிறது. நாங்கள் வேறு எதையும் எடுக்காதபோது, எங்களைத் திட்டி செருப்பால் அடித்து விரட்டிய சுவாமிநாதன் செயலை வாழ்நாள் முழுக்க எங்களால் மறக்க முடியாது'' என்றனர்.