‘13 கி.மீ காரில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண்...’ - புத்தாண்டு அன்று தலைநகரில் நடந்த கொடூரம்!

விபத்து நடந்தது எங்களுக்குத் தெரியும். ஆனால், நாங்கள் அப்போது குடித்திருந்தோம். அதனால், பயத்தில் நிறுத்தாமல் சென்றுவிட்டோம்.
புத்தாண்டு அன்று தலைநகர் டெல்லியில் கார் விபத்து ஒன்றில் சிக்கிய இளம்பெண்ணின் உடல், ஏறத்தாழ 13 கி.மீ தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி, நாட்டையே அதிர்வுக்குள்ளாக்கின.
ஜனவரி 1 அதிகாலை 2:22 மணியளவில் டெல்லி போலீஸாருக்கு சுல்தான்புரி அருகே விபத்து ஏற்பட்டதாக ஓர் அழைப்பு வந்தது. மீண்டும் 3:24 மணியளவில் வேறொரு பகுதியிலிருந்து, காரில் யாரோ இழுத்துச் செல்லப்படுவதாக அழைப்பு வந்திருக்கிறது. மூன்றாவதாக 4:11 மணியளவில் வந்த அழைப்பில், இளம்பெண் ஒருவரின் உடல் ஜோன்ட்டி (Jonty) கிராமம் அருகில் சாலையில் கிடப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அந்த இடத்துக்கு விரைந்த போலீஸார், அங்கு உடல் சிதைந்து அரை நிர்வாணமாகக் கிடந்த அஞ்சலி சிங் என்ற 20 வயதான இளம்பெண்ணின் உடலை மீட்டெடுத்திருக்கிறார்கள்.

புத்தாண்டில் நிகழ்ந்த சோகம்!
புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டு, அதிகாலை 2 மணிக்கு ஹோட்டல் ஒன்றிலிருந்து ஸ்கூட்டியில் கிளம்பியிருக்கிறார் அஞ்சலி சிங். டெல்லி சுல்தான்புரி பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த கார் ஒன்று அவரின் ஸ்கூட்டியில் மோதிவிட்டு நிற்காமல் சென்றிருக்கிறது. இந்த விபத்தில் காருக்கு அடியில் மாட்டிக்கொண்ட அஞ்சலி சிங், சுமார் 13 கி.மீ தூரம் சாலையில் ரத்த வெள்ளத்துடன் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
இதையடுத்து அஞ்சலி சிங்கின் குடும்பத்தினரும் நண்பர்களும் மருத்துவமனைக்கு வெளியே, `கொலையாளிகளைத் தூக்கிலிடுங்கள்’ என்று போராட்டம் நடத்தத் தொடங்கினார்கள்.
இந்த விவகாரம் குறித்த செய்திகள் ஊடகங்களில் பெரிதாக விவாதிக்கப்பட்டபோது, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர், `விபத்து ஏற்படுத்தி அஞ்சலியைக் கொன்ற கொலையாளிகள் பா.ஜ.க-வுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இதனால், அவர்களைக் கைதுசெய்ய மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் டெல்லி போலீஸ் தயங்குகிறது’ என்று குற்றம்சாட்டினார்கள். தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் களமிறங்க, விபத்து ஏற்படுத்திய கார் ட்ராக் செய்யப்பட்டு, அதில் பயணம் செய்த ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
பா.ஜ.க நிர்வாகி மிட்டல்!
கைதுசெய்யப்பட்டவர்களிடம் நடந்த விசாரணையில், ``விபத்து நடந்தது எங்களுக்குத் தெரியும். ஆனால், நாங்கள் அப்போது குடித்திருந்தோம். அதனால், பயத்தில் நிறுத்தாமல் சென்றுவிட்டோம். அந்தப் பெண் காருக்கு அடியில் சிக்கியிருந்தார் என்பது எங்களுக்கு ஜோன்ட்டி கிராமம் அருகே வந்தபோதுதான் தெரிந்தது. அதன் பிறகு, அவரின் உடலை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பிவிட்டோம்’’ என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரான மனோஜ் மிட்டல் என்பவர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் என்று சொல்லப்பட்ட நிலையில், அவரின் படம் இடம்பெற்றிருக்கும் பா.ஜ.க-வினரின் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின. மேலும், அஞ்சலி சிங்கின் தோழி நிதி என்பவரும் அவருடன் விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.
பாலியல் வன்கொடுமை சந்தேகம்!
இந்த நிலையில் அஞ்சலி சிங்கின் குடும்பத்தினர், ``அஞ்சலியின் உடலை நாங்கள் முதன்முதலில் பார்த்தபோது அவள் நிர்வாணமாக இருந்தாள். எனவே, அஞ்சலிக்குப் பாலியல் வன்கொடுமை நடந்திருக்கலாம்” என்று சந்தேகம் கிளப்பினர். ஆனால், பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான தடயங்கள் இல்லை என்றனர் மருத்துவர்கள். இதற்கிடையில், புத்தாண்டு கொண்டாட்டம் நடந்த ஹோட்டலிலிருந்து கிளம்பும் முன்பு அஞ்சலி சிங்கும், அவரின் தோழி நிதியும் சண்டையிட்டுக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின.
இது தொடர்பாக நிதியிடம் நடத்திய விசாரணையில், ``அஞ்சலி அப்போது மது போதையிலிருந்தார். அதனால், `நீ வண்டி ஓட்டக் கூடாது’ என்றேன். இதனால் எங்களுக்குள் சண்டை மூண்டது. என் பேச்சையும் மீறி அவரே வண்டியை ஓட்டினார். கார் மோதியபோது நான் பக்கவாட்டில் விழுந்துவிட்டேன். அஞ்சலி காரின் முன்னால் விழுந்துவிட்டார். அது தெரிந்தும் காரிலிருந்தவர்கள் அவள்மீது சக்கரங்களை முன்னும் பின்னும் ஏற்றினார்கள். அதனால்தான் அவள் உடல் காரில் சிக்கியது. அவள் வலியால் அலறிக் கூச்சலிட்டாள். நான் பயந்து நடுங்கி, என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டுக்கு வந்துவிட்டேன். இது பற்றி யாரிடமும் சொல்லவில்லை” என்றிருக்கிறார்.

`நிதி சொல்வது பொய்!’
தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி, ``தன் தோழி விபத்தில் சிக்கியதைப் பார்த்தும் அவருக்கு உதவாமல் வீட்டுக்குச் சென்ற நிதியின் வார்த்தைகளை எப்படி நம்புவது?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். மேலும், அஞ்சலி சிங்கின் குடும்ப மருத்துவர், ``அஞ்சலி மது போதையில் இல்லை என்பது உடற்கூறாய்வு அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது’’ என்று மறுத்திருக்கிறார்.
மேலும், பெரிய காயங்கள் ஏதும் ஏற்படாத நிதி, வேகமாக அவர் வீட்டுக்குள் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின.
இதையொட்டி அஞ்சலியின் குடும்பத்தினர், ``நிதி சொல்வது அனைத்தும் பொய். முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளிக்கிறார். எங்கள் மகளுக்கு நடந்த கொடூரத்துக்கும் நிதிக்கும் சம்பந்தம் இருக்குமோ என்று சந்தேகம் எழுகிறது. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
பியூட்டீஷியனான அஞ்சலிதான், அவரின் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர். சொந்தமாக பியூட்டி பார்லர் வைக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்தவருக்கு புத்தாண்டு அன்று இந்தக் கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக டெல்லி முழுவதும் 18,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியிலிருந்தபோது, இப்படியான ஒரு சம்பவம் நடந்தது பேரதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. மேலும் இந்தச் சம்பவம், மத்திய அரசின்கீழ் இயங்கும் டெல்லி போலீஸின் திறனை மீண்டுமொரு முறை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது!